Published : 03 Jun 2025 03:10 PM
Last Updated : 03 Jun 2025 03:10 PM
உடுமலை: மாணவர் சேர்க்கைக்கு தனியார் பள்ளிகள் தவமிருக்கும் சூழலில் உடுமலை அருகே அரசு பள்ளி ஒன்றில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளின் 70 மாணவர்கள் புதிதாக சேர்ந்துள்ளனர். எண்ணிக்கை அதிகரித்து விட்டதால் மாணவர் சேர்க்கையை பள்ளி நிர்வாகம் நிறுத்தி வைத்துள்ளது. திருப்பூர் மாவட்டம் உடுமலை ஒன்றியம் சின்னவீரம்பட்டி ஊராட்சியில் அரசு நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளி கடந்த 1925-ம் ஆண்டு தொடங்கப்பட்டு 100 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
கடந்த 2012-ம் ஆண்டு வரை இப்பள்ளியின் மாணவர் எண்ணிக்கை 160 மற்றும் அதற்கும் குறைவாகவே இருந்தது. அதன் பின் பொறுப்பேற்ற பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் முன்னாள் மாணவர் சங்க நிர்வாகிகளின் முயற்சியால் தரமான கல்வி, தூய்மையான பள்ளி வளாகம், கழிவறை, கணினி ஆய்வகம், ஹைடெக் லேப், தமிழ் மற்றும் ஆங்கில வழி வகுப்புகள், அரசு அனுமதி உடன் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடக்கம் என பள்ளியின் செயல்பாடுகள் அப்பகுதி மக்களிடையே பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
இதனால் சின்னவீரம்பட்டி ஊராட்சி மட்டுமல்லாது அதனை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்தும் ஏராளமான பெற்றோர் தங்களது குழந்தைகளை இப்பள்ளியில் சேர்த்து வருகின்றனர். 2025-26 கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதில் எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகளில் இதுவரை 70 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் இப்பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை 700-ஆக அதிகரித்துள்ளது. பள்ளியில் புதிதாக சேர்ந்த மாணவர்களுக்கு பள்ளியின் சார்பில் பலூன்கள் கொடுத்து வரவேற்பளிக்கப்பட்டது.
இது குறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர் இன்பக்கனி ’இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறியதாவது: பள்ளியின் செயல்பாடுகளால் கடந்த சில ஆண்டுகளாகவே மாணவர் சேர்க்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. நடப்பாண்டு மழலையர் வகுப்புகளில் மட்டும் 70 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து மாணவர் சேர்க்கைக்காக பெற்றோர் பள்ளியை நாடி வரும் சூழல் உள்ளது. எனினும் பள்ளியில் உள்ள ஆசிரியர் மற்றும் வகுப்புகளின் எண்ணிக்கையை கருதி மழலையர் வகுப்புக்கான அட்மிஷன் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். ஏராளமான தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்காக பல்வேறு யுத்திகள் கையாளப்பட்டு வரும் சூழலில் அரசுப் பள்ளியில் மாணவர் சேர்க்கையை நிறுத்தி வைத்திருப்பது உடுமலை வட்டார பெற்றோர் இடையே வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT