Published : 03 Jul 2025 06:06 AM
Last Updated : 03 Jul 2025 06:06 AM
சென்னை: பள்ளி மாணவர்களுக்காக ஏஐ, டேட்டா சயின்ஸ், எலெக்ட்ரானிக் சிஸ்டம் உள்ளிட்ட பாடங்களில் 10 ஆன்லைன் சான்றிதழ் படிப்புகளை சென்னை ஐஐடி அறிமுகம் செய்துள்ளது. சென்னை ஐஐடி கல்வி நிறுவனம் பி.எஸ். டேட்டா சயின்ஸ் அண்ட் ஏஐ, பி.எஸ். எலெக்ட்ரானிக் சிஸ்டம் ஆகிய 2 படிப்புகளை ஆன்லைனில் நடத்தி வருகிறது.
இந்நிலையில், 10, 11- 12-ம் வகுப்பு மாணவர்கள் சேரும் வகையில் ஏஐ, டேட்டா சயின்ஸ், எலெக்ட்ரானிக் சிஸ்டம், ஆர்க்கிடெக்சர் டிசைன், இன்ஜினீயரிங் பயாலஜிக்கல் சிஸ்டம், சட்டம் ஆகியவை தொடர்பான 10 ஆன்லைன் சான்றிதழ் படிப்புகளை தற்போது அறிமுகம் செய்துள்ளது. இவை 8 வார காலம் கொண்ட ஆன்லைன் படிப்புகள். இதில் மாணவர்களை சேர்க்க செய்யுமாறு அனைத்து பள்ளிகளுக்கும் ஐஐடி அழைப்பு விடுத்துள்ளது.
நடப்பு கல்வி ஆண்டில் ஆகஸ்ட், அக்டோபர், ஜனவரி என 3 தொகுதிகளாக இந்த படிப்புகள் நடத்தப்படும். ஆகஸ்ட் தொகுதிக்கான படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் code.iitm.ac.in/schoolconnect என்ற இணையதளம் மூலம் ஜூலை 25-ம் தேதிக்குள் விண்ணப்பத்தை பதிவுசெய்ய வேண்டும்.
இதுகுறித்து சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி கூறும்போது, “ஏஐ, டேட்டா சயின்ஸ், எலெக்ட்ரானிக் சிஸ்டம் உள்ளிட்ட வளர்ந்து வரும் தொழில்நுட்ப துறைகள் குறித்து பள்ளியில் படிக்கும் காலத்திலேயே அறிந்துகொள்வதால், மாணவர்கள் அந்த துறைகளில் அதிக ஆர்வம் ஏற்படும். இது அவர்களது எதிர்கால வளர்ச்சிக்கு உதவும். பள்ளிக்கல்வி - உயர்கல்வியை இணைக்கும் பாலமாக இந்த ஆன்லைன் கல்வி திட்டம் செயல்படும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT