Last Updated : 15 May, 2025 12:01 AM

 

Published : 15 May 2025 12:01 AM
Last Updated : 15 May 2025 12:01 AM

கோவையில் 59 பள்ளிகளில் எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகள் தொடங்க மாநகராட்சி முடிவு

கோப்புப்படம்

கோவை: விரைவில் தொடங்க உள்ள நடப்புக் கல்வியாண்டில், கோவை மாநகரில் உள்ள 59 மாநகராட்சிப் பள்ளிகளில் எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகள் புதியதாக தொடங்க மாநகராட்சி நிர்வாகத்தினர் முடிவு செய்துள்ளனர்.

கோவை மாநகராட்சி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டின் கீழ், 81 ஆரம்பப்பள்ளிகள், 48 நடுநிலைப்பள்ளிகள், 10 உயர்நிலைப்பள்ளிகள், 16 மேல்நிலைப் பள்ளிகள், 1 சிறப்புப் பள்ளி ஆகியவை உள்ளது. இப்பள்ளிகளில் ஒவ்வொரு கல்வியாண்டிலும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர்.

இப்பள்ளிகளில் 800-க்கும் மேற்பட்ட ஆசிரியர், ஆசிரியைகள் பணியாற்றுகின்றனர். நடப்பு 2025-26-ம் கல்வியாண்டு வரும் ஜூன் மாதம் முதல் தொடங்கப்பட உள்ளது. புதிய கல்வியாண்டு தொடங்கப்படுவதையொட்டி, மாநகராட்சிப் பள்ளிகளி்ல் மாணவ, மாணவிகள் சேர்க்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக 1-ம் வகுப்பு, 6-ம் வகுப்பு, 9-ம் வகுப்புகளுக்கு சேர்க்கை நடைபெற்று வருகிறது. இவ்வகுப்புகளில் இதுவரை 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சேர்க்கப்பட்டுள்ளனர். அதேபோல், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட பின்னர், பிளஸ் 1 வகுப்புகளுக்கான சேர்க்கை தொடங்கப்பட உள்ளது. தனியார் பள்ளிகளுக்கு ஈடாக மாநகராட்சிப் பள்ளிகளில் சேர்க்கை விகிதம், தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க மாநகராட்சி நிர்வாகத்தினர் சார்பில் ஸ்மார்ட் வகுப்புகள், ரெகுலர் வகுப்புகளுடன் மாலை நேர சிறப்பு வகுப்புகள் போன்றவை நடத்தப்படுகின்றன.

இந்நிலையில் மாநகராட்சியின் 59 பள்ளிகளில் எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: முன்னரே, மாநகராட்சியின் 19 நடுநிலைப்பள்ளிகளில் எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகள் செயல்படுகின்றன. தொடங்க உள்ள நடப்புக் கல்வியாண்டில் 8 நடுநிலைப்பள்ளிகள், 51 ஆரம்பப்பள்ளிகளில் எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகள் புதியதாக தொடங்கப்பட உள்ளன. அதாவது, நடப்புக் கல்வியாண்டில் ம.ந.க வீதி, நீலிக்கோணாம்பாளையம், எஸ்.ஐ.ஹெச்.எஸ் காலனி, சேரன் மாநகர், அப்பநாயக்கன்பாளையம், சுப்பிரமணியம்பாளையம்,வீரகேரளம், போத்தனூர் ஆகிய 8 இடங்களிலுள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளிகளில் எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன.

அதேபோல், ஒக்கிலியர் காலனி, செல்வபுரம் (வடக்கு), மணியகாரன்பாளையம், பி.என்.புதூர், ராமலிங்கம் காலனி, சித்தாபுதூர், புலியகுளம், ராமநாதபுரம், கணேசபுரம், ஒண்டிப்புதூர் (தெற்கு), ஒண்டிப்புதூர் (வடக்கு), கள்ளிமடை, சீரநாயக்கன்பாளையம், உடையாம்பாளையம், பனைமரத்தூர், கணபதி, நல்லாம்பாளையம், மருதூர், சொக்கம்புதூர், கரும்புக்கடை, பாலரங்கநாதபுரம், வேலாண்டிபாளையம், முத்துசாமிகாலனி, தேவாங்கபேட்டை, கோவில்மேடு, கே.என்.ஜி புதூர், சுண்டப்பாளையம், பொங்காளியூர், அசோக்நகர் (கிழக்கு), கல்வீரம்பாளையம், சிக்கராயபுரம், மாச்சம்பாளையம், காமராஜ் நகர், கோண்டி நகர், ராமசெட்டிபாளையம், நரசிம்மபுரம், அண்ணா நகர், இடையர்பாளையம், அஞ்சுகம் நகர், விளாங்குறிச்சி, சிவானந்தாபுரம், எல்.ஜி.பி நகர், கந்தசாமி நகர், சரவணம்பட்டி, வெள்ளக்கிணறு, காளப்பட்டி, வழியாம்பாளையம், கருப்பராயன்பாளையம், ரங்கசாமி கவுண்டன்புதூர் வீட்டுவசதி வாரிய நகர் ஆகிய இடங்களில் உள்ள 51 ஆரம்பப்பள்ளிகளில் எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன.

இதற்கு மாவட்ட ஆட்சியரும் ஒப்புதல் வழங்கியுள்ளார். மேற்கண்ட 59 பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் நியமிப்பதன் மூலம் ரூ.32.45 லட்சம் செலவாகும், உதவியாளர்களுக்கு ரூ.19.47 லட்சம், பாடக்குறிப்பேடுகளுக்கு ரூ.1.18 லட்சம் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்கான செலவினங்களை மாநகராட்சியின் ஆரம்பக்கல்வி நிதியிலிருந்து மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்துக்கு மாநகராட்சி மன்றக்கூட்டத்திலும் ஒப்புதலும் பெறப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x