Published : 15 Jun 2025 12:16 AM
Last Updated : 15 Jun 2025 12:16 AM
நாடு முழுவதும் நடைபெற்ற இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வில் 12.36 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழக மாணவர் சூரியநாராயணன் தேசிய அளவில் 27-வது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
அரசு, தனியார் மருத்துவ கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகள், கால்நடை மருத்துவ படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவு தேர்வு (நீட்) அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. அதேபோல, ராணுவ நர்சிங் கல்லூரிகளில் பிஎஸ்சி நர்சிங் படிப்புக்கு நீட் தேர்வு கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இத்தேர்வை தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) ஆண்டுதோறும் நடத்திவருகிறது.
அதன்படி, இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு, நாடு முழுவதும் 552 நகரங்களில் கடந்த மே 4-ம் தேதி நடத்தப்பட்டது. தேர்வு எழுத 22.76 லட்சம் மாணவ, மாணவிகள் விண்ணப்பித்த நிலையில், 22.09 லட்சம் பேர் தேர்வு எழுதினர். கடந்த 2024-ம் ஆண்டில் 24.06 லட்சம் பேர் பதிவு செய்து, 23.33 லட்சம் பேர் தேர்வு எழுதி இருந்தனர். அதைவிட இந்த ஆண்டில் விண்ணப்பித்த மற்றும் எழுதிய மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தேர்ச்சி சரிவு: இந்நிலையில், நீட் தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. நாடு முழுவதும் மொத்தம் 12 லட்சத்து 36,531 பேர் (55.96%) தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டைவிட 0.45% சதவீதம் குறைவு. அதேபோல, தமிழகத்தை பொருத்தவரை இந்த ஆண்டு ஒரு லட்சத்து 35,715 பேர் தேர்வு எழுதியதில் 76,181 பேர் (56.13%) தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த 2024-ல் ஒரு லட்சத்து 52,919 பேர் தேர்வு எழுதி, 89,199 பேர் (58.47%) தேர்ச்சி பெற்றிருந்தனர். அந்த வகையில், தமிழகத்தில் கடந்த ஆண்டைவிட தேர்ச்சி விகிதம் 2.34 சதவீதம் குறைந்துள்ளது.
நீட் தேர்வு மொத்தம் 720 மதிப்பெண்ணுக்கு நடத்தப்பட்டது. இதில், ராஜஸ்தான் மாணவர் மகேஷ்குமார் 686 மதிப்பெண்களுடன் தேசிய அளவில் முதல் இடம் பெற்று சாதித்துள்ளார். 2, 3-ம் இடங்களில் உத்கர்ஷ் அவதியா (மத்திய பிரதேசம்), கிரிஷாங் ஜோஷி (மகாராஷ்டிரா) உள்ளனர். தமிழகத்தில் திருநெல்வேலி மாணவர் எஸ்.சூரியநாராயணன் 665 மதிப்பெண் பெற்று, மாநிலத்தில் முதல் இடமும், தேசிய அளவில் 27-வது இடமும் பிடித்துள்ளார். ஒட்டுமொத்தமாக முதல் 100 இடங்களில் தமிழக மாணவர்கள் 6 பேர் இடம்பெற்றுள்ளனர்.
கடந்த ஆண்டு நீட் தேர்வில் 67 பேர் முழு மதிப்பெண் பெற்றது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த முறை தேர்வு வினாத்தாள் கடினமாக இருந்ததால் யாரும் 720-க்கு 720 எடுக்கவில்லை. ராஜஸ்தான் மாணவர் எடுத்துள்ள 686 மதிப்பெண்தான் அதிகபட்சமாக உள்ளது. இதுதவிர ஓபிசி - 5 லட்சத்து 64,611 பேர், எஸ்சி - ஒரு லட்சத்து 68,873 பேர், எஸ்டி - 67,234 பேர், பொது பிரிவு (யுஆர்) - 3 லட்சத்து 38,728 பேர், இடபிள்யூஎஸ் - 97,085 பேர் இடம்பிடித்துள்ளனர். மாற்றுத் திறனாளிகள் 3,673 பேரும் மருத்துவம் படிக்க தகுதி பெற்றுள்ளனர்.
கட்ஆஃப் மதிப்பெண்: நீட் தேர்வில் தகுதி பெற்ற மாணவர்களுக்கான கட்ஆஃப் மதிப்பெண் விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, பொது பிரிவு மற்றும் இடபிள்யூஎஸ் பிரிவினருக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ள 686 முதல் 114 வரையான மதிப்பெண்களில் (50 பெர்சன்டைல்) 11 லட்சத்து 01,151 பேர் இடம்பெற்றுள்ளனர். ஓபிசியில் 143 முதல் 113 வரையான மதிப்பெண்களில் (40-50 பெர்சன்டைல்) 88,692 பேரும், எஸ்சி, எஸ்டி பிரிவில் 143 முதல் 113 மதிப்பெண்களில் (40-50 பெர்சன்டைல்) 45,935 பேரும் இடம்பிடித்துள்ளனர். பொது பிரிவு & இடபிள்யூஎஸ் மாற்றுத் திறனாளிகளுக்கு 143 முதல் 127 வரையான மதிப்பெண்களில் (45-50 பெர்சன்டைல்) 472 பேரும், ஓபிசி, எஸ்சி, எஸ்டி மாற்றுத் திறனாளி பிரிவில் 126 முதல் 113 வரையான மதிப்பெண்களில் (40-45 பெர்சன்டைல்) 281 பேரும் இடம்பெற்றுள்ளனர். கடந்த ஆண்டைவிட கட்ஆஃப் மதிப்பெண் சற்று குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT