Published : 27 Apr 2025 12:20 AM
Last Updated : 27 Apr 2025 12:20 AM

கோடை விடுமுறையை எவ்வாறு கழிக்க வேண்டும்? - பெற்றோருக்கு பள்ளிக்கல்வி துறை அறிவுறுத்தல்

கோடை விடுமுறை காலங்களில் மாணவர்கள் டிவி, செல்போனில் அதிகமான நேரத்தை செலவிடுவதை பெற்றோர் தவிர்க்க வேண்டுமென பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கான முழு ஆண்டு தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மீண்டும் பள்ளிகள் ஜூன் 2-ம் தேதி முதல் திறக்கப்பட உள்ளன. எனவே, இந்த விடுமுறை நாட்களில் மாணவர்களின் பாதுகாப்பை பெற்றோர் கவனத்தில் கொள்ள வேண்டிய அம்சங்கள் குறித்து பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் ச.கண்ணப்பன் சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். அதன் விவரம் பின்வருமாறு:

மாணவர்கள் விடுமுறை நாட்களில் கடல், ஆறு, ஏரி, குளம் மற்றும் குட்டை போன்ற நீர்நிலைகளில் குளிப்பதற்கு பெற்றோர் அனுமதிக்க வேண்டாம். கோடை வெப்பம் அதிகமாக இருப்பதால் வெளிப்புற விளையாட்டுகளின்போது அதிகளவு தண்ணீரை அருந்தச் செய்யுங்கள். வெயில் அதிகமாக இருக்கும் பகல் நேரத்தில் வெளியே செல்வதையும், விளையாடுவதையும் தவிர்க்கவும். விடுமுறை நாட்களில் சில மாணவர்கள் தங்கள் உடல் மற்றும் மனநலனைப் பாதிக்கும் சவால்களை எதிர்கொள்ள நேரிடும்.

அதன்படி தனிமை உணர்வுகளைத் தடுக்க நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் சேர்ந்து விளையாடுதல், உணவு அருந்துதல், இசை நிகழ்ச்சிகளை கவனித்தல் ஆகியவற்றின் மூலம் சமூக தொடர்புகளை ஊக்குவிக்கவும், மனநலனை பேணவும் முடியும். டிவி, செல்போன் ஆகியவற்றை பார்ப்பதில் அதிகமான நேரத்தை செலவிடுவதை தவிர்க்க அறிவுறுத்த வேண்டும். மாணவர்களின் வளர்ச்சிக்கு சமச்சீரான உணவு அளிப்பது அவசியம். எனவே, பராம்பரிய உணவு வகைகளை தரவேண்டும். கோடை காலத்துக்கு ஏற்ற பழவகைகளை வழங்க வேண்டும்.

இதுதவிர மாணவர்களை அருகில் உள்ள பொது நூலகங்களுக்கு அழைத்துச் சென்று ஒரு மணி நேரமாவது புத்தகங்களைப் படிக்க ஊக்குவிக்கவும் அவர்களின் ஆர்வங்களை பொறுத்து காமிக்ஸ் புத்தகங்கள், பொது அறிவு நூல்கள், சிறார் கதைகள் மற்றும் நீதி நூல்களை படிக்கவும் அறிவுறுத்த வேண்டும். இசை, நடனம், ஓவியம் போன்றவற்றில் ஆர்வமுள்ள மாணவர்களை விடுமுறை நாட்களில் கற்றுக்கொள்ள வாய்ப்பு ஏற்படுத்த வேண்டும். தினமும் இருவேளை பல் துலக்கி, குளித்தல் போன்ற பழக்கங்களை ஊக்குவிக்க வேண்டும். பெரியோரை மதிக்கவும் அவர்களுக்கு உதவி செய்யவும் பழக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x