Published : 05 May 2025 02:00 AM
Last Updated : 05 May 2025 02:00 AM

‘மாநில பாடத்திட்டத்தில் இருந்து குறைந்த அளவிலான கேள்விகள்’ -  நீட் தேர்வு ‘சம்பவங்கள்’

பாளையங்கோட்டை ஜான்ஸ் பள்ளி மையத்தில் நேற்று நீட் தேர்வு எழுத பெற்றோர்களுடன் குவிந்த மாணவ, மாணவிகள். | படங்கள்:மு.லெட்சுமி அருண் |

திருநெல்வேலி/ தூத்துக்குடி/ கோவில்பட்டி/ நாகர்கோவில்: திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டம் உட்பட தென் மாவட்டங்களில் 12,349 மாணவ, மாணவிகள் நீட் தேர்வு எழுதினர். இளநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நீட் தகுதித் தேர்வு நேற்று நாடு முழுவதும் நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்டத்தில் பாளையங்கோட்டை தூய யோவான் மேல்நிலைப்பள்ளி, கதீட்ரல் மேல் நிலைப்பள்ளி, கிறிஸ்துராஜா மேல் நிலைப்பள்ளி, குழந்தை ஏசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி, பெருமாள்புரம் சாராள் தக்கர் கல்லூரி, திருநெல்வேலி டவுன் சாப்டர் மேல் நிலைப்பள்ளி, திருநெல்வேலி சந்திப்பு மதிதா இந்துக் கல்லூரி மேல்நிலைப்பள்ளி, கல்லணை மாநகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளி, ராணி அண்ணா அரசு மகளிர்கல்லூரி, சங்கர்நகர் சங்கர்மேல்நிலைப்பள்ளி, விஜயநாராயணம் கேந்திர வித்யாலயா ஆகிய 12 தேர்வு மையங்களில் தேர்வு நடைபெற்றது. பிற்பகல் 2 மணிக்கு தேர்வு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெற்றது.

இந்த மையங்களில் தேர்வு எழுத விண்ணப்பித்த 6,413 மாணவ, மாணவிகளுக்கு தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகள் வழங்கப்பட்டிருந்தன. தேர்வு மையங்களுக்கு முற்பகல் 11.30 மணி முதல் மாணவர்கள் வரலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. நுழைவாயில்களில் போலீஸாரின் பலத்த சோதனைக்கு பின்னரே மாணவர் கள் அனுமதிக்கப்பட்னர்.

திருநெல்வேலியில் நேற்று கத்திரி வெயில் சுட்டெரித்த நிலையில் தேர்வு
எழுத வந்த ஒரு மாணவி மயக்கமடைந்தார்.
அவருக்கு தண்ணீர் கொடுத்து ஆசுவாசப்படுத்தும் தந்தை.

தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு, கருப்பு மற்றும் நீலநிற பந்துமுனைப் பேனா மட்டுமே எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டனர். சேலை, துப்பட்டா, முழுக்கை சட்டை, ஷூ, கைக்கடிகாரம், குளிர் கண்ணாடி, செயின், மோதிரம், பிரேஸ்லெட், நெக்லஸ், மூக்குத்தி, பர்தா, தொப்பி, பைஜாமா, குர்தா, பெரிய அளவு பட்டன்கள், வளையல்கள் ஆகியவை அணிந்து செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.

அரைக்கை சட்டை, காலணி, மருத்துவர்கள் பரிந்துரைத்த கண்ணாடி, சுடிதார் உள்ளிட்டவை அணிந்து செல்ல அனுமதிக்கப்பட்டனர்.தேர்வு மையங்களில் குடிநீர், தடையற்ற மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தன. ஒவ்வொரு மையத்துக்கும் 2 சிறப்பு கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். தேர்வு குறித்து மாணவர்கள் கூறும்போது, “சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் உள்ள இயற்பியல், வேதியியல், தாவரவியல், உயிரியல் பாடங்களில் இருந்து அதிக கேள்விகள் இடம்பெற்றிருந்தன. மாநில அரசு பாடத்திட்டத்தில் குறைந்த அளவிலான கேள்விகளே இருந்தன” என்றனர்.

பெற்றோர் கூறும்போது, “தேர்வு மையங்களில் அதிகமாக கெடுபிடி சோதனை இருந்தது. மாணவிகள் துப்பட்டா அணியக்கூடாது உள்ளிட்ட சில விதிமுறைகளை தளர்த்தியிருக்கலாம்” என்றனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மையங்களில் நீட் தேர்வுக்குவிண்ணப்பித்த 6,413 பேரில் 6,206 பேர் (96.7 சதவீதம்) தேர்வு எழுதினர். 207 பேர் தேர்வு எழுத வரவில்லை.

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி அண்ணா பல்கலைக் கழக வஉசி பொறியியல் கல்லூரி, தூய மரியன்னை ஆண்கள் மேல் நிலைப்பள்ளி, எட்டயபுரம் பாரதியார் நூற்றாண்டு நினைவு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி, கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி ஆகிய நான்கு தேர்வு மையங்களில் நீட் தேர்வு நடைபெற்றது. 1,800 மாணவ, மாணவிகளுக்கு தேர்வு கூட நுழைவு சீட்டுகள் வழங்கப்பட்டிருந்தன.

565 மாணவர்கள், 1,168 மாணவிகள் என மொத்தம் 1,733 பேர் தேர்வு எழுதினர். 19 மாணவர்கள், 48 மாணவிகள் என, மொத்தம் 67 பேர் தேர்வு எழுதவில்லை. சில மையங்களில் மாணவ, மாணவிகள் வெயிலில் நிற்பதை தவிர்க்கும் வகையில் சாமியானா பந்தல் போடப்பட்டிருந்தது.

தேர்வு மையத்துக்குள் கம்மல், செயின் அணிந்து
செல்ல அனுமதிக்கப்படவில்லை. இதனால் தேர்வு
எழுத செல்லும் முன் மாணவி அணிந்திருந்த செயினை கழற்றும் தந்தை.

கோவில்பட்டி: கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில் நேற்று நடந்த நீட் தேர்வை 466 பேர் எழுதினர். இதேபோல், எட்டயபுரம் மகாகவி பாரதியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் மொத்தம் 348 பேர் தேர்வு எழுதினர்.

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் 10 மையங்களில் நீட் தேர்வு நடந்தது. கோணம் கே.வி. பள்ளியில் 480 பேர், பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் 480 பேர், கோணம் அரசு பாலிடெக்னிக்கில் 240 பேர், எஸ்.எல்.பி. அரசு பள்ளியில் 600 பேர், சுங்கான்கடை ஐயப்பா கல்லூரியில் 480 பேர், கார்மல் மேல்நிலைப் பள்ளியில் 480 பேர், ஜோசப்கான்வென்டில் 480 பேர், காமராஜ் பாலிடெக்னிக்கில் 248 பேர், பயோனியர் குமாரசாமி கல்லூரியில் 600பேர், இந்து கல்லூரியில் 480 பேர் என, மொத்தம் 4,568 பேர் ஹால்டிக்கெட் பெற்றிருந்தனர். இதில், 4,410 பேர் தேர்வு எழுதினர். 158 பேர் தேர்வு எழுத வரவில்லை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x