Published : 30 Apr 2025 06:51 PM
Last Updated : 30 Apr 2025 06:51 PM

தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து குழந்தை உயிரிழந்த மதுரை மழலையர் பள்ளியின் அங்கீகாரம் ரத்து!

தண்ணீர் தொட்டிக்குள் குழந்தை விழுந்து உயிரிழந்த மழலையர் பள்ளியின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டு, அதற்கான நோட்டீஸ் பள்ளியின் மதில்சுவரில் ஒட்டப்பட்டது.

மதுரை: மதுரையில் தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து 3 வயது குழந்தை உயிரிழந்த தனியார் மழலையர் பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்து மாவட்டக் கல்வி அலுவலர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மதுரை கே.கே.நகரில் மாவட்ட நீதிமன்றத்துக்கு எதிரிலுள்ள விநாயகா நகரில் தனியார் மழலையர் பள்ளி 10 ஆண்டாக செயல்படுகிறது. இங்கு ஃப்ரி கேஜி, எல்கேஜி, யூகேஜி வகுப்புகளும், குழந்தைகள் பராமரிப்பு மையமும் செயல்படுகின்றன. மேலும் தற்போது கோடைகால பயிற்சி வகுப்புகளும் நடந்து வருகின்றன. இப்பள்ளியில் 60 குழந்தைகள் படித்ததில், கோடைகால பயிற்சிக்கு 20 குழந்தைகள் வந்து கொண்டிருந்தனர்.

இதில் யானைமலை ஒத்தக்கடையைச் சேர்ந்த தனியார் பொறியியல் கல்லூரி பேராசிரியர் அமுதன்-சிவஆனந்தி ஆகியோரின் மகள் ஆருத்ரா படித்தார். ஏப். 29-ம் தேதி பள்ளி வளாகத்தில் திறந்திருந்த தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்தார். இதுகுறித்து அண்ணாநகர் போலீஸார் வழக்குப் பதிந்து மழலையர் பள்ளி தாளாளர் திவ்யா, உதவியாளர் வைரமணி ஆகிய 2 பேரை கைது செய்தனர். இதுதொடர்பாக மதுரை கோட்டாட்சியர் ஷாலினி விசாரணை நடத்தி பள்ளிக்கு ‘சீல்’ வைத்தார்.

இதுதொடர்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரேணுகா, மாவட்டக் கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) சுதாகர் ஆகியோரும் விசாரணை நடத்தினர். இதில் மாவட்டக் கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) பி.சுதாகர் விசாரணை நடத்தி அறிக்கையை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர், சென்னையிலுள்ள தனியார் பள்ளிகள் துறை இயக்குநருக்கு அனுப்பியுள்ளார். இந்நிலையில், அரசு விதிகளை மீறி செயல்பட்டதாக தனியார் மழலையர் பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்து இன்று (ஏப்.30) அப்பள்ளியில் நோட்டீஸ் ஒட்டியுள்ளனர்.

இதுகுறித்து மாவட்டக் கல்வி அலுவலர் பி.சுதாகர் கூறுகையில், “மதுரை மாவட்டத்தில் 64 மழலையர் பள்ளிகளில் 25 பள்ளிகள் ஆரம்பம் மற்றும் தொடர் அங்கீகாரம் பெற்றுள்ளன. மீதமுள்ள 39 பள்ளிகளில் 19 பள்ளிகள் செயல்படவில்லை. மீதமுள்ள 20 பள்ளிகள் தொடர் அங்கீகாரத்திற்கு விண்ணப்பிக்காமல் உள்ளனர். இவர்களுக்கு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியுள்ளோம்.

இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகம், தனியார் பள்ளிகள் துறை இயக்குநருக்கும் கடிதம் அனுப்பியுள்ளோம். குழந்தை உயிரிழந்த தனியார் பள்ளி நிர்வாகம் அரசு விதிகளை மீறி செயல்பட்டதால் அங்கீகாரத்தை ரத்து செய்துள்ளோம். அதற்கான நோட்டீஸ் பள்ளி வளாகத்தில் ஒட்டப்பட்டுள்ளது. இந்த செய்தி பள்ளி தாளாளருக்கு பதிவுத் தபாலிலும் அனுப்பியுள்ளோம்,” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x