Published : 03 May 2025 05:37 AM
Last Updated : 03 May 2025 05:37 AM
சென்னை: சிபிஎஸ்இ பள்ளிகளில் 5, 8-ம் வகுப்புகளில் கட்டாய தேர்ச்சி முறை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் பரவுவதால், பெற்றோர் குழப்பம் அடைந்துள்ளனர்.
இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, நாடு முழுவதிலும் 1 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கட்டாய தேர்ச்சி வழங்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே, தேசிய கல்விக் கொள்கை-2020-ன்படி, 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்துவதற்கான சட்டத் திருத்தத்தை மத்திய அரசு கடந்த 2019-ல் கொண்டு வந்தது.
அதன்படி, 5, 8-ம் வகுப்பு ஆண்டு இறுதி தேர்வில் தோல்வி அடைபவர்களுக்கு 2 மாதங்களில் உடனடி தேர்வு நடத்த வேண்டும். அதிலும் மாணவர்கள் வெற்றி பெறாவிட்டால், அதே வகுப்பில் தொடர்ந்து படிக்க வேண்டும். இந்த நடைமுறையை அந்தந்த மாநிலங்களே முடிவு செய்து கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்தது. இதற்கு பரவலாக எதிர்ப்பு கிளம்பியதால் இந்த சட்ட திருத்தம் முழுமையாக அமலுக்கு வரவில்லை.
இந்த நிலையில் 5, 8-ம் வகுப்பு ஆண்டு இறுதி தேர்வில் 30 சதவீதத்துக்கும் கீழ் மதிப்பெண் எடுத்தால் தேர்ச்சி வழங்கப்படாது எனவும், சிபிஎஸ்இ பள்ளிகளில் வரும் கல்வி ஆண்டு முதல் இந்த நடைமுறை அமலுக்கு வர உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.
தமிழகத்தில் உள்ள சில சிபிஎஸ்இ பள்ளிகள் இந்த விவரத்தை பெற்றோரிடம் தெரிவித்து, ஒப்புதல் கடிதத்தில் கையெழுத்து பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. சமூக வலைதளங்களில் இந்த தகவல் வேகமாக பரவி வருகிறது. இந்த நடவடிக்கைக்கு கல்வியாளர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தேசிய கல்விக் கொள்கையில் இடம்பெற்றுள்ள அம்சங்களை சிபிஎஸ்இ வாரியம் படிப்படியாக அமல்படுத்தி வருகிறது. எனினும், 5, 8-ம் வகுப்புகளுக்கு கட்டாய தேர்ச்சி முறையை ரத்து செய்வது தொடர்பாக சிபிஎஸ்இ தரப்பில் இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இதனால், பெற்றோர் மத்தியில் குழப்பம் நிலவுகிறது. இதுதொடர்பாக சிபிஎஸ்இ வாரியம் முறையாக அறிவிப்பு வெளியிட வேண்டும் என்று பெற்றோர், கல்வியாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT