Published : 05 May 2025 06:05 AM
Last Updated : 05 May 2025 06:05 AM

நீட் தேர்வு எழுதிய 61 வயது சித்த மருத்துவர் - ‘மனமுடைய கூடாது’ என அறிவுரை

தூத்துக்குடியில் 61 வயது சித்த மருத்துவர் நீட் தேர்வு எழுதினார். ‘‘இத்தனை வயதில் நானே நீட் தேர்வு எழுதும்போது, மாணவர்கள் மேலும் சில முறை முயற்சி செய்யலாம். ஒருமுறை தோல்வி அடைந்துவிட்டால் மாணவர்கள் யாரும் மனமுடைந்து தவறான முடிவு எடுக்கக் கூடாது’’ என்று அவர் அறிவுரை கூறியுள்ளார்.

தூத்துக்குடி சின்னகண்ணுபுரத்தை சேர்ந்தவர் எஸ்.பச்சைமால் (61). சித்த மருத்துவரான இவர், நேற்று தூத்துக்குடி தூய மரியன்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில் நீட் தேர்வு எழுதினார்.

இதுதொடர்பாக அவர் கூறியதாவது: விவசாய குடும்பத்தில் பிறந்த எனக்கு மருத்துவராக வேண்டும் என்று ஆசை இருந்தது. ஆனால், அப்போது மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ படிப்புக்கு மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். இதனால் என்னால் சேர முடியவில்லை.

அதன்பிறகு பிஎஸ்எம்எஸ் படித்து சித்த மருத்துவர் ஆகிவிட்டேன். ஆனாலும் எம்பிபிஎஸ் படிக்க வேண்டும் என்ற ஆசை தொடர்ந்து எனக்குள் இருந்தது. தற்போது எம்பிபிஎஸ் படிக்க நீட் தேர்வு வந்துள்ளது. இத்தேர்வுக்கு வயது வரம்பு கிடையாது. எனவே, நீட் தேர்வு எழுதினேன். இதற்காக 3 மாதங்களாக படித்து வந்தேன்.

எனது மகன், மருமகள் மருத்துவராக உள்ளனர். எனது குடும்ப பொறுப்புகள் ஓரளவுக்கு சரியாகி விட்டதால், நான் மீண்டும் மாணவனாக மாறி விட்டேன். ஏற்கெனவே 2007 முதல் 2010 வரை சட்டக் கல்லூரிக்கு சென்று சட்டமும் படித்துள்ளேன்.

நீட் தேர்வில் ஒருமுறை தோல்வி அடைந்துவிட்டால் மாணவர்கள் யாரும் மனமுடைந்து தவறான முடிவு எடுக்கக் கூடாது. 61 வயதாகும் நானே நீட் தேர்வு எழுதும்போது, மாணவர்கள் மேலும் சில முறை முயற்சி செய்யலாம்.

சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் படித்த மாணவர்கள் எளிதில் நீட் தேர்வை எழுத முடிகிறது. எனவே, தமிழக அரசு பாடத்திட்டத்தை சிபிஎஸ்இ-க்கு இணையாக மேம்படுத்த வேண்டும். இந்த வயதிலும் நீட் தேர்வு எழுதுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. இருப்பினும் நீட் தேர்வு எழுதுவதற்கு வயது வரம்பை மத்திய அரசு கொண்டு வர வேண்டும். அப்போதுதான் மருத்துவத் துறைக்கு ஒரு மரியாதை இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x