Published : 18 Jun 2025 05:36 AM
Last Updated : 18 Jun 2025 05:36 AM
சென்னை: தமிழகத்தில், வேளாண் மற்றும் உணவு சூழல் அமைப்பை மேம்படுத்துவது தொடர்பாக, மாநில அரசுடன், சென்னை ஐஐடி இணைந்து செயல்பட உள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதுதொடர்பாக, மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தின் வேளாண் மற்றும் உணவு பதப்படுத்துதல் துறையை மேம்படுத்தும் நோக்கில், மாநில அரசுடன், சென்னை ஐஐடி கூட்டு முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதன் மூலம், தமிழகத்தில் நிலையான கிராமப்புற மேம்பாடு, வேளாண் வணிக கண்டுபிடிப்பு உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படும்.
உணவு பதப்படுத்துதல் மற்றும் ஏற்றுமதியை மேம்படுத்துவதற்கான உயர் அமைப்பாக செயல்படும் தமிழ்நாடு உணவு பதப்படுத்துதல் மற்றும் வேளாண் ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகத்துடன், சென்னை ஐஐடி புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. தலைமைச் செயலகத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறையின் செயலர் அதுல் ஆனந்த் முன்னிலையில் அண்மையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
அப்போது பேசிய அதுல் ஆனந்த், கிராமப்புற விநியோகச் சங்கிலிகளை மாற்றுவதற்கும், அறுவடைக்குப் பிந்தைய இழப்புகளைக் குறைப்பதற்கும், புதுமை மற்றும் ஒத்துழைப்பு மூலம் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பதற்கும் மாநில அரசின் நடவடிக்கைகளை எடுத்துரைத்தார்.
இந்த கூட்டு முயற்சியின் நன்மைகளை குறிப்பிட்ட ஐஐடி இயக்குநர் வி.காமகோடி, ஆராய்ச்சி, பயிற்சி, தொழில்நுட்பம் மற்றும் சந்தைப்படுத்தும் திறன்கள் ஆகியவற்றின் மூலம் தமிழத்தின் வேளாண் வணிகச் சூழல் அமைப்பில் செயல்பாட்டுத் திறன், சந்தைப் படுத்துதல், நிலைத் தன்மையை மேம்படுத்தப்படும்" என்றார்.
தமிழ்நாடு உணவு பதப்படுத்துதல் மற்றும் வேளாண் ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகத்தின் நிர்வாக இயக்குநரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான டாக்டர் கே. அழகுசுந்தரம், தமிழகத்தில் கிராமப்புற நுண் நிறுவனங்களை உலகளாவிய சந்தைகளுடன் இணைப்பதன் உத்திசார் முக்கியத்துவத்தையும், உணவு பதப்படுத்தும் துறையில் திறன் மற்றும் போட்டித் தன்மையை அதிகரிக்க கல்வி ஒத்துழைப்பை மேம்படுத்துவதையும் விளக்கினார்.
இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம், வேளாண் வணிகத்தில் கிராமப்புற இளைஞர்களுக்குத் திறன் அளிக்கப்படும். விநியோகச் சங்கிலிகளை மேம்படுத்தி உணவு வீணாவது குறைக்கப்படும், சந்தை அணுகல் மற்றும் ஏற்றுமதி திறன் மேம்படுத்தப்படும். பேக்கேஜிங், பிராண்டிங் மற்றும் தயாரிப்பு சந்தைப்படுத்தலும் மேம்படுத்தப்படும். அரசு திட்டங்கள் மதிப்பீடு செய்யப்படும்.
புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்ச்சியில், ஐஐடி டீன் மனு சந்தானம், மேலாண்மை ஆய்வுத் துறைத் தலைவர் சஜி மேத்யூ, தஞ்சாவூர் தேசிய உணவு தொழில்நுட்பம், தொழில்முனைவோர் மற்றும் மேலாண்மை நிறுவன இயக்குநர் வி. பழனிமுத்து, தமிழ்நாடு டாக்டர் ஜெ ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் என். பெலிக்ஸ், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத் துணைவேந்தர் டாக்டர் கே.என். செல்வகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT