Published : 31 May 2025 05:53 AM
Last Updated : 31 May 2025 05:53 AM
சென்னை: ஜெஇஇ அட்வான்ஸ்டு நுழைவுத்தேர்வெழுதிய மாணவர்களும், அவர்களின் பெற்றோரும் சென்னை ஐஐடி உள்பட 7 ஐஐடி வளாகங்களை சுற்றிப்பார்க்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள ஐஐடி உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் சேர ஜெஇஇ அட்வான்ஸ்டு நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான ஜெஇஇ அட்வான்ஸ்டு நுழைவுத்தேர்வின் முடிவு ஜூன் 2-ம் தேதி வெளியாகிறது.
இந்நிலையில், ஜெஇஇ நுழைவுத்தேர்வெழுதிய மாணவர்களும் அவர்களின் பெற்றோரும் ஐஐடி கல்வி நிறுவனங்கள் குறித்து நேரடியாக அறிந்துகொள்ளவும், அங்குள்ள கல்வி மற்றும் ஆராய்ச்சி வசதிகளை தெரிந்துகொள்ளவும் 'டெமோ டே' என்ற சிறப்பு நிகழ்ச்சிக்கு சென்னை ஐஐடி சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி, ஜெஇஇ தேர்வெழுதிய மாணவர்களும், பெற்றோரும் ஜூன் 3-ம் தேதி சென்னை, டெல்லி, பெங்களூரு, மும்பை, ஜெய்ப்பூர், விஜயவாடா, ஐதராபாத் ஆகிய 7 ஐஐடி-க்களை நேரில் பார்வையிடலாம். இதில் பங்கேற்க விரும்புவோர் https://www.askiitm.com/demo-day என்ற இணையதள இணைப்பை பயன்படுத்தி உடனடியாக பெயரை முன்பதிவு செய்துகொள்ள வேண்டும். நேரில் செல்ல முடியாதவர்கள் ஆன்லைனில் பங்கேற்கலாம்.
இந்த சிறப்பு நிகழ்ச்சி குறித்து ஐஐடி இயக்குநர் வீ.காமகோடி செய்தியாளர்களிடம் நேற்று கூறும்போது, "இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதன் மூலம் ஐஐடியில் சேர விரும்பும் மாணவர்கள் அங்குள்ள கல்விமுளை, வகுப்பறைச்சூழல், ஆய்வக வசதிகள் போன்றவற்றை நேரடியாக அறிந்துகொள்ள முடியும்.
தற்போது படிக்கும் மாணவர்கள், ஆசிரியர்கள்,,முன்னாள் மாணவர்களுடன் கலந்துரையாடி தங்களது சந்தேகங்களுக்கு விளக்கம் பெறலாம்." என்றார். ஐஐடி டீன் ( கல்வி) பிரதாப் ஹரிதாஸ் கூறுகையில், "கடந்த 4 ஆண்டுகளாக இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான மாணவர்களும், பெற்றோரும் ஆர்வத்தோடும் கலந்துகொள்கின்றனர். மாணவர்கள் ஐஐடி தொடர்பான அனைத்துவிதமான சந்தேகங்களுக்கும் விளக்கம் பெறலாம்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT