Published : 02 Jul 2025 12:37 AM
Last Updated : 02 Jul 2025 12:37 AM
சென்னை: ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு விருப்ப மாறுதல் கலந்தாய்வு ஜூலை 8, 9-ம் தேதிகளில் நடைபெற உள்ளது.
இதுகுறித்து ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநிலத் திட்ட இயக்குநர் மா.ஆர்த்தி,அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: இந்த துறையில் பணியாற்றும் தொகுப்பூதிய ஊழியர்களுக்கு மனமொத்த மாறுதல் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி அலுவலகம், மாவட்ட திட்ட அலுவலகம் மற்றும் வட்டார வள மையங்களில் பணிபுரியும் தொகுப்பூதிய பணியாளர்களுக்கு காலியாக உள்ள இடங்களுக்கு மாறுதல் வழங்கப்பட உள்ளன. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி விருப்ப மாறுதல் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
அதன்படி மாவட்டத்துக்குள் மற்றும் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கோரும் தொகுப்பூதியப் பணியாளர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து ஜூலை 4-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். பெறப்பட்ட விண்ணப்பங்களை முதன்மைக் கல்வி அலுவலர் தலைமையில் குழு அமைத்து பரிசீலிக்க வேண்டும்.
அதன்பின் மாவட்டத்துக்குள் காலியாக உள்ள இடங்களுக்கு ஜூலை 8-ம் தேதியும், மாவட்டம் விட்டு மாவட்டம் உள்ள இடங்களுக்கு ஜூலை 9-ம் தேதியும் அனுப்பி வைக்க வேண்டும். இதுதவிர பணிமாறுதல் பெற்ற ஊழியர்களை ஜூலை 31-ம் தேதிக்குள் பணிவிடுவிப்பு செய்ய வேண்டும். மாறுதலுக்கு விண்ணப்பிப்பவர்கள் தற்போதைய பணியிடத்தில் ஓராண்டு பணியாற்றியிருக்க வேண்டும். ஒரே பணியிடத்துக்கு பலர் விண்ணப்பித்தால் முன்னுரிமை அடிப்படையில் அதை ஒதுக்கீடு செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT