Last Updated : 27 Jun, 2025 11:14 AM

1  

Published : 27 Jun 2025 11:14 AM
Last Updated : 27 Jun 2025 11:14 AM

பொறியியல் படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு: ஜூலை 7 முதல் கலந்தாய்வு

சென்னை: பொறியியல் படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் இன்று (ஜூன் 27) காலை வெளியிடப்பட்டது. சென்னை கிண்டியில் உள்ள மாநில தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தில் உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டார். மாணவர்கள் https://www.tneaonline.org/ என்ற இணையதளத்தில் தரவரிசை பட்டியலை அறிந்துகொள்ளலாம்.

தரவரிசைப் பட்டியலில் 145 பேர் 200-க்கு 200 மதிப்பெண் பெற்றுள்ளனர். இவர்களில் 140 பேர் தமிழ்நாடு பாட வாரியத்தின் கீழ் படித்தவர்கள் ஆவர்.

மேலும், கலந்தாய்வு கால அட்டவணையையும் அமைச்சர் வெளியிட்டார். அதன்படி ஜூலை 7 கலந்தாய்வு தொடங்குகிறது. அன்றைய தினம் சிறப்புப் பிரிவினருக்கும், 14-ம் தேதி பொதுப் பிரிவினருக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது.

ரேண்டம் எண் வெளியானதைத் தொடர்ந்து ஜூன் 28 முதல் ஜூலை 2-ம் தேதி வரை மாணவர்கள் குறை தீர்க்கும் சேவை வழங்கப்படும். தரவரிசை பட்டியலில் ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

தமிழகத்தில் 440-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன. அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கல்லூரிகள், அரசுக் கல்லூரிகள், அரசு உதவிபெறும் கல்லூரிகள் என அனைத்து வகை பொறியியல் கல்லூரிகளும் இதில் அடங்கும். இந்தக் கல்லூரிகளில் பி.இ., பி.டெக். படிப்புகளில் ஏறத்தாழ 2 லட்சம் இடங்கள், அரசு ஒதுக்கீட்டு இடங்களாகும்.

இந்த இடங்களில் நடப்பு கல்வியாண்டில் (2025-2026) சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு கடந்த மே 7-ம் தேதி தொடங்கி, கடந்த 6-ம் தேதி முடிவடைந்தது. மொத்தம் 2 லட்சத்து 49 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். அனைவருக்கும் 10 இலக்க எண்கள் கொண்ட ரேண்டம் எண் கடந்த 11-ம் தேதி ஆன்லைன் வாயிலாக ஒதுக்கீடு செய்யப்பட்டது.

ரேண்டம் எண் ஒதுக்கப்பட்டதை தொடர்ந்து, பொறியியல் சேர்க்கை சேவை மையங்களில் மாணவர்களின் சான்றிதழ்களை ஆன்லைனில் சரிபார்க்கும் பணி கடந்த 10-ம் தேதி தொடங்கி 20-ம் தேதி முடிவடைந்தது.

இந்நிலையில், தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் ஏற்கனவே அறிவித்தபடி, பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்த மாணவர்களின் தரவரிசைப் பட்டியல் இன்று (ஜூன் 27) வெளியிடப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x