Last Updated : 27 Jun, 2025 06:12 PM

1  

Published : 27 Jun 2025 06:12 PM
Last Updated : 27 Jun 2025 06:12 PM

“சமூகம், தேசத்துக்காக உங்கள் இலக்கை நிர்ணயுங்கள்” - கல்லூரி விழாவில் ஜெகதீப் தன்கர் பேச்சு

நைனிடால் (உத்தராகண்ட்): குறுகிய சுயநல இலக்கை கைவிட்டு, சமூகத்துக்காக, மனிதகுலத்துக்காக, தேசத்துக்காக ஓர் இலக்கைக் நிர்ணயித்து கொள்ளுங்கள் என மாணவர்களுக்கு குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் அறிவுறுத்தியுள்ளார்.

உத்தராகண்ட் மாநிலம் நைனிடாலில் உள்ள ஷெர்வுட் கல்லூரியின் 156-வது நிறுவனர் தினக் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜெகதீப் தன்கர், "நாடு வேகமாக முன்னேறி வருகிறது. ஒரு லேண்ட்லைன் தொலைபேசி வசதி இருந்தால் அதுவே பெரிய கவுரவம் என்ற நிலையில் இருந்து, தற்போது உலகில் அதிக ஸ்மார்ட்போன்கள் பயன்பாட்டில் உள்ள நாடு என்ற நிலைக்கு நாம் நகர்ந்திருக்கிறோம்.

மாணவர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கான குறிக்கோளை அடையாளம் கண்டு அதை நோக்கி பயணிக்க வேண்டும். குறிக்கோளை நோக்கிச் செல்லுங்கள், மாறாக மற்றவருக்கு போட்டியாக இருக்காதீர்கள். மற்றவர் செய்ததைப் பார்த்து பொறாமைப்படாதீர்கள். நீங்கள் உங்களுக்காக உயர்ந்த நிலையை அடைந்து கொண்டே இருக்க வேண்டும்.

குறுகிய சுயநல இலக்கை கைவிட்டு, சமூகத்துக்காக, மனிதகுலத்துக்காக, தேசத்துக்காக ஓர் இலக்கைக் நிர்ணயித்துக் கொள்ளுங்கள். சமூகத்துக்காக உழைத்தவர்கள், சமூகத்துக்காக வாழ்ந்தவர்கள், சமூகத்துக்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தவர்களை மட்டுமே இன்றும் நாம் நினைவில் கொள்கிறோம்.

எப்போதும் தேசத்துக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் தேசியவாதத்தை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். 5,000 ஆண்டுக்கால நாகரிகத்தை கொண்ட ஒரு தனித்துவமான தேசமான இந்தியாவின் குடிமக்களுக்கு குறைந்தபட்ச தகுதி அதுதான்.

கல்வி என்பது கடவுளின் பரிசு. 140 கோடி மக்கள் தொகை கொண்ட இந்த நாட்டில் சமத்துவத்தை கல்வி மூலம் மட்டுமே சிறப்பாக பாதுகாக்க முடியும். சமத்துவமின்மை, அநீதி ஆகியவற்றை கல்வி மிகக் கடுமையாக எதிர்க்கிறது. கல்வி மூலம் தான் நீங்கள் உங்கள் வாழ்நாள் முழுவதும் இதை செய்யப் போகிறீர்கள்.

பெற்றோர்கள் தயவுசெய்து தங்கள் குழந்தைகளை மன அழுத்தத்துக்கு ஆளாக்கக் கூடாது. வாழ்க்கையில் அவர்களின் குறிக்கோள் என்ன என்பதை நீங்கள் தீர்மானிக்காதீர்கள். அப்படி நடந்தால் நமக்கு விஞ்ஞானிகள், விண்வெளி ஆராய்ச்சியாளர்கள், உலகையே வழிநடத்துவோர் எங்கே இருந்து கிடைப்பார்கள்?" என்று அவர் கேள்வி எழுப்பினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x