Published : 12 Jul 2025 05:40 PM
Last Updated : 12 Jul 2025 05:40 PM
சென்னை: மாணவர்களுக்கு சரிசமமான கற்றலை உறுதிசெய்யும் விதமாக பள்ளிகளில் ‘ப’ வடிவில் வகுப்பறைகள் அமைக்க வேண்டுமென பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் ச.கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: வகுப்பறையில் வசதியான இருக்கை ஏற்பாடு கற்றலை மேம்படுத்துவதிலும், மாணவர்களை ஆசிரியர் நன்கு தொடர்பு கொண்டு உரையாடவதிலும் முக்கியப் பங்காற்றுகிறது. இதை கருத்தில் கொண்டு அமைச்சர் அன்பில் மகேஸ் பள்ளிகளில் ‘ப’ வடிவ இருக்கை வசதியை ஏற்படுத்த அறிவுறுத்தியுள்ளார்.
இந்த அமைப்பில் ஒவ்வொரு மாணவரும் ஆசிரியர் மற்றும் கரும்பலகையை தெளிவாகப் பார்க்க முடியும். வகுப்பறையில் உள்ள அனைத்து மாணவர்களையும் ஆசிரியர்கள் எளிதில் தொடர்பு கொள்ள இயலும். மேலும், மாணவர்களின் செயல்பாடுகளை ஆசிரியர்கள் துல்லியமாக கண்காணிக்க முடியும்.
இதுதவிர கலந்துரையாடல்கள், கேள்வி பதில் அமர்வுகள், கருத்துகளை பகிர்ந்து கொள்ளுதல் ஆகியவற்றுக்கு ப வடிவ இருக்கை வசதி சமவாய்ப்பை வழங்குகிறது. அதேபோல் தொழில்நுட்ப செயல்முறை விளக்கங்கள், குழு விவாதங்களுக்கும் இந்த முறை மிகவும் உகந்ததாகஇருக்கும்.
மாற்றுத்திறன் மாணவர்களுக்கு சற்று வசதியாக அமையும். இந்த இருக்கை வசதியின்படி ஒவ்வொரு மாணவரும் முன்புற வரிசையில் இருப்பார்கள். இதன்மூலம் ஆசிரியர் பாடம் நடத்தும்போது வகுப்பில் உள்ள எவரும் மறைக்கப்படாமல் சிறந்த கற்றல் நடைபெறுவதை உறுதி செய்ய முடியும். குறிப்பாக ஆசிரியரின் நேரடிக் கண்காணிப்பில் இருப்பதால் மாணவர்களுக்கு கற்றலில் கவனச் சிதறல் ஏற்படாது.
பொதுவாக பாடப்பொருள் தொடர்பாக ஆசியர்களிடம் சந்தேகங்கள் எழுப்பவும், கருத்து பரிமாற்றம் செய்வும் சில மாணவர்கள் தயங்குவது வழக்கம். இதுபோன்ற மாணவர்கள் இனி எவ்வித தயக்கமும் இல்லாமல் அச்சமின்றி கற்றலில் ஆர்வத்துடன் பங்கேற்க முடியும். எனவே, அனைத்து முதன்மை, மாவட்டக்கல்வி அலுவலர்களும் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள தலைமை ஆசிரியர்களுக்கு மாணவர்களின் எண்ணிக்கை மற்றும் வகுப்பறையின் அளவைப் பொருத்து இந்த ப வடிவ இருக்கை வசதியைச் செய்ய அறிவுறுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே சமீபத்தில் கேரளாவில் வெளியான ஸ்தானார்த்தி ஸ்ரீகுட்டன் எனும் படத்தில் பள்ளி வகுப்பறையில் அரைவட்ட வடிவில் இருக்கைகள் போடப்பட்டு ஆசிரியர்கள் பாடம் நடத்த வேண்டும் என்ற கருத்து வலியுறுத்தப்பட்டது. பெரும் வரவேற்பை இந்த நடைமுறை கேரளாவில் சில பள்ளிகளில் சோதனை முறையில் அமல்படுத்தப்பட்டது. தொடர்ந்து பஞ்சாப், ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களும் இந்த வகுப்பறையை அமல்படுத்த முன்வந்தன. அந்த வரிசையில் தமிழகத்திலும் பள்ளிகளில் இந்த நடைமுறையை பின்பற்ற பள்ளிகல்வித் துறை உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT