Published : 15 Jun 2025 12:29 AM
Last Updated : 15 Jun 2025 12:29 AM
தஞ்சாவூர்: தஞ்சாவூர் சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் 2025-2026-ம் ஆண்டுக்கான பொறியியல் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில், சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் பல்வேறு பி.டெக். படிப்புகளுக்கான சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியலில் 4 மாணவிகள் முன்னிலையில் உள்ளனர். முதல் பிரிவில் (ஸ்ட்ரீம் 1) (ஜேஇஇ மெயின் & 12-ம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் 50 சதவீத இடங்கள்) ஆந்திரப் பிரதேசத்தின் கர்னெலம்பாளையத்தில் உள்ள சைதன்யா ஜூனியர் கல்லூரியைச் சேர்ந்த அகேலா மேகவன் சர்மா 99.39 மதிப்பெண்களுடன் முதலிடம் பிடித்துள்ளார்.
இவர் 12-ம் வகுப்பில் 1000-க்கு 991 மதிப்பெண்களும், ஜேஇஇ மெயின் தேர்வில் 99.69 மதிப்பெண்களும் பெற்றிருந்தார். மேலும், தெலங்கானாவின் பேகம்பேட்டையில் உள்ள சைதன்யா ஜூனியர் கல்லூரியைச் சேர்ந்த புர்ரா நிஷிதா 98.30 மதிப்பெண்களுடன் 2-ம் இடத்தைப் பிடித்தார். இரண்டாம் பிரிவில்(ஸ்ட்ரீம் 2) 12-ம் வகுப்பு மொத்த மதிப்பெண்களின் அடிப்படையில், தெலங்கானாவின் கம்மம் எஸ்.ஆர்.ஜூனியர் கல்லூரியைச் சேர்ந்த இந்தூரி ரஷ்மிதா 1000-க்கு 996 மதிப்பெண்களுடன் முதலிடத்தையும், சென்னை கே.கே.நகரில் உள்ள பிஎஸ்பிபி பள்ளியைச் சேர்ந்த அக் ஷயா சிவகுரு 500-க்கு 498 மதிப்பெண்களுடன் 2-ம் இடத்தையும் பிடித்தனர்.
இணையவழி மூலம்... விண்ணப்பங்கள் நேற்று மாலை 5 மணி வரை பெறப்பட்டு, உடனடியாக தர வரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது. எந்த நுழைவுத் தேர்வையும் நடத்தாமல் ஜேஇஇ முதன்மை தேர்வு மற்றும் 12-ம் வகுப்பு மதிப்பெண்களை சேர்த்து, அதன் அடிப்படையில் மாணவர் சேர்க்கையை சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலைக்கழகம் நடத்துகிறது. இவ்வாறு சேர்க்கை நடத்தும் ஒரே நிகர்நிலைப் பல்கலைக்கழகம் சாஸ்த்ரா மட்டும்தான்.
விரிவான தரவரிசை பட்டியல்கள் www.sastra.edu என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தகுதி அடிப்படையிலான வெளிப்படையான மாணவர் சேர்க்கை இணையவழி மூலம் இன்று (ஜூன் 15) முதல் நடைபெற உள்ளது. முதலில் மாணவர்கள் பாடப் பிரிவை தேர்ந்தெடுக்க வசதியாக வாய்ப்புகள் வழங்கப்பட்டு, பின்னர் இடம் ஒதுக்கீடு செய்யப்படும். தஞ்சாவூர் மற்றும் திருச்சி மாவட்டங்களை சேர்ந்த மாணவர்களுக்கு 20 சதவீத இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளன. நடப்பாண்டு ஆக.1 முதல் வகுப்புகள் தொடங்கப்படும் என்றும் சாஸ்த்ராவின் துணைவேந்தர் எஸ்.வைத்திய சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT