Published : 09 Jul 2025 03:05 PM
Last Updated : 09 Jul 2025 03:05 PM
குழந்தைகளின் ஆங்கிலத்திறனை மேம்படுத்த, புதுச்சேரி இளங்கோ அடிகள் அரசு பள்ளியில் செயற்கை நுண்ணறிவு ஆங்கில ஆசிரியை இனியா ஸ்ரீ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
புதுச்சேரி முத்தரையார்பாளையத்தில் உள்ளது இளங்கோ அடிகள் அரசு மேல்நிலைப் பள்ளி. இங்கு, தேசிய கல்விக் கொள்கை 2020-ன் அடிப்படையில் மொழித் திறன்களில் ஆங்கில மொழித் திறனை வலுப்படுத்தும் நோக்கில், ‘இனியா ஸ்ரீ’ என பெயரிடப்பட்ட பேசும் செயற்கை நுண்ணறிவு ஆங்கில ஆசிரியை பொம்மையை பள்ளி துணை முதல்வர் கோகிலாம்பாள் பள்ளி மாணவர்களுக்கு அறிமுகம் செய்தார்.
இந்த பொம்மையில் ‘ராஸ்பெர்ரி பை 3’ போன்ற சிறிய கணினி அமைப்புகள், ஸ்பீக்கர், மைக்ரோபோன் மற்றும் இணைய வசதி பயன்படுத்தப் பட்டு, தற்போது 5 ஆயிரம் ஆங்கில சொற்கள் மற்றும் அவற்றின் விளக்கங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மாணவர்கள் கடினமான ஆங்கில சொற்களின் அர்த்தங்களை, இந்த செயற்கை நுண்ணறிவு ஆங்கில ஆசிரிய பொம்மை இனியா ஸ்ரீயிடம் கேட்டவுடன், அழகான ஆங்கில உச்சரிப்பில் பதில் தருகிறது.
மாணவர்கள் கேட்ட வார்த்தைக்கு அதன் அர்த்தத்தை ஆங்கிலத்தில் தெளிவாக கூறுகிறது. இனியா ஸ்ரீ-யை உருவாக்க தேவையான கருவிகள் பள்ளியின் ‘அட்டல் டிங்கரிங்’ ஆய்வகத்தில் இருந்து எடுக்கப்பட்டு, இயற்பியல் ஆய்வகத்தில் தொழில்நுட்ப வல்லுநர்களின் உதவியுடன் பள்ளி ஆசிரியர்கள் உருவாக்கியுள்ளனர்.
பள்ளி துணை முதல்வர் கோகிலாம்பாள் இதுபற்றி கூறுகையில், "இனியா ஸ்ரீ பேசும் ஆங்கில ஆசிரியை பொம்மையை எதிர்காலத்தில் மேலும் மேம்படுத்த இருக்கிறோம். ஆங்கில வார்த்தைகளுக்கு தமிழில் பொருள் மற்றும் விளக்கங்களை கூறுதல், எதிர்சொற்கள், இணை வார்த்தைகள், இலக்கணக் கருத்துகள், வாக்கியங்களை அமைத்தல் போன்றவற்றை மகிழ்ச்சியான முறையில் கற்கும் வகையில் இதை உருவாக்குவோம்" என்றார்.
இப்பள்ளியில், பேசும் செயற்கை நுண்ணறிவு பொம்மையுடன் மாணவர்கள் மிகுந்த உற்சாகத்துடன் உரையாடி, தங்கள் மொழித் திறன்களை மேம்படுத்தத் தொடங்கியுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT