Published : 09 May 2025 04:46 AM
Last Updated : 09 May 2025 04:46 AM
சென்னை: பிளஸ் 2 பொதுத் தேர்வில் 2,853 அரசுப் பள்ளி மாணவர்கள் உட்பட 26,887 பேர் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றுள்ளனர். பிளஸ் 2 தேர்வில் பல்வேறு பாடங்களிலும் மாணவ, மாணவிகள் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றுள்ளனர். அந்த வகையில், 2,853 அரசுப் பள்ளி மாணவர்கள் உட்பட 26,887 பேர் 100 மதிப்பெண் பெற்றுள்ளனர்.
அதிகபட்சமாக கணினி அறிவியல் பாடத்தில் 9,536 பேர் ‘சென்டம்’ எடுத்துள்ளனர். கணினி பயன்பாடு - 4,208, வேதியியல் - 3,181, கணிதம் - 3,022, வணிகவியல் 1,624, கணக்கு பதிவியல் - 1,240, இயற்பியல் - 1,125, உயிரியல் - 827, பொருளியல் - 556, வணிக கணிதம், புள்ளியியல் - 273, தாவரவியல் - 269, வரலாறு - 114, விலங்கியல் - 36 என்ற எண்ணிக்கையில் மாணவர்கள் ‘சென்டம்’ பெற்றுள்ளனர்.
இதுவரை இல்லாத அளவுக்கு தமிழில் 135 பேர், ஆங்கிலத்தில் 68 பேர் 100 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர். தனியார் பள்ளிகள் பின்னடைவு தனியார் பள்ளிகள் 98.88 சதவீதமும், அரசு உதவி பெறும் பள்ளிகள் 95.7 சதவீதமும், அரசுப் பள்ளிகள் 91.94 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளன. ஒட்டுமொத்த தேர்ச்சியில் தனியார் பள்ளிகள் முன்னிலையில் உள்ளன. எனினும், கடந்த 2023-ல் 99.08%, கடந்த 2024-ல் 98.70% என்று இருந்த நிலையில், தற்போது தனியார் பள்ளிகள் தேர்ச்சி விகிதம் சற்று குறைந்துள்ளது.
கலைப் பிரிவு தேர்ச்சி சரிவு: கடந்த ஆண்டு கலைப் பிரிவில் 85.67 சதவீதம், தொழிற் பிரிவில் 85.85 சதவீதமும் மாணவர் தேர்ச்சி விகிதம் இருந்த நிலையில், இந்த ஆண்டில் கலைப் பிரிவில் 82.90 சதவீத மாகவும், (2.78% குறைவு), தொழிற்பிரிவிலும் 84.22 சதவீதமாகவும் (1.63% குறைவு) குறைந்துள்ளது.அறிவியல் பிரிவில் தேர்ச்சி 96.99 சதவீதம், வணிகவியல் பிரிவில் 92.68 சதவீதமாக உள்ளது.
அரியலூர் முதல் இடம்: பொதுத் தேர்வு தேர்ச்சிக்கான மாவட்ட தரவரிசையில் அரியலூர் மாவட்டம் கடந்த சில ஆண்டுகளாகவே முதல் 5 இடங்களுக்குள் வந்துவிடுகிறது. இந்த ஆண்டு ஒட்டுமொத்த மாவட்ட வாரியான தேர்ச்சி (98.82%), அரசுப் பள்ளிகள் வாரியான தேர்ச்சி (98.32%) ஆகிய இரு பிரிவிலும் அரியலூர் மாவட்டம் முதல் இடம் பிடித்துள்ளது. மாவட்டத்தில் 28 அரசுப் பள்ளிகள் உட்பட 53 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.
இதுகுறித்து அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கூறியபோது, ‘‘அரியலூர் மாவட்ட பள்ளிகளில் பிளஸ் 2 பயிலும் மாணவ, மாணவிகளுக்கு எனது சார்பில் முக்கிய வினா விடை தொகுப்பை வழங்கியிருந்தேன். ஆசிரியர்களின் பெரும் பங்களிப்பும் இந்த வெற்றிக்கு முக்கிய காரணம்.
கடந்த காலங்களில் கல்வியில் பின்தங்கியிருந்த இந்த மாவட்டம் தற்போது முன்னேறியிருப்பது மகிழ்ச்சியான செய்தி’’ என்றார். சென்னை மாவட்டத்தில் 583 பள்ளிகளில் இருந்து 64,290 பேர் தேர்வு எழுதிய நிலையில், 60,714 பேர் (94.44%) தேர்ச்சி பெற்றனர். மாவட்ட தேர்ச்சி பட்டியலில் சென்னை 2 இடங்கள் சரிந்து 23-வது இடத்தில் உள்ளது.
அரியர் முடிவுகள் வெளியீடு: கடந்த ஆண்டு பிளஸ் 1 தேர்வில் தோல்வி அடைந்த பாடங்களை, தற்போது பிளஸ் 2 தேர்வுடன் சேர்த்து 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதினர். அவர்களுக்கான அரியர் பாடங்களின் தேர்வு முடிவுகளையும் தேர்வுத் துறை வெளியிட்டுள்ளது. அதை dge.tn.gov.in எனும் தளத்தில் அறியலாம்.
உயர்கல்வி ஆலோசனை: தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் உயர்கல்வி தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் பெற, பள்ளிக்கல்வி துறையின் ‘14417’ என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். அதேபோல, மதிப்பெண் குறைந்தது, வெற்றி வாய்ப்பை இழந்தது போன்ற காரணங்களால் மாணவர்கள் நம்பிக்கையை இழக்க கூடாது. அத்தகைய மாணவர்கள், அவர்களது பெற்றோர் தயக்கமின்றி அரசின் இலவச உதவி மைய எண் ‘104’க்கு தொடர்பு கொண்டால் தகுந்த ஆலோசனைகள் வழங்கப்படும்.
கட் ஆஃப் உயரும்: முக்கிய பாடங்களின் தேர்ச்சியில் கணினி அறிவியல் 99.73 சதவீதத்துடன் முன்னிலையில் உள்ளது. விலங்கியல் - 99.51%, தாவரவியல் - 99.35%, இயற்பியல் - 99.22%, கணிதம் - 99.16%, உயிரியல் - 99.15%, தமிழ் - 99.15%, வேதியியல் - 98.99%, வணிகவியல் -98.36%, பொருளியல் -98.17%, கணக்கு பதிவியல்- 97.36% என்ற விகிதத்தில் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பொறியியல் சேர்க்கைக்கு பிரதானமான கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய பாடங்களில் மாணவர்களின் தேர்ச்சி முந்தைய ஆண்டுகளை விட கணிசமாக உயர்ந்துள்ளது. தவிர, முழு மதிப்பெண் பெற்றவர்களின் எண்ணிக்கையும் கடந்த ஆண்டைவிட அதிகரித்துள்ளது. இதனால், கட் ஆஃப் மதிப்பெண் சராசரியாக 1 முதல் 7 மதிப்பெண் வரை உயரலாம் என்று பேராசிரியர்கள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT