Last Updated : 10 Jun, 2025 06:14 PM

 

Published : 10 Jun 2025 06:14 PM
Last Updated : 10 Jun 2025 06:14 PM

கல்லூரி ஆசிரியருக்கான தேசிய நல்லாசிரியர் விருது - விண்ணப்பிக்க யுஜிசி அழைப்பு

சென்னை: கல்லூரி ஆசிரியர்களுக்கான தேசிய நல்லாசிரியர் விருதுக்கு ஜூலை 9-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று யுஜிசி அறிவித்துள்ளது.

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ராதா கிருஷ்ணன் பிறந்த நாளான செப்.5-ம் தேதி ஆண்டுதோறும் ஆசிரியர் தினமாக கொண்டாடப் படுகிறது. இந்த நாளில் கற்றல், கற்பித்தல் பணியில் சிறந்து விளங்கும் பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு மத்திய, மாநில அரசுகளால் நல்லாசிரியர் விருதுகள் வழங்கப் படுகின்றன. கல்லூரி ஆசிரியருக்கான தேசிய நல்லாசிரியர் விருது பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) சார்பில் 2023-ம் முதல் வழங்கப்படுகிறது.

நடப்பாண்டும் தேசிய நல்லாசிரியர் விருதுக்கான அறிவிப்பை யுஜிசி சமீபத்தில் வெளியிட்டது. அதன் விவரம்: 2025-ம் ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருதுக்கு உயர்கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் பேராசிரியர்கள், ஐடிஐ பயிற்றுநர்கள், பாலிடெக்னிக் விரிவுரையாளர்கள் ஆகியோர் www.awards.gov.in என்ற இணையதளத்தில் ஜூலை 9-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் ஆசிரியர்கள் கற்பித்தல் பணியில் செய்த சிறந்த முன்னெடுப்புகள், ஆராய்ச்சிகள் உள்ளிட்ட விவரங்களை தொகுத்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். கல்லூரி முதல்வர்கள், இயக்குநர்கள் மற்றும் துணை வேந்தர்கள் விண்ணப்பிக்க முடியாது. இது தவிர விண்ணப்பிப்பவர்கள் குறைந்த பட்சம் 5 ஆண்டுகள் முழு நேர ஆசிரியராக பணிபுரிந்திருக்க வேண்டும்.

ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் விருதுக்கு விண்ணப்பிக்கக் கூடாது. கல்வியாளர்கள் உட்பட 5 பேர் கொண்ட குழு விருதுக்குத் தகுதியான ஆசிரியர்களைத் தேர்வு செய்யும். இதில் தேர்வாகும் சிறந்த ஆசிரியர்களுக்கு விருது, சான்றிதழ் மற்றும் ரூ.50 ஆயிரம் வழங்கப்படும். அதை குடியரசுத் தலைவர் டெல்லியில் செப். 5-ம் தேதி அளித்து கவுரவிப்பார். ஏதேனும் சந்தேகம் இருப்பின் 01129 581120 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம். இது குறித்த கூடுதல் விவரங்களை /www.ugc.gov.in/ எனும் வலைத்தளத்தில் அறிந்துகொள்ளலாம் என்று யுஜிசி வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x