Published : 29 Jun 2025 12:10 AM
Last Updated : 29 Jun 2025 12:10 AM
‘மாணவர்களின் உடல்நலன் கருதி ‘வாட்டர் பெல்’ திட்டம் அறிமுகப்படுத்தப்படும். அதன்படி பள்ளிகளில் ஒரு நாளைக்கு 3 முறை தண்ணீர் இடைவேளை வழங்கப்படும்’ என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் ச.கண்ணப்பன் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: உடல் நீரிழப்பு மாணவர்களின் அறிவாற்றல், கவனம் மற்றும் கல்வி செயல்திறனை கணிசமாகப் பாதிக்கும். எனவே, பள்ளிகளில் தண்ணீர் நுகர்வுக்கு மாணவர்களை ஊக்குவிப்பது பல்வேறு நன்மைகளைத் தரும். அந்த வகையில், மாணவர்கள் தண்ணீர் குடிப்பதை ஊக்கப்படுத்தும் விதமாக ‘வாட்டர் பெல்’ திட்டம் அறிமுகம் செய்து 5 நிமிடம் ஒதுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, ‘வாட்டர் பெல்’ திட்டத்தை உடனே பள்ளிகளில் அமல்படுத்த அரசு, அரசு உதவி பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின்கீழ் பள்ளியில் ஒருநாளைக்கு 3 முறை தண்ணீர் இடைவேளை மணி அடிக்கப்படும். இது வழக்கமான ஒலியில் இருந்து மாறுபட்ட ஒலியில் ஒலிக்கப்பட வேண்டும். காலை 11 மணி, மதியம் 1 மணி, மாலை 3 மணிக்கு ‘வாட்டர் பெல்’ அடிக்கப்படும். பள்ளிகளின் இடைவேளை நேரத்தைப் பொறுத்து நேரத்தை மாற்றி கொள்ளலாம்.
அதன்படி தண்ணீர் அருந்த 2 முதல் 3 நிமிடங்கள் அளிக்கப்படும். இதற்காக வகுப்புகளுக்கு வெளியே மாணவர்கள் செல்லக்கூடாது. வகுப்புச் சூழல்களுக்கு இடையூறு நேராதவாறு உள்ளேயே தண்ணீரை அருந்த வேண்டும். பள்ளிகளுக்கு மாணவர்கள் தண்ணீர் பாட்டிலை கட்டாயம் கொண்டுவர வேண்டும். இதுகுறித்து மாணவர்களுக்கு தெரிவிக்கப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்புக்கு பெற்றோர், மருத்துவர்கள், குழந்தைகள் நல ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT