Published : 03 Jun 2025 02:09 PM
Last Updated : 03 Jun 2025 02:09 PM

நீட் தேர்வு முடிவுகளை வெளியிட விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும்: ஐகோர்ட்டில் மத்திய அரசு பதில் மனு

சென்னை: "நீட் தேர்வு நடந்தபோது ஆவடி தேர்வு மையத்தில் மின்தடை ஏற்பட்டது உண்மைதான். ஆனால், மின்தடை ஏற்பட்டாலும் மாணவர்கள் தேர்வை எழுதி விட்டார்கள். எனவே மாணவர்களுடைய கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. எனவே நீட் தேர்வு முடிவுகளை வெளியிட விதிக்கப்பட்டுள்ள தடையை உடனடியாக நீக்க வேண்டும்,” என்று மத்திய அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில்மனு தாக்கல் செய்துள்ளது.

ஆவடி தேர்வு மையத்தில் நீட் தேர்வெழுதிய 13 மாணவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், “மருத்துவ இளநிலைப் படிப்புக்காக நீட் நுழைவுத் தேர்வு 2025 இந்தியா முழுவதும் பல்வேறு மையங்களில் கடந்த 4-ம் தேதி நடத்தப்பட்டது. சென்னையை அடுத்த ஆவடி மையத்தில் 464 மாணவர்களுக்கு தேர்வு எழுத நுழைவுச்சீட்டு வழங்கப்பட்டது. பிற்பகல் 2 மணிக்கு தேர்வு தொடங்கிய நிலையில், கனமழை காரணமாக 3 மணியில் இருந்து 4.15 மணி வரை மின் தடை ஏற்பட்டது. இதன் காரணமாக அந்த மையத்தில் தேர்வெழுதிய மாணவர்கள் சிரமப்பட்டனர்.

இதனால், தங்களுக்கு மறு தேர்வு நடத்த வேண்டும். ஆவடி தேர்வு மையத்தில் ஏற்பட்ட மின் தடையால் குறைந்த வெளிச்சத்தில்தான் நாங்கள் தேர்வை எழுதினோம். கவனச்சிதறல் காரணமாக முழு திறமையுடன் இந்த தேர்வை நாங்கள் எழுதவில்லை. எனவே, தங்களுக்கு மறு தேர்வு நடத்த உத்தரவிட வேண்டும்,” என்று கோரியிருந்தனர்.

இந்த வழக்கு விசாரணையின் போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஏ.ஆர்.எல் சுந்தரேசன், “மின் தடை ஏற்பட்டதா? என்பது குறித்தும், அவ்வாறு மின்தடை ஏற்பட்டிருந்தால் மாணவர்களின் கோரிக்கை குறித்தும் பரிசீலித்து பதிலளிக்க அவகாசம் அளிக்க வேண்டும்,” என கோரினார். வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், மத்திய அரசு, தேசிய மருத்துவ ஆணையம், தேசிய தேர்வு முகமை பதிலளிக்க உத்தரவிட்டு, அதுவரை நீட் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை விதித்திருந்தது.

இந்த வழக்கில் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அதில், “மாணவர்கள் கோரிக்கையை மத்திய அரசு கவனமாக பரிசீலித்தது. மின்தடை ஏற்பட்டது உண்மைதான். ஆனால், அப்போது இருந்த வெளிச்சத்தை வைத்து மாணவர்கள் தேர்வை முழுவதுமாக எழுதி முடித்து விட்டார்கள். தேர்வு நடந்த சமயத்தில் யாரும் எந்த கோரிக்கையும் வைக்கவில்லை. அனைத்து கேள்விகளுக்கும் மாணவர்கள் விடைகள் எழுதிவிட்டனர்.

அப்படி இருக்கும்போது திடீரென்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து கோரிக்கை மனுவை பரிசீலிக்க கோரியுள்ளனர். அவர்கள் கோரிக்கை மனுவை மத்திய அரசு பரிசீலனை செய்து மின்தடை ஏற்பட்டாலும் மாணவர்கள் விடையை எழுதி விட்டார்கள். எனவே மாணவருடைய கோரிக்கை மனுவை நிராகரித்து உத்தரவிட்டுள்ளது. எனவே இந்த நீட் தேர்வு முடிவுகளை வெளியிட விதிக்கப்பட்டுள்ள தடையை உடனடியாக நீக்க வேண்டும்,” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x