Published : 09 Jun 2025 06:14 AM
Last Updated : 09 Jun 2025 06:14 AM

2.49 லட்சம் மாணவர்கள் விண்ணப்பம்: பொறியியல் படிப்புக்கு ஜூன் 27-ல் தரவரிசை பட்டியல்

சென்னை: பொறியியல் படிப்புக்கு 2.49 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். சான்றிதழ்களை பதிவேற்றம் செய்வதற்கான காலக்கெடு இன்று முடிவடைகிறது. தரவரிசை பட்டியல் ஜூன் 27-ம் தேதி வெளியிடப்படுகிறது.

தமிழகத்தில் 440-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இக்கல்லூரிகளில் பிஇ, பிடெக் படிப்புகளில் ஏறத்தாழ 2 லட்சம் இடங்கள் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் ஆகும். இந்த இடங்களில் நடப்பு கல்வியாண்டில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு மே 7 தேதி தொடங்கி ஜூன் 6-ம் தேதி (வெள்ளிக்கிழமை) முடிவடைந்தது.

மொத்தம் 3 லட்சத்து 2 ஆயிரத்து 374 பேர் விண்ணப்பம் பதிவுசெய்துள்ளனர். அவர்களில் 2 லட்சத்து 49 ஆயிரத்து 883 பேர் மட்டுமே விண்ணப்ப கட்டணத்தை செலுத்தியுள்ளனர். விண்ணப்பக் கட்டணம் செலுத்தியவர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். கடைசி நாள் நிலவரப்படி, விண்ணப்பக் கட்டணத்தை செலுத்திய மாணவர்களில் 2 லட்சத்து 26 ஆயிரத்து 359 பேர் தேவையான சான்றிதழ்களை பதிவேற்றம் செய்துள்ளனர்.

ஆன்லைனில் விண்ணப்பித்த மாணவர்கள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்வதற்கான காலக்கெடு இன்றுடன் (9-ம் தேதி) முடிவடைகிறது. எனவே, மாணவர்கள் இன்று நள்ளிரவு வரை சான்றிதழ்களை பதிவேற்றம் செய்து விண்ணப்பப் பதிவை முழுமைசெய்யலாம்.

தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் ஏற்கெனவே அறிவித்தபடி, பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு ஜூன் 11-ம் தேதி ஆன்லைனில் ரேண்டம் எண் ஒதுக்கீடு செய்யப்படும். அதைத்தொடர்ந்து, இணைய வழியிலான சான்றிதழ் சரிபார்ப்பு ஜூன் 20-ம் தேதி வரை நடைபெறும். ஜூன் 27-ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும். கலந்தாய்வு தொடங்கும் நாள் பின்னர் அறிவிக்கப்படும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x