Published : 30 Apr 2025 05:30 PM
Last Updated : 30 Apr 2025 05:30 PM
சென்னை: இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்குரிய ஹால் டிக்கெட்களை என்டிஏ தற்போது வெளியிட்டுள்ளது.
நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட் - NEET) மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. அதேபோல், ராணுவ நர்சிங் கல்லூரிகளில் பிஎஸ்சி நர்சிங் படிப்புக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வானது தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி 2025-26-ம் கல்வியாண்டு சேர்க்கைக்கான நீட் தேர்வு தமிழ், ஆங்கிலம், இந்தி உட்பட 13 மொழிகளில் மே 4-ம் தேதி நேரடி முறையில் நடைபெறவுள்ளது. இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த பிப்ரவரி 7-ல் தொடங்கி மார்ச் 7-ம் தேதியுடன் நிறைவு பெற்றது. இதற்கு நாடு முழுவதும் சுமார் 21 லட்சம் பேர் வரை விண்ணப்பித்துள்ளனர். இந்நிலையில் தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கான ஹால்டிக்கெட்களை என்டிஏ தற்போது வெளியிட்டுள்ளது.
அவற்றை neet.nta.nic.in என்ற இணையதளத்தில் சென்று மாணவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். கூடுதல் தகவல்களை www.nta.ac.in என்ற என்டிஏ இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். ஏதேனும் சந்தேகம் இருப்பின் 011-4075 9000/69227700 என்ற தொலைபேசி எண் அல்லது neetug2025@nta.ac.in மின்னஞ்சல் வழியாக தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம். தேர்வு முடிவுகள் ஜூன் 14-ம் தேதி வெளியிடப்படும் என்று என்டிஏ வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT