Published : 18 Jun 2025 01:07 AM
Last Updated : 18 Jun 2025 01:07 AM
தனியார் பள்ளிகளில் இருந்து விலகி அரசுப் பள்ளிகளில் சேர்ந்த மாணவர்களின் கற்றல் நிலையை அறிவதற்கு மதிப்பீட்டுத் தேர்வு நடத்தப்பட உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
தமிழக பள்ளிக்கல்வித் துறையின்கீழ் 37,553 அரசுப்பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் சுமார் 52 லட்சம் மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். மாணவர்கள் நலனுக்காக கற்பித்தல், கற்றல் சார்ந்து எண்ணும்-எழுத்தும், காலை உணவு, ஸ்மார்ட் வகுப்பறைகள் உட்பட பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. இதற்கிடையே அரசுப் பள்ளிகளில் 2025-26-ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை கடந்த மார்ச் 1-ம் தேதி தொடங்கியது.
இதையடுத்து பெற்றோர்கள் பலர் ஆர்வமுடன் தங்கள் பிள்ளைகளை சேர்த்தனர். அதன்படி நடப்பு கல்வியாண்டில் சுமார் 2 லட்சம் மாணவர்கள் வரை புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் கடந்த ஜூன் 2-ம்தேதி திறக்கப்பட்டன. தொடர்ந்து பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு கற்பித்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் நடப்பாண்டு தனியார் பள்ளிகளில் இருந்து விலகி அரசுப் பள்ளிகளில் சேர்ந்த மாணவர்களின் கற்றல் நிலையை அறிவதற்கு பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் சிலர் கூறும்போது, ‘‘நடப்பு கல்வியாண்டில் தனியார் பள்ளிகளில் இருந்து விலகி ஆயிரக்கணக்கான மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். அவ்வாறு அரசுப் பள்ளிகளில் 2 முதல் 5-ம் வகுப்பு வரை புதிதாக சேர்ந்த மாணவர்களின் அடிப்படை கற்றல் நிலையை அறிவதற்கு மதிப்பீட்டுதேர்வு(BASE LINE ASSESSMENT) நடத்தப்பட உள்ளது. இந்த மதிப்பீட்டு பணிகளை பள்ளிக்கல்வித் துறையின் டிஎன்எஸ்இடி செயலி மூலம் ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது’’என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT