Published : 13 May 2025 05:23 PM
Last Updated : 13 May 2025 05:23 PM

கலை - அறிவியல் படிப்புகளுக்கு மவுசு கூடுவது ஏன்? - ஒரு தெளிவுப் பார்வை

படம்: மெட்டா ஏஐ

தமிழகத்தில் அண்மைக் காலமாக கலை - அறிவியல் கல்லூரிப் படிப்புகளுக்கு மவுசு கூடிய வண்ணம் உள்ளது. இதற்கு பல்வேறு காரணங்களை கல்வியாளர்கள் முன்வைக்கின்றனர்.

இது தொடர்பாக கல்வியாளர்கள் கூறியது: மாணவர்களின் மேற்படிப்பையும், எதிர்கால வாழ்க்கையையும் தீர்மானிப்பது பிளஸ் 2 மதிப்பெண் தான். அதனால் தான் பெற்றோர்களும், ஆசிரியர்களும் மாணவ - மாணவிகளின் பிளஸ் 2 பொதுத்தேர்வில் மிகுந்த அக்கறை காட்டுகிறார்கள். பொதுவாக பிளஸ் 2 முடிக்கும் பெரும்பாலான மாணவர்கள் சேர விரும்பும் படிப்பாக இன்ஜினியரிங் படிப்பு இருந்து வந்த போதிலும், கடந்த சில ஆண்டுகளாக கலை - அறிவியல் படிப்புகள் மீது அவர்களின் பார்வை திரும்பத் தொடங்கி யிருக்கிறது.

இன்ஜினியரிங் கல்லூரியில் சேர எளிதாக இடம் கிடைத்துவிடுகிறது. ஆனால், கலை - அறிவியல் கல்லூரிகளில் இடம் கிடைப்பதுதான் குதிரை கொம்பாக மாறிவிட்டது. அதுவும், பி.காம், பிபிஏ, பி.ஏ. ஆங்கில இலக்கியம், பிஎஸ்சி வேதியியல், இயற்பியல் உள்ளிட்ட குறிப்பிட்ட சில படிப்புகளில் சேர கடும் போட்டி நிலவுகிறது.

முன்பு மருத்துவம், பொறியியல், விவசாயம் உள்ளிட்ட தொழில்கல்வி படிப்புகளில் இடம் கிடைக்காதவர் கள் கலை - அறிவியல் கல்லூரிகளில் சேர முயற்சி செய்வார்கள். ஆனால், தற்போது நிலைமை மாறி கலை - அறிவியல் கல்லூரிகளில் சேர வேண்டும் என்ற எண்ணத்தோடு விண்ணப்பம் போடுகிற மாணவ-மாணவிகள் எண்ணிக்கை அதிகம்.

இன்ஜினியரிங் படித்துவிட்டு போதிய வேலையில்லாமல் இருப்பதும், அப்படியே வேலையில் இருந்தாலும் குறைந்த சம்பளத்தில் இருப்பதும், மாணவர்களின் பார்வை கலை - அறிவியல் படிப்பு மீது திரும்ப தொடங்கியிருப்பதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. தொழிற்கல்வி படிப்புடன் ஒப்பிடும்போது கலை அறிவியல் படிப்புகளுக்கு செலவு மிகவும் குறைவும். இதுவும் ஒரு காரணம்.

இன்ஜினியரிங் பட்டதாரிகளுக்கு இணையாக கலை - அறிவியல் பட்டதாரிகளுக்கும் கணினி மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த துறைகளில் வேலை வாய்ப்புகள் பெருகியுள்ளன. சாதாரணமாக கலை கல்லூரிகளில் பி.ஏ, பி.காம், பிபிஏ, பிஎஸ்சி என்ற பெயரில் பட்டங்கள் வழங்கப்பட்டா லும் தற்போது ஒவ்வொரு படிப்பிலும் பிரத்யேக பாடப்பிரிவுகள் வந்தவண்ணம் உள்ளன. முன்பு பிகாம் என்றால் ஒரே பி.காம் படிப்பு தான். ஆனால், இன்று பி.காம் ஜெனரல், பி.காம் கார்ப்பரேட் செக்ரட்டரிஷிப், பி.காம் கம்ப்யூட்டர் சயின்ஸ், பி.காம். இ-காமர்ஸ், பி.காம் கூட்டுறவு என பாடப்பிரிவுகளின் பட்டியல் நீள்கிறது.

தமிழ்நாட்டில் 600-க்கும் மேற்பட்ட கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இருக்கின்றன. இதில், அரசுக் கல்லூரிகள் அரசு உதவிபெறும் கல்லூரிகள், தனியார் சுயநிதிக் கல்லூரி என அனைத்து வகை கல்லூரிகளும் அடங்கும். சென்னை மற்றும் சுற்று வட்டாரப் பகுதியில் மட்டும் 100-க்கும் மேற்பட்ட கலை அறிவியல் கல்லூரிகள் உள்ளன.

இந்தக் கல்லூரிகளில் இளங்கலை படிப்புகளுடன் பல்வேறு பாடப்பிரிவுகளில் முதுகலைப் பட்டப்படிப்பு, எம்ஃபில், பிஎச்.டி ஆகிய ஆய்வு படிப்புகளும் வழங்கப் படுகின்றன. இளங்கலை பட்டப் படிப்புகளில் மட்டும் 60-க்கும் மேற்பட்ட படிப்புகளை படிக்கலாம். கலை அறிவியல் கல்லூரிகளில் குறிப்பாக சென்னைப் போன்ற நகர்ப்புற கல்லூரிகளில் பி.காம் படிப்புக்கு எப்போதும் தனி மவுசுதான்.

பி.எஸ்சி. படிப்பில் கணிதம், கம்ப்யூட்டர் சயின்ஸ், இயற்பியல், வேதியியல், விலங்கியல், தாவரவியல், புவியியல், உளவியல் போன்ற பொதுவான பாடப் பிரிவுகளுடன் இன்பர்மேஷன் டெக்னாலஜி, பயோ-டெக்னாலஜி, மைக்ரோ பயாலஜி, பயோ - கெமிஸ்ட்ரி, ஹோம் சயின்ஸ், நியூட்ரிசன், அனிமேஷன் டெக்னாலஜி, புள்ளியியல், ஜெர்னலிசம் அண்ட் மாஸ் கம்யூனிகேஷன், விஷூவல் கம்யூனிகேஷன், எலெக்ட்ரானிக்ஸ் மீடியா, டூரிசம் மற்றும் ஹாஸ்பிட்டாலிட்டி, எலெக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன் முதலிய சிறப்பு பாடப்பிரிவுகளும் உள்ளன.

அதேபோல், பி.ஏ படிப்பில் தமிழ் இலக்கியம், ஆங்கில இலக்கியம், பொருளாதாரம், வரலாறு, அரசியல் அறிவியல், உளவியல், சமூகவியல், தத்துவம், கூட்டுறவு, கம்யூனிகேட்டிவ் இங்கிலீஷ், கார்ப்பரேட் எக்கனாமிக்ஸ், பாதுகாப்பு மற்றும் உத்திகள், சுற்றுலா மேலாண்மை, இதழியல், மானுடவியல் என 25-க்கும் மேற்பட்ட படிப்புகள் இருக்கின்றன. இவை தவிர, பிபிஏ, பிபிஎம், பிசிஏ படிப்புகளும் உள்ளன.

இளங்கலைக் படிப்புகளுக்கு பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் தான் மாணவர்கள் சேர்க்கப்படுகிறார்கள். முதன்மை பாடம் மற்றும் அது தொடர்புடைய பாடங்களில் பெற்றுள்ள மதிப்பெண்கள் மட்டுமே பார்க்கப் படும். பிளஸ் 2 தேர்வில் மொத்த மதிப்பெண் கணக்கில் எடுத்துக் கொள்ளப் படுவதில்லை. இளங்கலை பட்டப் படிப்பை முடிப்பவர்கள் தங்களின் முதன்மை பாடம் அல்லது அதுசார்ந்த இதர பாடப் பிரிவுகளில் மேற்படிப்பு படிக்கலாம்.

இளங்கலை முடித்தவுடன் பாடம் சம்பந்தப்பட்ட துறைகளில் வேலை வாய்ப்பு பெற முயற்சிப்பதுடன் பட்டப் படிப்பை கல்வித் தகுதியாகக் கொண்டு டிஎன்பிஎஸ்சி, வங்கித் தேர்வு வாரியம், எஸ்எஸ்சி, யுபிஎஸ்சி போன்ற தேர்வாணையங்கள் நடத்தும் போட்டித் தேர்வெழுதி மத்திய, மாநில அரசு பணிகளிலும் சேரலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x