Published : 22 Jun 2025 05:07 PM
Last Updated : 22 Jun 2025 05:07 PM

பழங்குடியினருக்கான உயர் தொழில்நுட்ப கல்வி பயிற்சி திட்டம் தொடங்கிய வேகத்தில் முடக்கம்?

பழங்குடியின மாணவர்களுக்கான ஐஐடி, என்ஐடி உயர் தொழில்தொட்ப கல்விக்கான பயிற்சி திட்டம், கடந்த 2013-2014-ம் கல்வியாண்டில் தொடங்கிய வேகத்தில் முடங்கியதாகவும், இந்த திட்டத்தில் இதுவரை ஒரு மாணவர் கூட பயன்பெறவில்லை என்றும், ஆர்டிஐ என்ற தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் தெரியவந்துள்ளது.

தமிழகத்தில் ஐஐடி மற்றும் என்ஐடி போன்ற உயர் தொழில்நுட்பக் கல்லூரிகளில் சேர்ந்து படிக்கும் பழங்குடியின மாணவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்தது. இந்த குறைபாட்டினைக் களையும் வகையில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் தாட்கோ மூலம் முதலாமாண்டுக்கு தகுதியான 50 பழங்குடியின மாணவர்களைத் தேர்வு செய்து, அவர்களுக்கு தனியார் பயிற்சி நிறுவனத்தின் மூலம் உயர் சிறப்பு பயிற்சி அளித்து, ஐஐடி மற்றும் என்ஐடி கல்லூரிகளில் சேர்ப்பதற்கான திட்டம் 2013-14-ம் நிதியாண்டில் தொடங்கப்பட்டது.

ஒவ்வொரு ஆண்டும் இந்த திட்டத்துக்கு ஒரு கோடி ரூபாய் வரை நிதி ஒதுக்குவதென்று அரசாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில், இத்திட்டம் தொடங்கிய வேகத்தில் முடக்கப்பட்டிருப்பதாக, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் பெறப்பட்ட தகவல்கள் அடிப்படையில், மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் செ.கார்த்திக் தெரிவித்துள்ளார்.

செ.கார்த்திக்

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: ஒருவேளை இத்திட்டம் திட்டமிட்டபடி செயல்பட தொடங்கியிருந்தால், கடந்த 12 ஆண்டுகளில் 600 பழங்குடியின மாணவர்களின் ஐஐடி மற்றும் என்ஐடி போன்ற உயர் தொழில்நுட்பக் கல்லூரிகளில் பயிலும் கனவு நனவாகியிருக்கும். ஆனால், ஒரு மாணவர் கூட இந்த திட்டத்தில் பயன்பெறவில்லை. மேலும், இதற்காக ஒதுக்கப்பட்ட நிதியும் பயன்படுத்தப்படவில்லை.

எனவே, இந்த கல்வியாண்டு முதலே 100 பழங்குடியின மாணவர்களை உடனடியாக தேர்வு செய்து, அவர்களை ஐஐடி மற்றும் என்ஐடி கல்லூரிகளி ல் சேர்ப்பதற்கான பயிற்சிகள் கொடுக்கும் திட்டத்தை தொடங்க வேண்டும். இதற்காக ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். இத்திட்டம் சிறப்பாக செயல்படுவதற்கு மாவட்டந்தோறும் கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின அலுவலர்கள் உள்ளடக்கிய குழு அமைத்து, மாவட்ட ஆட்சியரின் மேற்பார்வையில் காண்காணிக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x