Published : 25 Jun 2025 05:38 AM
Last Updated : 25 Jun 2025 05:38 AM

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது இன்று மாலையுடன் நிறைவு

சென்னை: எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது இன்று மாலை 5 மணியுடன் நிறைவடைகிறது. தமிழகத்தில் 36 அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் கே.கே.நகர் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியில் 5,200 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன.

இதில் 15 சதவீத இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்குப்போக, மீதமுள்ள 85 சதவீத இடங்கள் மாநில அரசுக்கு உள்ளன. இவைதவிர தனியார் கல்லூரிகளில் உள்ள 3,450 இடங்களும், தனியார் மருத்துவ பல்கலைக்கழகங்களில் 550 இடங்களும் எம்பிபிஎஸ் படிப்புகளுக்கு உள்ளன.

இதில், அரசு ஒதுக்கீட்டுக்கு அரசு ஒதுக்கீட்டுக்கு 50 சதவீதம், நிர்வாக ஒதுக்கீட்டுக்கு 50 சதவீதம் இடங்கள் ஆகும். மொத்தமாக அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் 9,200 எம்பிபிஎஸ் இடங்கள் இருக்கின்றன. இதில் 496 இடங்கள் 7.5 சதவீத ஒதுக்கீட்டின்கீழ் அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.

அதேபோல், 3 அரசு பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 250 பிடிஎஸ் இடங்களில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 15 சதவீத இடங்கள் போக, மீதமுள்ள 85 சதவீத இடங்கள் மாநில அரசுக்கு உள்ளன. தனியார் கல்லூரிகளில் அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டுக்கு 1,900 இடங்களும் உள்ளன. அதில், 126 இடங்கள் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஒதுக்கப்படுகிறது.

புதிய எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கு தேசிய மருத்துவ ஆணையத்திடம் தமிழக சுகாதாரத் துறை விண்ணப்பிக்காததால், கடந்த ஆண்டு இருந்த 11,350 எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறவுள்ளது. இந்நிலையில், 2025-26-ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வுக்கு https://tnmedicalselection.net/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிப்பது கடந்த 6-ம் தேதி தொடங்கியது.

இதுவரை அரசு ஒதுக்கீடு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு தனித்தனியாக 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். ஜூன் 25-ம் தேதி (இன்று) மாலை 5 மணியுடன் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் அவகாசம் நிறைவடையவுள்ளதால், தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் விரைவாக விண்ணப்பிக்குமாறு மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x