Published : 27 Apr 2025 10:09 AM
Last Updated : 27 Apr 2025 10:09 AM

3 பேருக்கு நன்னடத்தைக்கான விருதுகள் - காயிதே மில்லத் கல்வி அறக்கட்டளை வழங்கல்

படம்: எஸ்.சத்தியசீலன்

காயிதே மில்லத் கல்வி அறக்கட்டளை சார்பில் முதன்முறையாக 3 பேருக்கு நன்னடைத்தைக்கான விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

கடந்த 9 ஆண்டுகளாக காயிதே மில்லத் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளை சார்பில் ‘அரசியல் மற்றும் பொது வாழ்வில் நன்னடத்தைக்கான காயிதே மில்லத் விருதுகள்’ இரண்டு பேருக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் 10வது ஆண்டு விருதுகள் வழங்கும் விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. நிகழ்வில், காஷ்மீர் பயங்கரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

தொடர்ந்து, விருதுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்திந்திய கத்தோலிக் கவுன்சில் தலைவர் ஜான் தயால், மஜ்லீஸ் இ முஷாவரத் முன்னாள் தலைவர் நவைத், சப்தவ் மிஷன் நிறுவனர் விபின் குமார் திரிபாதி ஆகிய மூன்று பேருக்கு சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.என்.பாஷா விருதுகளை வழங்கினார்.

விழாவில் விருந்தினர்கள், விருதாளர்கள் பேசியதாவது: காயிதே மில்லத் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளை பொதுச்செயலாளர் எம்.ஜி.தாவூத் மியாகான்: மத நல்லிணக்கத்தை பேணியதற்காக மூன்று பேருக்கு விருது வழங்கப்பட்டது. வழக்கமாக இரண்டு பேருக்கு விருது வழங்கும் நிலையில் இவர்களில் எவர் ஒருவரையும் எந்த இடத்திலும் விலக்க முடியாத அளவு தகுதிகளை கொண்டிருந்தனர். பிரிவினையில் இருந்து பாதுகாக்க வேண்டியது விருதாளர்களின் பொறுப்பு மட்டுமல்ல, அனைவரது பொறுப்பும் கூட.

உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.என்.பாஷா: நாடாளுமன்ற தேர்தலில் தொகுதிக்கு நேரில் செல்லாமல் தொடர்ந்து வெற்றி பெற்றவர் காயிதே மில்லத். அவரை ஒரு முறை நேரில் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. அவ்வளவு எளிமையான மனிதர். இஸ்லாம் எங்கள் வழி, தமிழ் எங்கள் தாய்மொழி என நாடாளுமன்றத்தில் முழக்கமிட்டவர்.

அனைத்திந்திய கத்தோலிக் கவுன்சில் தலைவர் ஜான் தயால்: ஆர்எஸ்எஸ் அரசமைப்பு சட்டத்துக்கு அச்சுறுத்தலாக இருக்கிறது. இந்துத்துவ இந்தியாவை உருவாக்க துடிக்கிறது. வருணாஸ்ரமத்தை மீண்டும் அமல்படுத்த நினைக்கிறது. பட்டியலின பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு இருந்தாலும், பள்ளிகளில் போதிய கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளின்றி தவித்து வருகின்றனர்.

மஜ்லீஸ் இ முஷாவரத் முன்னாள் தலைவர் நவைத் ஹமித்: முஸ்லீம் பெண்களுக்கு அதிகாரமளிக்காத நிறுவனங்கள், காயிதே மில்லத் கல்வி நிறுவன செயல்பாடுகளை பார்க்க வேண்டும். முஸ்லீம்களுக்கு எதிராக வெறுப்புணர்வு ஐஏஎஸ் அதிகாரிகளின் வாட்ஸ்-ஆப் குழு வரை சென்றுள்ளது.

சப்தவ் மிஷன் நிறுவனர் விபின் குமார் திரிபாதி: காலனிய ஆதிக்கத்துக்கு எதிராக போராடிய நாம், வகுப்பு வாதத்துக்கு எதிராக போராட வேண்டிய சூழலில் இருக்கிறோம். மனித நேயத்துக்கு முன்னுரிமை அளிப்பதோடு, மனிதனை மையமாக வைத்து திட்டங்களை செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் பேசினர்.

நிகழ்வில், சென்னை பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் எஸ்.சாதிக், சிஎஸ்ஐ முன்னாள் பேராயர் தேவ சகாயம், அறக்கட்டளைத் தலைவர் சலாவூதின் முகமது அயூப், பொருளாளர் எஸ்.முஸ்தாக் அகமது, இந்து என்.ராம், காயிதே மில்லத் ஆண்கள் கல்லூரி முதல்வர் எம்.அம்துல் தவாப் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x