Published : 27 Apr 2025 07:42 AM
Last Updated : 27 Apr 2025 07:42 AM
கோவை: போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற குறிப் பெடுத்து படிப்பதும், தன்னம்பிக்கையும் அவசியம் என, கோவையில் நடைபெற்ற ‘உனக்குள் ஓர் ஐஏஎஸ்’ நிகழ்வில் பங்கேற்ற சிறப்பு விருந்தினர்கள் தெரிவித்தனர்.
ஐஏஎஸ் படிக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் உண்டு. ஆனால், அதற்கான அடிப்படைத் தேவையான கல்வித் தகுதி என்ன?, எத்தனை ஆண்டுகள் படிக்க வேண்டும்?, அதிகம் செலவாகுமா? என்ற ஏராளமான கேள்விகளுடன் தயங்கி நிற்பவர்களே அதிகம். இவ்வாறான தயக்கத்தை போக்கி, யுபிஎஸ்சி தேர்வுக்கு படிப்பதற்கான தெளிவை தரும் நோக்கத்தில் கிங் மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி வழங்கும் ‘இந்து தமிழ் திசை - உனக்குள் ஓர் ஐஏஎஸ்’ எனும் வழிகாட்டி நிகழ்ச்சி மாணவர்களுக்காக நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, நடப்பாண்டுக்கான ‘உனக்குள் ஓர் ஐஏஎஸ்’ நிகழ்ச்சி, கோவை இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி அரங்கில் நேற்று நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினரான கோவை மாநகர காவல் ஆணையர் ஏ.சரவணசுந்தர் பேசியதாவது:
யுபிஎஸ்சி தேர்வு எழுத பட்டப் படிப்பு முக்கியமானது. மாணவர்கள் பட்டப் படிப்பில் நல்ல மதிப்பெண் எடுக்க வேண்டும். எந்தவிதமான பட்டப் படிப்பை முடித்தவர்களும் யுபிஎஸ்சி தேர்வுக்கு தயாராகலாம். உங்கள் தன்னம்பிக்கையை தளர விட்டுவிடக் கூடாது. திறமைகளை மூலதனமாக வைத்து தேர்வுக்கு தயாராக வேண்டும். குடும்பத்தினர், உறவினர்கள் உங்களை நம்புவதை விட நீங்கள் ஆழ்மனதில் தன்னம்பிக்கையுடன் இருந்தால்தான் சிவில் சர்வீஸ் தேர்வில் சாதிக்க முடியும்.
நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளை அறிந்திருக்க வேண்டும். எந்தவொரு தலைப்பை தேர்ந்தெடுத்தாலும், விரிவாகப் படித்து அதில் உள்ள 5 முக்கிய அம்சங்களை குறிப்பெழுதி வைத்துக் கொள்ள வேண்டும். இது தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு மிகவும் உதவும். பழைய வினாத்தாள்களை எடுத்து படிக்க வேண்டும். தொடர்ந்து படிப்பில் கவனம் செலுத்தும்போது நீங்கள் தன்னம்பிக்கை மிகுந்தவர்களாக மாறுவீர்கள். இவ்வாறு அவர் பேசினார்.
சிறப்பு விருந்தினரான மாநகராட்சி ஆணையர் மா.சிவகுரு பிரபாகரன் பேசியதாவது: தமிழ்நாடு அரசின் சார்பில், சிவில் சர்வீஸ் தேர்வு எழுதுபவர்களுக்கு ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் பயிற்சிக்கான நிதியுதவி அளிக்கப்படுகிறது. அரசின் நடவடிக்கைகளால் போட்டித் தேர்வுகளில், தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகரித்து வருகிறது. தமிழ்மொழியில் படித்தும் தேர்ச்சி பெறலாம். போட்டித் தேர்வுக்கு உங்களை தயார்படுத்திக் கொள்வது சவாலானதாக இருந்தாலும், அதை நிறைவேற்றும்போது ஒரு சாதனையாக இருக்கும். சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயாராவது என்பது ஒரு நெடுந்தூர பயணமாகும். அதற்கேற்ப உங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். உங்களுக்கு தேவையான அனைத்து ஒத்துழைப்பும் தமிழ்நாடு அரசு சார்பிலும், போட்டித் தேர்வு மையங்கள் சார்பிலும் வழங்கப்படுகிறது. உங்களுக்கு உதவ நிறைய பேர் உள்ளனர். ஆனால், இப்பயணத்தை தொடங்கவும், தொடரவும் உங்களால் மட்டும்தான் முடியும்.
போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்று, உங்களுக்கு கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் நீங்கள் மனதில் நினைத்து வைத்திருப்பதை விட ஆயிரம் மடங்கு பெரியதாக இருக்கும். புதிய தொழில் நுட்பங்கள் வர வர, அதிகாரிகளின் தேவை அதிகம் இருக்கும். ஆரம்ப காலங்களில் நீங்கள் கஷ்டப்பட வேண்டும். பின்னர், அதற்கேற்ப தயாராகிவிடுவீர்கள். போட்டித் தேர்வுக்கு படிக்கும்போது நம்மால் முடியாது என்ற எண்ணம் வரும். இருப்பினும் தன்னம்பிக்கை நமக்கு உதவும். சிறு, சிறு வெற்றிகள் இடையிடையே வந்து நமக்கு உத்வேகத்தை தரும். கல்லூரியில் படிக்கும் காலத்தில் இருந்தே நாம் போட்டித் தேர்வுக்கு தயாராகலாம். தன்னம்பிக்கையை உருவாக்கும் இடமாக கல்லூரியை மாற்றிக் கொள்ளலாம்.
சிவில் சர்வீஸ் தேர்வுக்கான பயிற்சியை தொடங்குவதற்கு இன்றைய நாளை விட சிறந்த நாள் எதுவும் இருக்காது. பாடங்களில் சரியான அளவு வரை படித்தாலே போதுமானது. ஒரு தலைப்பு என்றால் 10 முதல் 15 பாயின்டுகள் குறிப்பெடுத்து தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். படித்து முடித்தவுடன் அனைத்தையும் கீழே விட்டு விடாமல், சல்லடை போல் தேவையான அளவை மேலே வைத்துக்கொண்டு, அதை தொகுத்து வைத்து திரும்பத் திரும்ப படித்து, மீண்டும் மீண்டும் எழுத வேண்டும். பகுப்பாய்வு செய்து சரிபார்ப்புப் பணி செய்வது மிக முக்கியமாகும்.
சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி முதல் வருடம் தேர்ச்சி பெறாமல் இருந்தாலோ, எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்காமல் இருந்தாலோ, அடுத்த வருடம் நிச்சயம் நல்ல மதிப்பெண் பெற வேண்டும் என்பதில் தெளிவாக இருக்க வேண்டும். மதிப்பெண் குறைவுக்கான காரணங்களை ஆராய்ந்து சரி செய்ய வேண்டும். சரியான திட்டமிடலுடன் சென்றால் வெற்றி எளிதாக கிடைக்கும். போட்டித் தேர்வுக்கு தயாராகுபவர்கள் ஒரு வழிகாட்டியுடன் தொடர்பு ஏற்படுத்திக்கொண்டு, அவர்கள் கூறும் வழிமுறைகளை சரியாக பின்பற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
கிங் மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் சத்யஸ்ரீ பூமிநாதன் பேசும்போது, “சிவில் சர்வீஸ் தேர்வை பொறுத்தவரை பெற்றோரின் தியாகத்தால் தான் மாணவ, மாணவிகளால் சாதிக்க முடிகிறது. தொடர் முயற்சியில் தேர்வுக்கு தயாராகும்போது வெற்றி பெறுவோருக்கு பக்க பலமாக இருப்பது அவர்களின் பெற்றோர் தான்.
ஒவ்வொரு நிலையிலும் தாங்கிப் பிடிக்கின்றனர். சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு வெற்றி பெற வேண்டும் என்ற வேட்கை வேண்டும். அறிவை விட ஆளுமை இருந்தால்தான் சாதிக்க முடியும். அந்தவகையில் மாணவர்கள் தேசத்தை நேசித்தல், பிறருக்காக உழைத்தல், தன்னம்பிக்கை, பொதுநலம், தியாகம், போராட்ட குணம், தோல்வியில் துவளாமல் இருத்தல், தனித்துவமாக இருத்தல், விடாமுயற்சி, பொறுமை, தேடல் என பல ஆளுமைகளைக் கொண்டவர்களாக இருக்க வேண்டும்” என்றார்.
‘இந்து தமிழ் திசை’ முதுநிலை உதவி ஆசிரியர் மு.முருகேசன் பேசும்போது, ‘‘பொதுவாக வளர்ச்சி என்பது சமநிலை பெற்றதாக இருக்க வேண்டும். யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற வைப்பது, ஒரு சமுதாயத்தில் மகத்தான மாற்றங்களை உருவாக்க முடியும். யுபிஎஸ்சி தேர்வுக்கு தயாராகுபவர்கள் புத்தகங்களை மட்டும் படித்தால் போதாது. நாளிதழ்களையும் படிக்க வேண்டும். நாளிதழ் வாசிப்பு என்பது அவசியமாகும். யாரிடம் முயற்சியும், பயிற்சியும் இருக்கிறதோ அவர்கள்தான் சாதனையாளர்களாக மாற முடியும். அதிகமான தமிழக மாணவர்கள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்று, அரசு உயர் பதவிகளுக்கு செல்ல வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டே, ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், இத்தகைய முயற்சியை முனைப்போடு முன்னெடுத்து வருகிறது’’ என்றார்.
இந்நிகழ்வில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிறைவாக, மாணவர்களின் கேள்விகளுக்கு சிறப்பு விருந்தினர்கள் பதில் அளித்தனர். நிகழ்ச்சிக்கு முன்னதாக நடத்தப்பட்ட தகுதித் தேர்வில், முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு கிங் மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி சார்பில் சிறப்புக் கட்டணச் சலுகையுடன் கூடிய பயிற்சி வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT