Published : 07 May 2025 08:14 AM
Last Updated : 07 May 2025 08:14 AM
பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு நாளை (வியாழன்) காலை 9 மணிக்கு வெளியிடப்படும் என அரசு தேர்வுத்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
பிளஸ் 2 வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 3-ம் தேதி தொடங்கி 25-ம் தேதி முடிவடைந்தது. அத்தேர்வை 8 லட்சத்து 21 ஆயிரத்து 57 மாணவ, மாணவிகள் எழுதினர். தேர்வு முடிவடைந்த நிலையில், விடைத்தாள் திருத்தும் பணி ஏப்.4-ம் தேதி தொடங்கி 17-ம் தேதி நிறைவடைந்தது.
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9-ம் தேதி வெளியிடப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தேர்வு முடிவுகள் முன்கூட்டியே வெளியாகலாம் என்ற தகவல் பரவியது. இந்நிலையில், அந்த தகவலை உறுதிபடுத்தும் வகையில் பிளஸ் 2 தேர்வு முடிவு ஒரு நாளைக்கு முன்னதாக அதாவது மே 8-ம் தேதியே வெளியிடப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியானது.
இதுதொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குநர் ந.லதா, நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற 2024-2025-ம் கல்வி ஆண்டுக்கான பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரால் மே 8-ம் தேதி (வியாழன்) காலை 9 மணிக்கு சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக கூட்டரங்கில் வெளியிடப்பட உளளது. மாணவர்கள் தேர்வு முடிவுகளை https://results.digilocker.gov.in, www.tnresults.nic.in ஆகிய இணையதள முகவரிகளில் வியாழக்கிழமை காலை 9 மணிக்கு அறிந்துகொள்ளலாம்.
தேர்வு முடிவுகளை அறிய, தேர்வர்கள் தங்கள் பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்ய வேண்டும். பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளிலும் தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ளலாம்.
மேலும் அவர்கள் பள்ளியில் சமர்ப்பித்த செல்போன் எண்ணுக்கும், தனித்தேர்வர்களுக்கு அவர்கள் ஆன்லைனில் விண்ணப்பித்தபோது வழங்கிய செல்போன் எண்ணுக்கும் குறுஞ்செய்தி (எஸ்எம்எஸ்) வாயிலாகவும் தேர்வு முடிவுகள் அனுப்பப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT