Last Updated : 26 Jun, 2025 02:27 PM

 

Published : 26 Jun 2025 02:27 PM
Last Updated : 26 Jun 2025 02:27 PM

‘திண்ணை கல்வி’க்கு மாறிய அங்கன்வாடி குழந்தைகள் மையம் - அஞ்செட்டி அருகே மக்கள் வேதனை

அஞ்செட்டி அருகே தாண்டியம் மலைக் கிராமத்தில் பாதியில் நிறுத்தப்பட்ட அங்கன்வாடி மைய கட்டிடப் பணி.

ஓசூர்: அஞ்செட்டி அருகே தாண்டியம் மலைக் கிராமத்தில் 5 ஆண்டு களாகக் கட்டிடம் கட்டும் பணி கிடப்பில் உள்ளதால், திண்ணைக் கல்விக்கு அங்கன்வாடி மையம் மாறியுள்ளது. இதனால், குழந்தைகளின் முன்பருவக் கல்வி மற்றும் ஊட்டச்சத்து சேவை புறக்கணிக்கப்படுவதாக மக்கள் வேதனை தெரிவித்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே கோட்டையூர் ஊராட்சிக்கு உட்பட்ட தாண்டியம் மற்றும் நாயக்கன் கோட்டை மலைக் கிராமங்களில் 200- க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.

இக்கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு அடிப்படை வசதிகள் கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது. இக்கிராம மாணவ, மாணவிகள் கல்வி பயில உரிகம் மற்றும் அஞ்செட்டிக்குச் செல்ல வேண்டும். மேலும், இக்கிராமங்களில் சாலை, பேருந்து வசதியில்லை. இதனால், இப்பகுதி குழந்தைகளுக்குக் கல்வி எட்டாக்கனியாக இருந்து வருகிறது.

இந்நிலையில், தாண்டியம் கிராமத்தில் செயல்பட்ட அங்கன்வாடி மையக் கட்டிடத்தை இடித்து அகற்றி விட்டு புதிய கட்டிடம் கட்டும் பணி கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கியது. ஆனால், கட்டிடப் பணி நிறைவடையாமல் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், அப்பகுதியில் உள்ள வீட்டின் திண்ணையை மாதம் ரூ.500-க்கு வாடகைக்கு எடுத்து குழந்தைகளை அங்கு அமரவைத்து, கல்வி பயிலும் நிலை இருந்து வருகிறது.

மழை மற்றும் வெயில், காற்று வீசும் நேரங்களில் குழந்தைகள் திண்ணையில் அமர்வதில் சிரமத்தைச் சந்தித்து வருகின்றனர். இந்நிலையால், கடந்த ஆண்டுகளில் 50-க்கும் மேற்பட்ட குழந்தைகள் மையத்துக்கு வந்த நிலையில், தற்போது, 5 குழந்தைகள் மட்டுமே வருகின்றனர்.

இதுதொடர்பாக அப்பகுதி மக்கள் கூறியதாவது: அங்கன்வாடி கட்டிடம் கட்டும் பணி நிறுத்தப்பட்டதால், கடந்த கால திண்ணைக் கல்வியை நினைவுபடுத்தும் வகையில் வீட்டின் திண்ணையில் அமர்ந்து பாதுகாப்பற்ற நிலையில் குழந்தைகள் கல்வி பயிலும் நிலையுள்ளது. எங்கள் கிராமத்தில் பள்ளிகள் இல்லாத நிலையில் கல்வி கேள்விக்குறியாகியுள்ளது. மேலும், குழந்தைகளின் முன்பருவக் கல்வி மற்றும் ஊட்டச்சத்து சேவை கிடைக்கக் கூடிய அங்கன்வாடி மைய சேவையும் எங்களுக்குப் புறக்கணிக்கப்படுகிறது.

அங்கன்வாடி மையம் செயல்படும் வீட்டின் திண்ணை.

இங்கு வசிக்கும் பெரும்பாலான மக்கள் வறுமை நிலையில் உள்ள நிலையில், குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து மற்றும் சுகாதார விழிப்புணர்வு கட்டாயம் தேவை என்பதை அதிகாரிகள் புரிந்து கொள்ளாமல் இருப்பது வேதனை அளிக்கிறது. மேலும், கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்குக் கிடைக்க வேண்டிய சேவையும் புறக்கணிக்கப்படுகிறது.

எனவே, மாவட்ட ஆட்சியர் எங்கள் கிராமத்தில் ஆய்வு செய்து, பாதியில் நிறுத்தப்பட்ட கட்டிடப் பணியை மீண்டும் தொடங்கி நிறைவு செய்து, குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான அங்கன்வாடி சேவைகள் முறையாகக் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுதொடர்பாக ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் கூறும்போது, “தாண்டியம் மலைக் கிராமத்தில் அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டும் பணி பாதியில் நின்றது தொடர்பாக எங்களுக்குத் தெரியாது. இதில் முறைகேடு நடந்திருக்க வாய்ப்புள்ளது. உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும். இப்பிரச் சினை யைப் பெரிதுபடுத்த வேண்டாம்” என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x