Published : 25 Jun 2025 05:39 AM
Last Updated : 25 Jun 2025 05:39 AM

பிளஸ் 2 கல்வித் தகுதி போதும் மத்திய அரசில் 3,131 பணியிடங்களை நிரப்ப தேர்வு: எஸ்எஸ்சி தென்மண்டல தலைவர் தகவல்

சென்னை: மத்திய அரசின் பல்வேறு துறைகளில் பிளஸ் 2 கல்வித்தகுதி உடைய பதவிகளில் 3,131 காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மத்திய அரசின் பணியாளர் தேர்வாணைய (எஸ்எஸ்சி) தென்மண்டல தலைவர் கே.ராகுல், செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: மத்திய அரசின் அமைச்சகங்கள் மற்றும் துறைகளுக்குத் தேவையான குரூப்-பி, குரூப்-சி, குரூப்-டி ஊழியர்கள் எஸ்எஸ்சி எனப்படும் பணியாளர் தேர்வாணையம் வாயிலாக தேர்வுசெய்யப்படுகிறார்கள். எஸ்எஸ்சி தேர்வுக்கு நேர்காணல் கிடையாது. கணினிவழியில் நடத்தப்படும் எழுத்துத்தேர்வில் வெற்றிபெற்றால் அரசு பணி வாய்ப்பு உறுதி.

பட்டப்படிப்பை கல்வித்தகுதியாகக் கொண்ட உதவி பிரிவு அலுவலர், வருமான வரி ஆய்வாளர், மத்திய கலால் ஆய்வாளர், ஆடிட்டர், அஞ்சல் ஆய்வாளர் உள்ளிட்ட பதவிகளில் 14,582 காலியிடங்களை நிரப்புவதற்காக ஒருங்கிணைந்த பட்டப்படிப்பு நிலை தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு அதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு நடந்து வருகிறது. இதற்கான எஸ்எஸ்சி இணையதளத்தை (www.ssc.gov.in) பயன்படுத்தி ஜூலை 4-ம் தேதி வரை பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். இந்த பதவிகளுக்கு சம்பளம் ரூ.75 ஆயிரம் வரை கிடைக்கும்.

இந்நிலையில், தற்போது கீழ்நிலை எழுத்தர், இளநிலை செயலக உதவியாளர், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் ஆகிய பதவிகளில் 3,131 காலியிடங்களை நிரப்புவதற்கான தேர்வுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டு இருக்கிறது. இதற்கு 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். வயது வரம்பு 18 முதல் 27 வரை. மத்திய அரசு விதிமுறைகளின்படி இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு (எஸ்சி, எஸ்டி, ஓபிசி, மாற்றுத் திறனாளிகள்) வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

இந்த தேர்வுக்கு ஜூலை 18-ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். முதல்கட்டத் தேர்வு, 2-வது கட்டத் தேர்வு என இரு நிலைகளில் தேர்வு நடைபெறும். முதல்கட்டத் தேர்வு செப்.8 முதல் 18-ம் தேதி வரை கணினிவழியில் நடைபெறும். இந்த பதவிகளுக்கு சம்பளம் ரூ.32 ஆயிரம் முதல் ரூ.45 ஆயிரம் வரை பெறலாம்.

ஆன்லைனில் மட்டுமின்றி 'மை எஸ்எஸ்சி' (mySSC) என்ற செயலி வாயிலாகவும் எளிதாக விண்ணப்பிக்கலாம். தேர்வு கட்டணம் மிகவும் குறைவு. பெண்கள், எஸ்சி, எஸ்டி வகுப்பினர், மாற்றுத் திறனாளிகளுக்கு தேர்வு கட்டணம் கிடையாது. இவ்வாறு அவர் கூறினார்.

சிக்கிம் மாநில கேடர் ஐஏஎஸ் அதிகாரியான ராகுல், தமிழகத்தின் ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. பேட்டியின்போது எஸ்எஸ்சி துணை இயக்குநர் டி.ஆவுடை கந்தன் உடனிருந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x