Last Updated : 27 Jun, 2025 08:44 PM

1  

Published : 27 Jun 2025 08:44 PM
Last Updated : 27 Jun 2025 08:44 PM

மாணவர் வருகைப் பதிவேட்டில் சாதி விவரம் கூடாது: அரசின் வழிகாட்டுதல்கள் என்னென்ன?

சென்னை: வருகைப் பதிவேட்டில் மாணவர்களின் சாதி குறித்த விவரங்கள் இடம்பெறக் கூடாது என்பன உட்பட பல்வேறு அம்சங்கள் கொண்ட பள்ளிகளில் சாதிய வன்முறைகள் தடுப்பதற்கான வழிகாட்டுதல்களை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் ச.கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: பள்ளி மாணவர்களிடம் சாதிய மற்றும் சமூக வேறுபாடுகள் உணர்வுகள் அடிப்படையில் வன்முறைகள் உருவாகுவதைத் தவிர்ப்பதும், நல்லிணக்கம் மற்றும் நற்பண்புகளை வளர்ப்பதும் மிகவும் இன்றிமையாததது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் தற்போது வெளியிடப்படுகின்றன.

அதன்படி 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு திருக்குறளை மையமாக கொண்டு நன்னெறி வகுப்புகள் வாரந்தோறும் நடத்தப்பட வேண்டும். இதுதவிர இலக்கியம், வினாடி வினா, நூலகம், வானவில் மன்றம் உள்ளிட்ட மன்றங்களில் மாணவர்கள் பங்கேற்க வழிசெய்ய வேண்டும். நாடகம், இசை, நடனம் உட்பட கல்விச் சாரா செயல்பாடுகளிலும் மாணவர்களை ஈடுபடுத்த வேண்டும்.

வகுப்பறையில் மாணவர்களை 15 நாட்களுக்கு ஒருமுறை வரிசை மாற்றி அமரவைக்க வேண்டும். மாணவர்களின் வருகைப் பதிவேட்டில் அவர்களின் சாதி தொடர்பான விவரங்கள் இடம்பெறக்கூடாது. மாணவர்களின் சாதியை குறிப்பிட்டு ஆசிரியர்கள் அழைப்பதோ, கருத்து தெரிவிக்கவோ கூடாது. மேலும், மாணவர்களின் உதவித்தொகை குறித்த விவரங்களை வகுப்பறைகளில் அறிவிக்கக்கூடாது.

அதேபோல், மாணவர்கள் தங்கள் கைகளில் வேறுபாடுகளை அடையாளப்படுத்தக்கூடிய வண்ணக் கயிறுகள், மோதிரங்கள் அணிவதற்கு தடை விதிப்பதுடன், போதைப் பழக்கத்தால் பாதிக்கப்பட்ட மாணவரை மறுவாழ்வு மையத்தில் சேர்க்க அவர்களின் பெற்றோர்களுக்கு பரிந்துரைக்க வேண்டும். அதனுடன். மாணவர்களுக்கு பள்ளியளவில் வழிகாட்டி ஆசிரியரை நியமிக்க வேண்டும். பள்ளிகளில் தலைமையாசிரியர், 2 ஆசிரியர்கள், 2 பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள், 1 எஸ்எம்சி குழு உறுப்பினர் மற்றும் 1 பணியாளரை கொண்ட மாணவர் பாதுகாப்பு ஆலோசனைக் குழு அமைக்கப்பட வேண்டும்.

முக்கியமாக பாலியல் குற்றங்கள் தொடர்பாக புகார்கள் வந்தால் காவல் துறைக்கு உடனே தகவல் தெரிவிப்பதுடன், உடற்கல்வி பாடவேளைகளில் கட்டாயம் மாணவர்கள் விளையாட்டு பயிற்சிகளில் ஈடுபடுவதை உறுதிசெய்ய வேண்டும். மாணவர்கள், ஆசிரியர்களை கொண்ட மகிழ் முற்றம் குழுக்களை அமைக்க வேண்டும்.

பள்ளிகளில் சாதிய பிரச்னைகளை கண்காணிக்க மாவட்ட அளவில் முதன்மைக் கல்வி அலுவலர், காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் கொண்ட குழு அமைக்கப்பட வேண்டும் என்பன உட்பட அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றை முழுமையாக பின்பற்றி பள்ளிகளில்ய சாதி வன்முறைகள் நிகழ்வதை தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x