Published : 13 Jun 2025 12:48 AM
Last Updated : 13 Jun 2025 12:48 AM

உயர்கல்வி வழிகாட்டி ஒருங்கிணைப்பாளர் நியமனம்: தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்

அரசுப் பள்ளிகளில் 3 ஆண்டுகள் உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியராக பணிபுரிந்தவர்கள் விலக விரும்பினால் தகுதியான மற்ற ஆசிரியர்களை தேர்வு செய்யலாம் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து மாதிரிப் பள்ளிகள் உறுப்பினர் செயலர் இரா.சுதன் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை விவரம்:

உயர்கல்வி வழிகாட்டி திட்டத்தின் கீழ் 2023-24, 2024-25-ம் கல்வியாண்டுகளில் அரசுப் பள்ளிகளில் உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியர்களை நியமிக்க தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. அந்த ஆசிரியர்களின் பெயர்களை எமிஸ் தளத்தில் பதிவு செய்யுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டது.

அனைத்து மாணவர்களுக்கும் உயர்கல்வி சார்ந்த விழிப்புணர்வு மற்றும் தகவல்கள் முழுமையாக சென்றடைவதன் வாயிலாக மட்டுமே அவர்கள் உயர்கல்வி தொடர்வதை உறுதி செய்ய இயலும். இந்த இலக்கை அடைவதற்கு ஏதுவாக பள்ளிகளில் ஏற்கெனவே உள்ள வழிகாட்டி ஆசிரியர்கள் ஒருங்கிணைப்பாளர்களாக மாற்றப்பட்டனர். அதனுடன், கூடுதலாக 9 முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள வகுப்பு ஆசிரியர்கள் உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியர்களாகவும் நியமிக்கப்பட்டனர்.

நடப்பு கல்வியாண்டில் உயர்கல்வி வழிகாட்டி ஒருங்கிணைப்பாளர்களில் எவரேனும் பணிபுரிந்த பள்ளியிலிருந்து மாறுதல் பெற விரும்பினாலோ, ஓய்வு பெற்றாலோ, பொறுப்பிலிருந்து விலக விரும்பினாலோ அவருக்கு பதிலாக தகுதியுள்ள மற்றொரு ஆசிரியரை புதிய ஒருங்கிணைப்பாளராக நியமிக்க வேண்டும். அதன்படி 250 மாணவர்களுக்கு ஓர் உயர்கல்வி வழிகாட்டி ஒருங்கிணைப்பாளர் என்ற விகிதத்தில் சார்ந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் தேர்வு செய்து ஜூன் 25-ம் தேதிக்குள் நியமிக்க வேண்டும். தொடர்ந்து அதை எமிஸ் தளத்தில் புதுப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x