Published : 05 May 2025 11:10 AM
Last Updated : 05 May 2025 11:10 AM
கோவை / திருப்பூர் / ஊட்டி: கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் நேற்று மொத்தம் 10,637 மாணவ, மாணவிகள் ‘நீட்’ தேர்வு எழுதினர். திருப்பூரில் சுடிதாரில் பட்டன் அதிகமாக இருந்ததால் அனுமதி மறுக்கப்பட்ட மாணவிக்கு, பெண் போலீஸ் ஒருவர் வேறு சுடிதார் வாங்கிக் கொடுத்து உதவினார். இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான ‘நீட்’ தேர்வு நாடு முழுவதும் நேற்று மதியம் 2 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெற்றது. இத்தேர்வு தமிழ், ஆங்கிலம், இந்தி, குஜராத்தி உட்பட 13 மொழிகளில் நடத்தப்பட்டது.
கோவை மாவட்டத்தில் 14 மையங்களில் 6,994 மாணவ, மாணவிகள் ‘நீட்’ தேர்வை எழுத விண்ணப்பித்திருந்தனர். இதில் 234 பேர் தேர்வெழுத வரவில்லை. 6,760 பேர் தேர்வெழுதினர். 96.65 சதவீதம் பேர் தேர்வில் கலந்து கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அரசு தொழில்நுட்பக் கல்லூரி தேர்வு மையத்தில் 22 வயதான திருநங்கை தேர்வெழுதினார். அதேபோல, பள்ளி கல்வித்துறை மூலம் 298 பேர் ‘நீட்’ தேர்வெழுதினர்.
தேர்வெழுதிய மாணவ, மாணவிகள் கூறும்போது, “கடந்த ஆண்டை போலவே நிகழாண்டிலும் இயற்பியல் பாட வினாத்தாள் கடுமையாக இருந்தது. உயிரியல் மற்றும் வேதியியல் பாட வினாத்தாள் சற்றே எளிதாக இருந்தது. தேர்வில் வினாத்தாள்களை படித்து பதில் எழுதுவதற்கு நேரம் போதவில்லை. இதனால் ஏராளமான கேள்விகளை எழுத முடியவில்லை” என்றனர்.
திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை, தாராபுரம், பெருமாநல்லூர், திருப்பூர் மாநகரம் என 7 மையங்களில் ‘நீட்’ தேர்வு நடைபெற்றது. 3,212 மாணவ, மாணவிகள் தேர்வினை எழுதினர். திருப்பூர் திருமுருகன்பூண்டி பகுதியில் உள்ள தனியார் கல்லூரி தேர்வு மையத்தில் தேர்வு எழுதுவதற்காக ஊத்துக்குளி பகுதியை சேர்ந்த கனிமொழி என்ற மாணவி வந்திருந்தார்.
அவரது ஹால் டிக்கெட் மற்றும் புகைப்படங்கள் ஆகியவற்றை சரிபார்த்து உள்ளே செல்ல முயன்றபோது அலுவலர்களால் தடுத்து நிறுத்தப்பட்டார். அவர் அணிந்திருந்த சுடிதார் உடையில் அதிக அளவில் பட்டன்கள் இருந்ததால் அவரை உள்ளே அனுமதிக்க முடியாது என தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பெண் போலீஸ் ஒருவர் அந்த மாணவியை தனது இருசக்கர வாகனத்தில் கடைக்கு அழைத்துச்சென்று வேறு சுடிதார் வாங்கிக் கொடுத்து அணிந்த பின்னர், மீண்டும் தேர்வு நடைபெறும் கல்லூரிக்கு அழைத்து வந்தார். அவரின் மனிதநேயத்தை அங்கிருந்த அனைவரும் பாராட்டினர்.
மங்கலான புகைப்படம்: அவிநாசியை சேர்ந்த ஐஸ்வர்யா என்ற மாணவி, கூலிபாளையம் நால்ரோடு பகுதியில் அமைந்துள்ள தனியார் பள்ளி தேர்வு மையத்துக்கு வந்தார். அவரது புகைப்படம் மங்கலாக இருந்ததாகவும், புகைப்படத்தை மாற்ற வேண்டும் எனவும் கூறி அவரை திருப்பி அனுப்பினர். உடனடியாக பள்ளி நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த இடத்தில் இலவசமாக அவருக்கு புகைப்படம் எடுத்து மாற்றி தரப்பட்டது.
அவர் தேர்வு அறைக்குள் சென்ற நிலையில் ஆதார் மற்றும் தேர்வு மைய நுழைவுச் சீட்டில் எழுத்துப்பிழை இருப்பதாக கூறி ஆதார் உறுதிச் சான்று எடுத்து வர அறிவுறுத்தினர். மீண்டும் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த உதவி மையத்திற்கு சென்று ஆதார் உறுதிச் சான்று எடுத்து சென்ற பின் மாணவி தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டார்.
சாலை மறியல்: ‘நீட்’ தேர்வு மையத்தில் மாணவி ஆடையில் பட்டன் நீக்கப்பட்ட விவகாரத்தை கண்டித்து, இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட தேர்வு மையம் அருகே வந்தனர். அவர்களை போலீஸார் கைது செய்தனர். இதனைக் கண்டித்து சங்க நிர்வாகிகள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சலசலப்பு நிலவியது.
நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி மற்றும் அருவங்காடு கேந்திரீய வித்யாலயா பள்ளிகளில் ‘நீட்’ தேர்வு நடைபெற்றது. போலீஸார் மட்டுமின்றி, தனியார் பாதுகாவலர்களும் மாணவர்களை பரிசோதித்த பின்னரே தேர்வு மையத்துக்குள் அனுமதித்தனர்.
ஊட்டி கேந்திரீய வித்யாலயா பள்ளியில் ஹிஜாப் அணிந்து வந்த பெண்களிடம் ஹிஜாபை கழற்றிவிட்டு தேர்வு எழுத அதிகாரிகள் அறிவுறுத்தினர். மேலும் தேர்வு மையத்திற்குள் தண்ணீர் பாட்டில்கள் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படவில்லை. நீலகிரியில் ‘நீட்’ தேர்வு எழுத 695 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் 665 மாணவர்கள் தேர்வு எழுதினர். 30 பேர் எழுதவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT