Published : 16 Jun 2025 05:07 AM
Last Updated : 16 Jun 2025 05:07 AM

தமிழகத்தில் குரூப் 1, 1 ஏ முதல்​நிலை தேர்வை 1.86 லட்​சம் பேர் எழு​தினர்: டிஎன்​பிஎஸ்சி தலை​வர் தகவல்

டிஎன்பிஎஸ்சி குரூப்-1 முதல்நிலைத்தேர்வு நேற்று நடைபெற்றது. சென்னை எழும்பூர், மாநில பெண்கள் மேல்நிலைப் பள்ளி தேர்வு மையத்தில் ஆய்வு மேற்கொண்ட டிஎன்பிஎஸ்சி தலைவர் எஸ்.கே.பிரபாகர். | படம்: எஸ்.சத்தியசீலன் |

சென்னை: குரூப்-4 தேர்வுக்கான காலி பணியிடங்கள் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக டிஎன்பிஎஸ்சி தலைவர் பிரபாகர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் துணை ஆட்சியர், டிஎஸ்பி உள்ளிட்ட பணிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-1 மற்றும் 1-ஏ முதல்நிலை தேர்வு மாநிலம் முழுவதும் நேற்று நடைபெற்றது. சென்னை எழும்பூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்தை டிஎன்பிஎஸ்சி தலைவர் எஸ்.கே.பிரபாகர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: குரூப்-1 தேர்வில் எளிமைப்படுத்தப்பட்ட ஓஎம்ஆர் விடைத்தாள் வழங்கப்பட்டுள்ளது. இது மாணவர்களுக்கு வசதியாக இருக்கும். குரூப்-1 முதல்நிலை தேர்வு முடிவுகள் 2 மாதத்துக்குள் வெளியிடப்படும். தொடர்ந்து, 3 மாதங்களில் முதன்மை தேர்வு நடைபெறும்.

டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் சரியான முறையில் திட்டமிடப்பட்டு சிறப்பாக நடத்தப்படுகின்றன. முன்பெல்லாம் 90 தேர்வுகள் வரை நடைபெறும். தற்போது அனைத்தையும் ஒருங்கிணைத்து 7 தேர்வுகள்தான் நடத்தப்படுகின்றன. இதன்மூலம், மாணவர்கள் பல்வேறு தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பதில் குழப்பம் ஏற்படுவதை தவிர்க்கலாம். தேர்வு நடத்துவதற்கான நேரம், செலவு உள்ளிட்டவையும் குறைந்துள்ளது.

தேர்வை எளிதாக எதிர்கொள்ள, ஒவ்வொரு பாடத் திட்டத்தையும் 10 பகுதிகளாக பிரிக்கிறோம். அனைத்து காலி பணியிடங்கள் வரும் வரை காத்திருக்காமல், தொடக்கத்தில் உள்ள காலி இடங்களை உத்தேசமாக வைத்து தேர்வு நடத்தப்படுகிறது. பின்னர் காலி பணியிடம் தேவைக்கேற்ப அதிகரிக்கப்படுகிறது. குரூப்-4 தேர்வுக்கு காலி பணியிடங்கள் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

டிஎன்பிஎஸ்சி மூலம் கடந்த 2024-ம் ஆண்டு ஒட்டுமொத்தமாக 10,701 பேருக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டன. இந்த ஆண்டில் ஜனவரி முதல் இதுவரை 10,227 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஆண்டு இறுதிக்குள் மேலும் 12,231 பேருக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x