Published : 23 Jun 2025 06:55 AM
Last Updated : 23 Jun 2025 06:55 AM
மதுரை: சரியான புரிதல், தெளிவான திட்டமிடுதல், தொடர்ச்சியான உழைப்பு இருந்தால் எந்தத் தேர்வாக இருந்தாலும் வெற்றி வசப்படும் என மதுரையில் நேற்று நடந்த ‘உனக்குள் ஓர் ஐஏஎஸ் நிகழ்வில் பங்கேற்ற சிறப்பு விருந்தினர்கள் தெரிவித்தனர்.
ஐஏஎஸ் படிக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் உண்டு. ஆனால் அதற்கான அடிப் படைத் தேவையான கல்வித் தகுதி என்ன?, எத்தனை ஆண்டுகள் படிக்க வேண்டும்?, அதிகம் செலவாகுமா? என்ற ஏராளமான கேள்விகளுடன் தயங்கி நிற்பவர்களே அதிகம்.
இவ்வாறான தயக்கத்தைப் போக்கி, யுபிஎஸ்சி தேர்வுக்குப் படிப்பதற்கான தெளிவைத் தரும் நோக்கத்தில் கிங்மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி வழங்கும் ‘இந்து தமிழ் திசை - உனக்குள் ஓர் ஐஏஎஸ்’ எனும் வழிகாட்டி நிகழ்ச்சி மாணவர்களுக்காக நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நடப்பாண்டுக்கான ‘உனக்குள் ஓர் ஐஏஎஸ்’ நிகழ்ச்சி, மதுரை தெப்பக்குளம் தியாகராசர் கல்லூரி அரங்கில் நேற்று நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மதுரை மாநகராட்சி ஆணையர் சித்ரா விஜயன் பேசியதாவது: யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும் எனச் சொல்கிறேன். முதலில் யாருடன் எங்கு உட்கார்ந்து படிக்க வேண்டும் என்பதை முடிவு செய்யுங்கள்.
குழுவாகப் போட்டித் தேர்வுக்கு உட்கார்ந்து படித்தால் தேர்ச்சி பெற்று விடுவோம் என நினைக்கின்றனர். குழுவாக உட்கார்ந்து படிப்பதில் ஒரு பிரச்சினை உள்ளது. எல்லோரும் படிக்கும்போது நாம் மட்டும் சும்மா உட்கார்ந்திருந்தால் மன அழுத்தம், பதற்றம் ஏற்படும். எனவே, குழுவாக அமர்ந்து படிப்பதில் பிரச்சினை உள்ளவர்கள், தனியாக அமர்ந்து கவனமுடன் படியுங்கள். குழுவாகப் படிக்கும்போது சிலர் எனக்கு எல்லாம் தெரியும் என்பார்கள். அப்போது நமக்கு ஒன்றுமே தெரியவில்லை என்ற எண்ணம் ஏற்படும்.
எனவே மற்றவர்களோடு தம்மை ஒப்பிடாமல் தங்களுக்குத் தெரிந்ததைப் படியுங்கள். அடிப்படையில் நமக்குத் தெரிந்ததை வலிமையோடு படித்தால், ஒப்பிடாமல் படித்தால் நிம்மதி கிடைப்பதோடு வெற்றியும் பெற முடியும். எல்லோரும் ஒரே மாதிரிதான் படிப்பார்கள். என்னால் முடியும் என்ற நம்பிக்கையோடு படியுங்கள். இல்லையேல் உங்களுக்கு எதிரி நீங்கள்தான். உங்களைப் பற்றி முதலில் தெரிந்துகொள்ளுங்கள். மற்றவர்களோடு ஒப்பிடாதீர்கள்.
அது உங்களை தோல்வியடையச் செய்யும். அதற்காக 24 மணிநேரமும் படித்தால்தான் தேர்ச்சி பெறுவோம் என்று நினைப்பது தவறு. படிப்புக்கு இடையே ஓய்வும், தூக்கமும் தேவை. பொழுதுபோக்குக்கு என நேரத்தை ஒதுக்கிக் கொள்ளுங்கள். ஐஏஎஸ் மட்டுமே வேலை இல்லை, இதேபோல் மற்ற வேலைகளும், ஏராளமான வாய்ப்புகளும் இருக்கின்றன என்பதை புரிந்து கொண்டு படியுங்கள், என்று பேசினார்.
சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற விருதுநகர் மாவட்ட ஆட்சியர் வீ.ப.ஜெயசீலன் பேசியதாவது: நான் கிராமத்து பள்ளியில் படித்து, மதுரை அரசு வேளாண் கல்லூரியில் கல்லூரிப் படிப்பை முடித்தேன். 10-ம் வகுப்பு படிக்கும்போதே ஐஏஎஸ் ஆக வேண்டும் என்ற லட்சியம் ஏற்பட்டது.
அதற்காக கல்லூரிப் படிப்பை முடித்தவுடன் முழு நேரமாக சென்னையில் படித்தேன். கல்லூரி படிப்பை முடித்த 6 மாதத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2-ல் தேர்வானேன், பின்னர் குருப் 1-ல் தேர்வானேன். பிறகு சிவில் சர்வீஸ் தேர்வில் ஐஆர்எஸ் இந்திய அளவில் 602-வது இடம் பெற்றேன்.
2012-13 தமிழ் வழியில் ஐஏஎஸ் எழுதி தமிழகத்தில் முதல் ரேங்க்கில் தேர்ச்சி பெற்றேன். எந்தத் தேர்வாக இருந்தாலும் படிப்பதற்கும் அதைப்பற்றி தெரிந்து கொள்ளவும் முயற்சி செய்வது ஒரே நடைமுறைதான். அதனைச் சரியாகப் புரிந்து, தெரிந்துகொண்டு தொடர்ச்சியாகச் செய்ய வேண்டும். முதலில் சரியான புரிதல், இரண்டாவதாக தெளிவான திட்டமிடல், மூன்றாவதாகத் தொடர்ச்சியான உழைப்பு இருக்க வேண்டும்.
இவை மூன்றும் இருந்தால் எளிதாக வெற்றி வசப்படும். தினமும் முழுமையான பயிற்சி முக்கியம். நான் முதல்வன் திட்டத்தில் தமிழக அரசு பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறது. தேர்வில் தேர்ச்சி பெறாமல் போகும்போது. நிறையச் சோர்வு ஏற்படுவதைத் தவிர்க்க வேண்டும்.
மொபைல் போன் மூலம் நிறைய விஷயங்களை தெரிந்து கொள்ளலாம். அதனை நல்வழிக்குப் பயன்படுத்தலாம். அனைவரும் வெற்றிக்கு அருகில் சென்றுதான் வெற்றியைத் தவற விடுகின்றனர். வெற்றிபெற உழைப்பும், அறிவும், தொடர் உழைப்பும் இருந்தும் தவற விடுபவர்கள், இன்னும் கொஞ்சம் சரியாகப் பயன்படுத்தியிருந்தால் வெற்றி பெற்றிருப்பர்.
என்னால் முடிந்தது என்றால், உங்களாலும் முடியும். தமிழ் வழியில் படிக்கும் மாணவர்கள் ஆங்கில வழியில் புத்தகங்கள் படியுங்கள். தினமும் செய்தித்தாள்களை ஆழ்ந்து படியுங்கள். நமக்கான வாய்ப்புகள் வரும்போது பயன்படுத்த வேண்டும். இல்லையெனில் வாய்ப்புகளை உருவாக்கி பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கல்வியால்தான் உயர்ந்த நிலையை அடைய முடியும். பள்ளிகளில் நூலகத்துக்குச் சென்று புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை மாணவர்களுக்கு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
கிங் மேக்கர்ஸ் அகாடமி தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் சத்ய பூமிநாதன் பேசுகையில், ‘‘நம்மிடம் இருக்கும் ஒரே சொத்து நம்பிக்கை, தைரியம்தான். இறையன்பு ஐஏஎஸ் எழுதிய ஐஏஎஸ் ஆவது எப்படி என்ற அவரது எழுத்துகள்தான் என்னை சென்னை நோக்கிப் பயணிக்க வைத்தது.
புதிய வாசிப்பு, புதிய சிந்தனைதான் நம்மை முன்னேற்றும். டிஎன்பிஎஸ்சி எளிது, யுபிஎஸ்சி தேர்வு கடினம் என நினைக்கின்றனர். உயர்ந்த இலக்கு இருக்க வேண்டும். அதை கண்டுபிடிப்பதுதான் சிரமம். 2,400 மணி நேரம் பயிற்சி செய்தால் ஐஏஎஸ் ஆகிவிடலாம். மனிதர்களின் 100 ஆண்டுகால வாழ்க்கையில் 100 நாள் ஒதுக்கிப் படித்தால் ஐஏஎஸ் ஆகிவிடலாம். சிவில் சர்வீஸ், போட்டித்தேர்வு எழுதுபவர்களுக்குப் பொற்காலம் காத்திருக்கிறது ’’ என்றார்.
‘இந்து தமிழ் திசை’ முதுநிலை உதவி ஆசிரியர் மு.முருகேசன் பேசும்போது, குடிமைப்பணி தேர்வுகளை தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் அதிகம் பேர் எழுதி, வெற்றிபெற்று, உயர் பதவிகளுக்குச் செல்ல வேண்டும் என்ற பெருவிருப்பத்தில் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் இந்நிகழ்வுகளைத் தொடர்ந்து முன்னெடுத்து நடத்தி வருகிறது.
யுபிஎஸ்சி தேர்வை எழுத 10 லட்சம் பேர் விண்ணப்பிக்கின்றனர். 6 லட்சம் பேர்தான் தேர்வு எழுதுகின்றனர். அதிலும் இதற்கான தயாரிப்போடும் திட்டமிடலோடும் எழுதுபவர்கள் மிகவும் குறைவு. மேலும், இந்தி தெரியாது என்ற தயக்கமும் பலரிடம் உள்ளது. இதெல்லாம் ஒரு தடையே கிடையாது.
இந்தத் தேர்வை தமிழிலும் எழுத முடியும். தடைகளை உடைத்து நம்பிக்கையோடு முன்னேறினால் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி இலக்கை அடையலாம், என்றார். இந்நிகழ்வில் பங்கேற்ற மாணவர்களின் கேள்விகளுக்கு விருதுநகர் ஆட்சியர் வீ.ப.ஜெயசீலன் பதிலளித்தார். ஆர்வமுடன் தொலைதூர மாவட்டங்களிலிருந்து வந்திருந்த மாணவ, மாணவியர், கலந்துரையாடல் செய்த மாணவர்களுக்கு ஊக்கப் பரிசாக புத்தகங்கள் வழங்கப்பட்டன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT