Published : 15 Jul 2025 12:22 AM
Last Updated : 15 Jul 2025 12:22 AM
சென்னை: எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான அகில இந்திய கலந்தாய்வு ஜூலை 21-ம் தேதி ஆன்லைனில் தொடங்குகிறது.
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு 2025-26-ம் கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஆன்லைனில் வரும் 21-ம் தேதி தொடங்குகிறது.
இதுகுறித்து மருத்துவ கலந்தாய்வு குழு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான முதல் சுற்று கலந்தாய்வு https://mcc.nic.in என்ற இணையதளத்தில் ஜூலை 21-ம் தேதி தொடங்குகிறது.
நீட் தேர்வில் தகுதி பெற்ற மாணவ, மாணவிகள் இந்த இணையதளத்தில் வரும் 21-ம் தேதி முதல் 28-ம் தேதி நண்பகல் 12 மணிக்குள் பதிவு செய்யவேண்டும். 28-ம் தேதி பிற்பகல் 3 மணி வரை கட்டணம் செலுத்தலாம். 22-ம் தேதி முதல் 28-ம் தேதி நள்ளிரவு 11.55 மணி வரை இடங்களை தேர்வு செய்யலாம்.
தரவரிசை பட்டியல் அடிப்படையில் 29, 30-ம் தேதிகளில் கல்லூரிகளில் இடங்கள் ஒதுக்கப்படும். அதன் விவரங்கள் 31-ம் தேதி வெளியிடப்படும். டஒதுக்கீடு பெற்ற கல்லூரிகளில் ஆகஸ்ட் 1 முதல் 6-ம் தேதிக்குள் சேர வேண்டும். சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் ஆகஸ்ட் 7, 8-ம் தேதிகளில் நடைபெறும்.
2-ம் சுற்று கலந்தாய்வு ஆகஸ்ட் 12-ம் தேதியும், 3-ம் சுற்று கலந்தாய்வு செப்டம்பர் 3-ம் தேதியும் தொடங்கும். 3 சுற்று கலந்தாய்வு முடிவில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு செப்டம்பர் 22-ம் தேதி தொடங்கும்.
புனே ராணுவ கல்லூரியில் உள்ள பிஎஸ்சி நர்சிங் படிப்புக்கு நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுவதால், அந்த இடங்களுக்கும் மேற்கண்ட தேதிகளில் கலந்தாய்வு நடைபெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மாநில கலந்தாய்வு: தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரிகளில் இருக்கும் எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களில் 15 சதவீதம் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்படுகிறது. மீதமுள்ள 85 சதவீத இடங்கள், தனியார் மருத்துவ கல்லூரிகளில் உள்ள அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு இந்த மாதம் இறுதியில் தொடங்கவுள்ளது.
மொத்தமுள்ள 11,350 மருத்துவ இடங்களுக்கு நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற 62 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பதாரர்களின் நீட் மதிப்பெண்களை மத்திய அரசிடமிருந்து பெற்று அதன் அடிப்படையில் தரவரிசை பட்டியல் தயாரிக்கப்படுகிறது. விரைவில் தரவரிசை பட்டியல் வெளியிடப்படவுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT