Published : 11 Jul 2025 04:43 PM
Last Updated : 11 Jul 2025 04:43 PM
தமிழகத்தில் உள்ள 6,990 அரசு நடுநிலைப் பள்ளிகளில் அமைக்கப்பட்டு வரும் ‘ஹைடெக்’ ஆய்வகங்களை, காமராஜர் பிறந்த தினமான ஜூலை 15 கல்வி வளர்ச்சி நாளன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைக்கிறார்.
தமிழகம் முழுவதும் உள்ள 6,990 அரசு நடுநிலைப் பள்ளிகளில் ‘ஹைடெக்’ ஆய்வகங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டு, அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த ஆய்வகத்தில் தலா 10 கணினிகள், எல்சிடி புரஜெக்டர், கேமரா, தொடுதிரை, மும்முனை மின்சாரம், தடையில்லா மின்சாரம் வழங்க பேட்டரியில் இயங்கும் மின்கலம், 100 எம்பிஎஸ் வேகம் கொண்ட இணையதள வசதி உள்ளிட்ட நவீன வசதிகளுடன் இந்த ஆய்வகங்கள் அமைய உள்ளன.
இந்த ஆய்வகத்துக்கென்று பொறுப்பாசிரியர் ஒருவர் நியமிக்கப்பட்டு, அவருக்கான பணிகள் பட்டியலிட்டு வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வகத்தை பயன்படுத்தி மாணவர்களுக்கு எவ்வாறு கற்பிக்க வேண்டும் என பொறுப்பாசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் ஹைடெக் ஆய்வகத்தில் உள்ள ஒவ்வொரு கணிணிக்கும் அடையாள எண் கொடுக்கப்பட்டு, அந்த கணினியின் செயல்பாட்டை சென்னையிலிருந்து கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்னையிலிருந்து ஆசிரியர் ஒருவர் கற்பிக்கும் பாடத்தை இணையதள வசதி மூலம் தமிழகத்தின் எந்தப் பகுதியிலும் உள்ள நடுநிலைப்பள்ளி மாணவர்கள் ஹைடெக் ஆய்வகத்தில் இருந்து கேட்டு புரிந்துகொள்ள முடியும். மாணவர் கணினி வழியே சந்தேகங்களையும் கேட்கலாம். இது தவிர இணையம் மூலம் அந்தந்த வகுப்புக்குரிய பாடங்களை கற்றுக்கொள்ளலாம்.
இவ்வாறு பல்வேறு வசதிகள் கொண்ட ஹைடெக் ஆய்வகங்களை காமராஜர் பிறந்த தினமான ஜூலை 15 கல்வி வளர்ச்சி நாளன்று சென்னையில் இருந்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்து மாணவர்களிடம் உரையாட உள்ளார். இதையடுத்து, ஆய்வகப் பணிகளை விரைந்து முடிக்க பள்ளிகளுக்கு தமிழக பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT