Published : 11 Jun 2025 07:19 PM
Last Updated : 11 Jun 2025 07:19 PM
புதுச்சேரி: புதுச்சேரி மத்தியப் பல்கலைக்கழகத்தில் 3 ஆண்டுகளுக்கு சேர்த்து பட்டமளிப்பு விழா வரும் நவம்பர் அல்லது டிசம்பருக்குள் நடத்தப்படும். காலியாக உள்ள பணியிடங்களில் 100 பேராசிரியர்களை நியமிக்க விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று துணைவேந்தர் பிரகாஷ்பாபு தெரிவித்தார்.
புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பிரகாஷ்பாபு பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக செய்தியாளர்களிடம் இன்று கூறியது: “புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகம் முதல்முறையாக தேசிய தர மதிப்பீட்டுக்குழு (நாக்) "ஏ பிளஸ்" சான்றிதழை தற்போது பெற்றுள்ளது. நடப்பு 2025-26 கல்வியாண்டில் ஆறு புதிய படிப்புகளை அறிமுகம் செய்கிறது. அதன்படி முதுகலை காட்சிக் கலை, எம்எஸ்சி அளவுசார் நிதி, பிடெக் சுற்றுச்சூழல் பொறியியல், பிஎஸ்சி உளவியல், பிஎஸ்சி நிலைத்தன்மை மற்றும் காலநிலை மாற்றம், பிஎஸ்சி உயிர் தகவலியல் படிப்புகள் நடைமுறைக்கு வருகிறது.
நடப்பு கல்வியாண்டில் சமுதாயக் கல்லூரிகளை மாஹே, ஏனாம், லட்சத்தீவுகளில் அமைக்கிறோம். கல்வி அமைச்சகத்தின் உயர் கல்வி அடிப்படை வசதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் புதுச்சேரி பல்கலைக்கழக முதன்மை வளாகம், விஜயபுரம் வளாகத்தில் புதிய கல்வி கட்டடம், விடுதிகள் கட்டுமானம் ஆகியவற்றுக்கு ரூ.5.61கோடி ஒதுக்கீடு செய்துள்ளோம். புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் ஆய்வக வசதிகளை மேம்படுத்த ரூ. 49 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி பல்கலைக்கழக அந்தமான் வளாகம் ரூ.14.8 கோடியில் விரிவாக்கம் செய்யப்படும் பணி ஆறு மாதங்களில் நிறைவடையும். இந்திய அரசின் தேசிய கடல் சார் தொழில்நுட்ப நிறுவனம் அந்தமான் நிகோபார் தீவுகளில் கடல் சார் உயிரியல் பாடத்திட்டத்துக்கு உதவித்தொகை மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டுக்கு ரூ.4.2 கோடி அனுமதித்துள்ளது. மாணவ நலனுக்காக டீன் தலைமையில் தனி அலுவலகம் அமைத்துள்ளோம்.
மாணவர்களுக்கு ஆலோசனை மையம் நிறுவும் திட்டம் உள்ளது. எஸ்சி, எஸ்டி, ஓபிசி, இடபுள்யூஎஸ் மாணவர்களுக்கு உதவித்தொகைகள் சரியாக தரப்படுகின்றன. மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு நூறு சதவிகிதம் இலவச கல்வி தரப்படுகிறது. மாணவர்கள் கலந்தாய்வு, செயல்பாடு மற்றும் அவர்கள் உரிமை போராட்டத்தை ஊக்குவிக்கும் வகையில் மாணவர்கள் குழு தேர்தல்கள் நடத்தப்படுகிறது.
கடந்த ஐந்து ஆண்டுகளில் ரூ.82 கோடி மதிப்பிலான மொத்தம் 252 ஆராய்ச்சி திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன. சுமார் 6176 ஆராய்ச்சி கட்டுரைகள் வெளியிடப்பட்டு 124 காப்புரிமை பெறப்பட்டுள்ளன. புதிதாக நியமிக்கப்பட்ட 116 ஆசிரியர்களுக்கு தலா ரூ. 3 லட்சம் வரை மொத்தம் ரூ.1.87 கோடி தரப்பட்டுள்ளது.
மாணவர்கள் - பேராசிரியர்கள் தொடங்கும் ஸ்டார்ட் அப் நிறுவங்களுக்கு உதவ புதுமை மற்றும் வியாபாரமயமாக்கல் மையம் அமைக்கப்பட்டுள்ளது. அடல் புதுமை திட்டத்தின் கீழ் ரூ.5 கோடி நிதியும் மையத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. பசுமை மற்றும் தொழில்நுட்பங்களைச் சார்ந்த 8 காப்புரிமைகள் ஆரம்பக்கட்ட ஸ்டார்ட் அப்களாக உருவெடுத்துள்ளன.
புதுச்சேரி மாணவர்களுக்கு 25 சதவீத இடஒதுக்கீடு அனைத்து படிப்புகளுக்கும் ஒதுக்குவது தொடர்பான முடிவு மத்திய அரசு வசம் உள்ளது. அவர்கள் அனுமதி கிடைத்தவுடன் நடைமுறைப்படுத்தப்படும். பல்கலைக்கழகத்தில் காலி பணியிடங்களை நிரப்பவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். 100 பேராசிரியர் பணியிடங்கள் நிரப்ப ஒரிரு மாதங்களில் அறிவிப்பு வெளியாகும். அதேபோல் பல்வேறு துறைகளில் நூறு பேரை நிரப்பவும் திட்டமிட்டுள்ளோம்.
ஒப்பந்த அடிப்படையில் உள்ளோர் பணிநிரந்தரம் தொடர்பாகவும் ஆலோசித்து வருகிறோம். தரவரிசை பட்டியலில் முன்னேற்றம் அடைய உரிய நடவடிக்கை எடுத்துள்ளோம். அதேபோல் 3 ஆண்டுகளாக நடக்காத பட்டமளிப்பு விழா வரும் நவம்பர் அல்லது டிசம்பரில் நடத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். அதில் பங்கேற்கும் முக்கிய பிரமுகரிடமும் பேசியுள்ளோம். மாணவருக்காக பஸ் இயக்கவும் திட்டமிட்டு பணிகள் நடக்கிறது” என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT