Published : 12 Jul 2025 05:23 PM
Last Updated : 12 Jul 2025 05:23 PM
சென்னை: தமிழகம் முழுவதும் நடைபெற்ற குரூப் 4 தேர்வில் 11.48 லட்சம் பேர் கலந்து கொண்டனர். மேலும், வினாத்தாள் கடினமாக இருந்ததாக தேர்வர்கள் தகவல் தெரிவித்தனர்.
தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்கள் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் போட்டித் தேரவுகள் மூலம் நிரப்பப்படுகின்றன. அதன்படி கிராம நிர்வாக அலுவலர், வனக் காப்பாளர் உட்பட பல்வேறு பதவிகளில் காலியாக உள்ள 3,935 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வு மாநிலம் முழுவதும் 3,034 மையங்களில் இன்று நடைபெற்றது.
இந்த தேர்வெழுத மொத்தம் 13 லட்சத்து 89,738 பேர் பதிவு செய்திருந்தனர். அதில் 11 லட்சத்து 48,019 (82.61%) பேர் மட்டுமே தேர்வு எழுதினர். மேலும், 2 லட்சத்து 41,719 நபர்கள் தேர்வு எழுத வரவில்லை. சென்னையில் 311 மையங்களில் நடத்தப்பட்ட குருப் 4 தேர்வை சுமார் 89 ஆயிரம் பேர் வரை எழுதினர்.
அதேநேரம் குரூப் 4 வினாத்தாள் கடினமாக இருந்ததால் தேர்வு முடிந்தபின் பெரும்பாலான தேர்வர்கள் கவலையுடன் காணப்பட்டனர். இது தொடர்பாக தேர்வர்கள் சிலரிடம் கேட்டபோது, “வினாத்தாளில் கணிதம் தவிர்த்து மற்ற பொது அறிவு, தமிழ் போன்ற பகுதிகள் கடினமாகவே இருந்தன. குறிப்பாக வழக்கமாக எளிதாக இருக்கும் தமிழ் பகுதியில் இந்த முறை 60 முதல் 70 சதவீத வினாக்கள் பாடப்புத்தகங்களுக்கும் வெளியே இருந்து கேட்கப்பட்டன.
அவையும் பெரும்பாலும் இலக்கணம் சார்ந்த கேள்விகளாகவும், சற்று விரிவானதாகவும்கேட்கப்பட்டதால் அதை படித்து விடை எழுத அதிக நேரம் தேவைப்பட்டது. ஆனால், பொது ஆங்கிலத்தில் வினாத்தாள் எளிதாக இருக்கிறது. இந்த பாரபட்சத்தை தவிர்க்க வேண்டும்.” என்றனர்.
இதற்கிடையே சென்னை எழும்பூரில் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் அமைந்துள்ள தேர்வு மையத்தை டிஎன்பிஎஸ்சி தலைவர் பிரபாகர் ஆய்வு செய்தார். அதன்பின் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: குரூப் 4 தேர்வு முடிவுகள் அடுத்த 3 மாதங்களில் வெளியிடப்படும். அதேபோல், குரூப் 1 தேர்வை பொறுத்தவரை 2 மாதங்களில் முடிவை வெளியிடுவோம்.
ஏனெனில், இதில் தேர்வு எழுதியவர்களின் எண்ணிக்கை குறைவாகும். இந்த ஆண்டு மொத்தம் 7 தேர்வுகள் அறிவிக்கப்பட்டு, அதில் 5 நடைபெற்றுள்ளன. விரைவில் குரூப் 2, 2ஏ தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட உள்ளது. அதேபோல், மதுரையில் வினாத்தாள் வெளியானதாக வந்த தகவல் தவறானதாகும். அனைத்து வினாத்தாள், விடைத்தாள்களும் காவல் துறையின் பாதுகாப்பு, கேமரா கண்காணிப்புடன் தேர்வு மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.
இதுதவிர டிஎன்பிஎஸ்சி நடத்தும் தேர்வுகளில் சர்ச்சைக்குரிய வினாக்கள் கேட்கப்படுவதில்லை. எனினும், இத்தகைய புகார்கள் கிடைக்கப் பெற்றால் அரசியல் சார்ந்த சர்ச்சைக்குரிய கேள்விகளை கேட்கக்கூடாது என வினாத்தாள் தயார் செய்யக்கூடிய அதிகாரிகளிடம் அறிவுறுத்தியுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த குருப் 4 தேர்வை பொருத்தவரை நேர்முகத் தேர்வு கிடையாது. எனவே, எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்றாலே அரசுப் பணி வாய்ப்பு உறுதி. தற்போது 3,935 ஆக அறிவிக்கப்பட்டுள்ள காலிப் பணி இடங்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்படலாம் என துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT