Published : 13 May 2025 07:41 PM
Last Updated : 13 May 2025 07:41 PM

கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப் பிரிவுக்கு அலைபாய்வது சரியா? - ஓர் அலர்ட் பார்வை

படம்: மெட்டா ஏஐ

பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கான முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து கல்லூரிகளை நோக்கி மாணவ, மாணவிகள் படையெடு்த்து வருகின்றனர். கல்லூரிகளில் மாணவ, மாணவிகள் சேர்க்கை என்ற உயர்கல்வி திருவிழா தொடங்கிவிட்டது. எந்தக் கல்லூரியில் சேரலாம், எந்த பாடப்பிரிவை எடுக்கலாம், எதைப் படித்தால் உடனடி வேலை கிடைக்கும், அதிக ஊதியம் கிடைக்கும் என்றெல்லாம் பெற்றோர், மாணவர்கள் இடையே விவாதங்கள் சூடு பிடித்துள்ளன. வழக்கம் போல், நடப்பாண்டும் கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் மாணவ, மாணவிகளின் ஈடுபாடு அதிகரித்துள்ளது. இதற்கு காரணம் அதில் உள்ள வேலைவாய்ப்புகள் என்கின்றனர் பேராசிரியர்கள்.

இது குறித்து உயர் கல்வி நிறுவன பேராசிரியர்கள் கூறியது: பொறியியல் கல்லூரிகள் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்புக்கான இருக்கைகளை அதிகம் கோரிப் பெற்றுள்ளன. கம்ப்யூட்டர் சயின்ஸ் மட்டுமன்றி, கம்ப்யூட்டர் சயின்ஸ் சார்ந்த பல்வேறு சிறப்பு பிரிவுகளும் அதிகரித்துள்ளன. விரும்பிய கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவு கிடைக்காது போனால் என்ன செய்வது என்று, நல்ல மதிப்பெண் தகுதி இருந்தபோதும் நிர்வாக ஒதுக்கீட்டில் சீட்டு வாங்க பெற்றோர் பணத்தைக் கொட்டி வருகின்றனர்.

கம்ப்யூட்டர் சயின்ஸ் சமகாலத்தில் சிறப்பான பாடப்பிரிவுகளில் ஒன்றாக ஜொலிக்கிறது. கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்தால் வேலைக்கும், கூடுதல் ஊதியத்துக்குமான வாய்ப்புகளும் பிரகாசமாக இருக்கின்றன. ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு அசுரப் பாய்ச்சல் காட்டும் காலத்தில், கம்ப்யூட்டர் சயின்ஸ் பட்டதாரிகளின் தேவையும் அதிகரித்தே வருகிறது. அதற்காக, பொறியியல் சேர்க்கைக்கான கலந்தாய்வில் கலந்துகொள்வோரில் பெருவாரியானோர் கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்துக்காகவே அலைபாய்வது சரியா?

பொறியியல் படிப்பில் சேர்ந்து படித்து, தனது எதிர்காலத்தை அதன் அடிப்படையில் கட்டமைக்கப் போகும் சம்பந்தப்பட்ட மாணவருக்கு மெய்யாலுமே கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவில் ஈடுபாடு இருக்கிறதா? வேறு பாடப்பிரிவில் ஆர்வமுள்ள மாணவரை கம்ப்யூட்டர் சயின்ஸில் சேர்த்தால் எதிர்மறை விளைவுகள் ஏற்படும் என்பதை பெற்றோர்கள் உணராதவர்களா?

பொறியியல் கல்வி ஒப்பீட்டளவில் சற்று கடினமானது. சுயமான ஆர்வமும் ஈடுபாடும் இருந்தால் மட்டுமே மாணவர்களால் நல்ல மதிப்பெண்களை பெற முடியும். பொறியியல் பாடங்களின் இதர பிரிவுகளில் ஆர்வமுள்ள மாணவரை வலிந்து கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்க வைக்கும்போது, அப்போதைக்கு ஒன்றும் மோசமாகி விடாது. அவர் படிப்பை முடிப்பது முதல் வேலையில் சேர்வது வரை எளிதாக நடந்துவிடக்கூடும். ஆனால் விருப்பமில்லா துறையில் அவரால் அதன் பின்னர், ஜொலிக்க முடியாது திணறும் ஆபத்து காத்திருக்கும். அதுவே அவரது எதிர்காலத்தில் அதிக எண்ணிக்கையிலான வேகத்தடையாகவும் அடிக்கடி எழுந்து அச்சுறுத்தும்.

கம்ப்யூட்டர் சயின்ஸ் என்பது நித்தம் அப்டேட் ஆகக்கூடியது. இப்போது கம்ப்யூட்டர் சயின்ஸில் குறிப்பிட்ட விருப்ப பாடத்தை எடுத்துப் படிப்பவர், 4 ஆண்டு முடிவில் கல்லூரியை விட்டு வெளியேறும்போது, அவர் விரும்பிப் படித்த பாடத்தை அடுத்து வந்த இன்னொன்று ஏற்பட்டிருக்கக் கூடும். எனவே, சதா தன்னை அப்டேட் செய்துகொள்ளும் ஆர்வமுள்ளவர்களுக்கு மட்டுமே கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் அது சார்ந்த பொறியியல் பிரிவுகளில் சேர்ந்து படிப்பது உசிதமானது.

கம்ப்யூட்டரில் ஆர்வம் காட்டாத இன்றைய இளம் தலைமுறையினர் குறைவு. ஆனால் அதனை மட்டுமே வைத்து, அவர்களுக்கு கம்ப்யூட்டர் சயின்ஸில் விருப்பம் இருப்பதாக அவரசப்பட்டு முடிவு எடுத்துவிட வேண்டாம். கம்ப்யூட்டர் சார்ந்த பலவற்றையும் கற்றுக்கொள்ள அருகிலுள்ள கம்ப்யூட்டர் பயிற்சி மையமோ, இணையவெளி வழிகாட்டுதல்களோ போதுமானது. எனவே, பொறியியல் படிக்கப்போகும் மாணவ மாணவியரிடம் அமர்ந்து பேசி, தீர விசாரித்த பின்னரே அவர்களுக்கு விருப்பமான துறையை தீர்மானிக்கலாம்.

அதேபோல, கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவுதான் வேண்டும் என்பதற்காக, தரமற்ற தனியார் கல்லூரிகளில் சேர்வது நமது நோக்கத்தையே நிர்மூலம் செய்துவிடும் அல்லவா? நவீன கம்ப்யூட்டர் லேப் வசதி, அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள், மிகப்பெரும் நூலகம், சர்வதேச கல்வி நிலையங்களுடனான தொடர்பு என தரம் நிரந்தமாக வாய்க்கப்பெற்ற பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்து படிப்பதே நல்லது.

அதாவது என்ன படிக்கிறோம் என்பதற்கு இணையாக அதனை எங்கே படிக்கப் போகிறோம் என்பதும் முக்கியம். கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்தால் ஐடி துறையில் கை நிறைய, பை நிறைய சம்பளம் கிடைக்கும் என்ற மாயை நிலவுகிறது. ஐடி துறை என்பது பங்குச்சந்தை போல சர்வதேச காரணிகளின் அபாயங்களுக்கு உட்பட்டது.

அதேபோல, ஆரம்பத்தில் அள்ளித் தந்தாலும், குறிப்பிட்ட வருடங்களுக்குப் பின்னர் குறைந்த ஊதியம் கோரும் புதிய பட்டதாரிகளையே ஐடி நிறுவனங்கள் ஆராதிக்கும். எனவே, அடுத்தடுத்த நிறுவனங்களுக்கு தாவவும், குறிப்பிட்ட வருடங்களுக்குப் பின்னர் ஊதிய உயர்வில் தேங்கலையும் எதிர்கொள்ளவும் தயாராக இருப்பவர்கள் மட்டுமே ஐடி துறையை தேர்வு செய்யலாம்.

முக்கியமாக, கம்ப்யூட்டர் சயின்ஸ் அல்லாத இதர பொறியியல் பட்டதாரிகளையும் ஐடி நிறுவனங்கள் சிவப்புக் கம்பளம் விரித்திருக்கின்றன. ஐடி துறையில் சேர்வதற்காக என்று மட்டுமே கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவை தேர்வு செய்வது உசிதமானதல்ல. எனவே, மாணவரின் விருப்பத்துக்கு முக்கியத்துவம் தர வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x