Published : 16 Jun 2025 03:04 PM
Last Updated : 16 Jun 2025 03:04 PM

வைர விழா ஆண்டில் கரூர் அரசு கலை கல்லூரி!

கரூர் அரசு கலைக் கல்லூரி இன்று (ஜூன் 16) வைர விழா ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. கரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த மாணவ- மாணவிகள் உயர் கல்வி பயில அண்டை மாவட்டங்களுக்குச் சென்று வந்த நிலையில், கரூர் தாந்தோணிமலை பகுதியில் 1966-ல் அரசு கலைக் கல்லூரி தொடங்கப்பட்டது.

அப்போதைய தமிழக முதல்வர் எம்.பக்தவத்சலம் 1966, அக்.5-ம் தேதி கல்லூரியைத் திறந்து வைத்தார். புதுமுக வகுப்புடன் தொடங்கி இக் கல்லூரியில் படிப்படியாக இளநிலை, முதுநிலை, ஆய்வு படிப்புகள் தொடங்கப்பட்டன. இக்கல்லூரி 1972- 1973-ம் கல்வியாண்டில் இருந்து மாணவிகளும் சேர்க்கப்பட்டு, இருபாலர் கல்லூரியாகச் செயல்பட்டு வருகிறது. தொடக்கத்தில் சென்னைப் பல்கலைக்கழக ஆளுகையின் கீழும், அதன்பிறகு பாரதி தாசன் பல்கலைக்கழக ஆளுகையின் கீழும் செயல்பட்டு வந்தது.

2007 - 2008-ம் கல்வியாண்டில் தன்னாட்சி அந்தஸ்து பெற்ற அரசுக் கல்லூரியாகச் செயல்பட்டு வரும் இக்கல்லூரியில் கடந்தாண்டு மாணவ- மாணவிகள் 4,285 பேர் பயின்றனர். நிகழ் கல்வியாண்டில் இளநிலை 2, 3-ம் ஆண்டு, முதுநிலை 2-ம் ஆண்டு மாணவர்களுக்கு இன்று (ஜூன் 16) வகுப்புகள் தொடங்குகின்றன.

கல்லூரி தொடங்கப்பட்டு 59 ஆண்டுகளை நிறைவு செய்து, வைர விழா ஆண்டான 60-ம் ஆண்டில் இன்று (ஜூன் 16) நுழைகிறது. இளநிலை படிப்பில் 195 இடங்கள் அதிகரிக்கப்பட்டு 1,485 இடங்களாக உயர்த்தப்பட்டுள்ளதால் நிகழாண்டு மாணவ- மாணவிகள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்.

குளித்தலை, தரகம்பட்டி, அரவக்குறிச்சி ஆகிய இடங்களில் அரசு கலைக் கல்லூரிகள் இருந்தாலும், மாவட்டத்தைச் சேர்ந்த பெரும்பாலான மாணவ- மாணவிகள் கரூர் அரசு கல்லூரியையே தேர்வு செய்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். கல்லூரியின் 60-ம் ஆண்டு நிறைவு விழாவை அடுத்தாண்டு கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளது என கல்லூரி முதல்வர் க.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x