Published : 25 Jun 2025 05:43 PM
Last Updated : 25 Jun 2025 05:43 PM
சென்னை: தனித் தேர்வர்களுக்கான 8-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு ஆகஸ்ட் 18 முதல் 22-ம் தேதி வரை நடைபெற உள்ளது. விருப்பமுள்ளவர்கள் ஜூலை 10-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தேர்வுத்துறை இயக்குநரகம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு விவரம்; தனித் தேர்வர்களுக்கான 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஆகஸ்ட் 18 முதல் 22-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த தேர்வு எழுத விரும்பும் தனித் தேர்வர்கள் ஜூலை 10 முதல் 17-ம் தேதி வரை தேர்வுத்துறை இணையதளத்தில் (www.dge.tn.gov.in) குறிப்பிடப்பட்டுள்ள சேவை மையங்களுக்கு நேரில் சென்று இணையவழியில் விண்ணப்பத்தை பதிவு செய்து கொள்ள வேண்டும்.
மேலும், தேர்வுக்கட்டணம் ரூ.125, இணையவழி பதிவுக் கட்டணம் ரூ.70 என மொத்தம் ரூ.195 பணமாக சேவை மையங்களில் நேரடியாக செலுத்த வேண்டும். இதற்கிடையே மேற்குறிப்பிட்ட நாட்களில் விண்ணப்பிக்கத் தவறியவர்கள் தட்கல் முறையில் ஜூலை 18, 19-ம் தேதிகளில் பதிவு செய்து கொள்ளலாம். இதற்கு தேர்வுக் கட்டணத்துடன் ரூ.500 கூடுதலாக செலுத்த வேண்டும்.
முதன்முதலாக தேர்வு எழுத விண்ணப்பிப்பவர்கள் பள்ளி பதிவுத்தாள் நகல், சான்றிடப்பட்ட பள்ளி மாற்றுச் சான்றிதழ் நகல், பிறப்புச் சான்றிதழ் நகல் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை விண்ணப்பத்துடன் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும். ஏற்கனவே 8-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதி தோல்வி அடைந்த பாடங்களை எழுதுவதற்கு விண்ணப்பிப்பவர்கள் முந்தைய மதிப்பெண் சான்றிதழ்களின் நகல்களை கண்டிப்பாக இணைக்க வேண்டும்.
இது தவிர அனைத்து தனித் தேர்வர்களும் ரூ.42-க்கான அஞ்சல் வில்லை ஒட்டப்பட்ட அஞ்சல் குறியீட்டு எண்ணுடன் கூடிய சுய முகவரி உறையை விண்ணப்பத்துடன் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும். இணைய வழியிலான விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்கப்படும். தபால் மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். இந்தத் தேர்வு குறித்த விரிவான கால அட்டவணை உள்ளிட்ட தகவல்களை மேற்கண்ட இணைய தளத்தில் அறிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT