Published : 26 Jun 2025 06:04 AM
Last Updated : 26 Jun 2025 06:04 AM
சென்னை: ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனங்கள் மூலம் கடந்த 4 ஆண்டுகளில் 1.17 லட்சம் இளைஞர்களுக்கு திறன் பயிற்சி வழங்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மத்திய அரசின் ஊரக வளர்ச்சி அமைச்சகம், தமிழக அரசின் ஊரக வளர்ச்சித் துறை ஆகியவற்றின் உதவியுடன் தமிழகத்தில் சென்னை தவிர 37 மாவட்டங்களில் ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்நிறுவனங்கள் மூலம் கிராமப்புற இளைஞர்களுக்கு செல்போன் பழுது நீக்குதல், வீட்டு உபயோகப் பொருட்கள் பழுது நீக்குதல், பிளம்பிங், தச்சு பயிற்சி, இருசக்கர வாகன பழுது நீக்குதல், ஒயரிங், வெல்டிங் பயிற்சி உள்ளிட்ட 64 வகையான சுயவேலைவாய்ப்பு பயிற்சிகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன.
8-ம் வகுப்பு முதல், ஐடிஐ, டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பு வரை படித்தவர்களுக்கு கல்வித் தகுதிக்கு ஏற்ப பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. அதன்படி 10 நாட்கள் முதல் அதிகபட்சம் 45 நாட்கள் வரை உள்ள பயிற்சிக் காலத்தில் சுயதொழில் குறித்து பயிற்சி அளிப்பதுடன் உகந்த தொழில் வாய்ப்புகளைக் கண்டறிதல், தொழில் திட்டம் தயாரித்தல், சந்தைப்படுத்துதல் உள்ளிட்ட தொழில் முனைவோர் குறித்த பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன.
அந்தவகையில் கடந்த 4 ஆண்டுகளில் ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனங்கள் மூலம் 1.17 லட்சம் இளைஞர்களுக்கு திறன் பயிற்சிகள் வழங்கப்பட்டு, 67,158 இளைஞர்கள் சுயதொழில் மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் நடப்பாண்டில் 37,050 இளைஞர்களுக்கு தொழிற்பயிற்சி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கிராமப்புற இளைஞர்கள் தங்களுக்கு ஏற்ற தொழில் பயிற்சிகளில் சேர்ந்து பயன்பெற விரும்பினால், ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க அலுவலகம், வட்டார இயக்க மேலாளர்கள் ஆகியோரை தொடர்பு கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT