Published : 13 Jun 2025 08:39 AM
Last Updated : 13 Jun 2025 08:39 AM
சென்னை: மருத்துவ படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கு பாதிப்பு இருக்காது என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதிபடத் தெரிவித்தார்.
ஜாபர்கான்பேட்டையில் உள்ள சென்னை உயர்நிலைப்பள்ளியில் மூலதன நிதியின் கீழ் ரூ.8 கோடி மதிப்பீட்டில் கூடுதல் பள்ளிக் கட்டடம் கட்டும் பணியை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அடிக்கல் நாட்டித் தொடங்கி வைத்தார். தொடர்ந்து, மாநகராட்சி சமூக நலக் கூடம் புனரமைக்கும் பணி, சுந்தரமூர்த்தி தெரு முதல் கண்ணம்மாள் தெரு வரையிலான கால்வாய் மறுசீரமைப்பு பணி, அம்பேத்கர் விளையாட்டுத் திடலில் 5 லட்சம் லிட்டர் கொள்ளளவுடைய எகோ பிளாக் மூலம் மழைநீர் சேமிக்கும் வசதி ஆகியவற்றை அமைச்சர் தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது: முதுநிலை மருத்துவ இடங்களுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு விவகாரத்தில் நல்ல முடிவு கிடைக்கும் என நம்புகிறோம். பிடிஎஸ் உள்ளிட்ட படிப்புகளுக்கான விண்ணப்பங்களில் எவ்வித குழப்பமும் இல்லை. இதற்கான கலந்தாய்வு தேதியை மத்திய அரசு அறிவிக்கவில்லை. மாணவர்களுக்கு எவ்வித பாதிப்பும் இருக்காது. முகக்கவசம் கட்டாயம் என மத்திய அரசு சொல்லவில்லை. அவர்களின் வழிகாட்டுதல்களை தமிழக அரசு தொடர்ந்து கண்காணித்து வருகிறது.
ஒமைக்ரானின் வீரியமில்லாத வகை பாதிப்பு என்பதை கண்டறிந்துள்ளோம். மக்களின் நோயெதிர்ப்பு சக்தியை ஆய்வு செய்ததில், தமிழகத்தில் 97 சதவீதமானோருக்கு நோயெதிர்ப்பு சக்தி இருப்பது தெரியவந்தது. எனவே, மக்கள் அச்சமடைய தேவையில்லை. நோயெதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள், கர்ப்பிணி பெண்கள், முதியோர், இணை நோய் பாதிப்பு உள்ளவர்கள் பொது இடங்களுக்குச் செல்லும்போது முகக்கவசம் அணிந்தால் நல்லது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
நிகழ்ச்சிகளில், மண்டலக் குழுத் தலைவர் எம்.கிருஷ்ணமூர்த்தி, மாமன்ற உறுப்பினர்கள் ப. சுப்பிரமணி, எம். ஸ்ரீதரன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT