Published : 19 Jun 2025 07:25 PM
Last Updated : 19 Jun 2025 07:25 PM
சென்னை: அரசுப் பள்ளிகளில் சிறப்பு பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்துக்கான வழிகாட்டுதல்களை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.
இது குறித்து பள்ளிக் கல்வித் துறை செயலர் பி.சந்தரமோகன் வெளியிட்ட அரசாணையின் விவரம்: அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் பயிலும் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு கல்வி வழங்குவதற்காக சிறப்பு பி.எட்., பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்பட்டன. அந்த பணியிடங்களுக்கென பிரத்யேக விதிகள் எதுவும் இதுவரை வகுக்கப்படாமல் இருந்தது. அதைக் கருத்தில் கொண்டு சிறப்பு பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்துக்கான விதிமுறைகளை வகுக்குமாறு பள்ளிக் கல்வி இயக்குநரகம் தமிழக அரசிடம் வேண்டுகோள் விடுத்தது.
இது தொடர்பாக, தேசிய ஆசிரியர் கல்வி குழுமம் (என்சிஇஆர்டி) சில விதிகளை வகுத்துள்ளது. அதேபோல் இந்திய புனர்வாழ்வு குழுமமும் (ஆர்சிஐ) சில வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அவற்றின் அடிப்படையில் சிறப்பு பட்டதாரி ஆசிரியர்களுக்கான விதிகள் வகுக்கப்பட்டு, அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி நிரந்தரப் பணியிடங்களில் உள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கான விதிகள் அனைத்தும் தற்காலிக சிறப்பு பட்டதாரி ஆசிரியர்களுக்கும் பொருந்தும். அதில் சில விதிகள் மட்டும் சூழலுக்கேற்ப மாற்றம் செய்யப்படுகிறது.
அந்த வகையில் பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநர்தான் (பணியாளர் நலன்) சிறப்பு பட்டதாரி ஆசிரியர்களுக்கான நியமன அதிகாரியாக செயல்படுவார். பொதுப் பிரிவில் 53 வயதும், பிற பிரிவுகளில் 58 வயதையும் நிறைவு செய்தவர்களுக்கு இந்தப் பணியில் சேர தகுதி இல்லை. பணியில் சேருபவர்கள் கட்டாயம் ஆசிரியர் தகுதித் தேர்வில் (டெட்) தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.
மேலும், அந்த பணியிடங்களுக்கு 12 வகையான கல்வித் தகுதிகளும் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையிலேயே சிறப்பு பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நியமிக்கப்பட வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT