Published : 25 Apr 2025 06:42 PM
Last Updated : 25 Apr 2025 06:42 PM
ஊட்டி: “தேசிய கல்விக் கொள்கை மூலம் தாய்மொழியில் மருத்துவம், பொறியியல் படிக்கலாம்” என துணைவேந்தர்கள் மாநாட்டில் பேசிய துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர் பெருமிதம் தெரிவித்தார்.
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 4-வது ஆண்டாக பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாடு தொடங்கியது. ஊட்டி ராஜ்பவனில் நடந்த மாநாட்டுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமை வகித்தார். ஆளுநரின் முதன்மை செயலாளர் ஆர்.கிரிலோஸ் குமார் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக துணை குடியிரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர் பங்கேற்று மாநாட்டை தொடங்கி வைத்து பேசியது: ''பஹல்காமில் நடந்த கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலில் தேசத்துடன் இணைந்து எனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
பயங்கரவாதம் என்பது மனிதகுலத்தால் ஒற்றுமையாகக் கையாளப்பட வேண்டிய ஓர் உலகளாவிய அச்சுறுத்தல். பாரதம் உலகின் மிகவும் அமைதியை விரும்பும் நாடு. நமது நாகரிக நெறிமுறைகள் வாசுதேவ குடும்பகத்தை பிரதிபலிக்கின்றன.
பிரதமரின் தலைமைப் பண்பு நமது நாட்டுக்கு உத்தரவாதம். தேசிய நலனே முதன்மையானது. எப்போதும் தேசத்தை முன்னிலைப்படுத்த வேண்டும். இன்று, நமது நாடு மட்டுமல்ல, முழு உலகமும் கடுமையான சவால்களையும், விரைவான தொழில்நுட்ப சீர்குலைவையும் எதிர்கொள்கின்றன. நாம் கண்ட தொழில் துறை புரட்சிகளை விட இது மிகவும் கடுமையானது.
தேசத்தை கட்டமைப்பது கல்வி. சமூகத்தை மாற்றும் வல்லமை கல்விக்கு உண்டு. நாட்டில் 50 மில்லியன் இளைஞர்கள் உள்ளனர். அவர்களுக்கு தரமான கல்வி அளிக்க வேண்டும். தமிழ்நாட்டில் சிறந்த கல்வி நிறுவனங்கள் இருந்தன. காஞ்சிபுரம் கல்வியில் சிறந்து விளங்கியது. மெட்ராஸ் பல்கலைக்கழகம் 1857-ல் இருந்து சிறந்த விளங்கி வருகிறது. நமது கல்வியை மேம்படுத்த வேண்டும்.
குருகுலம் என்ற சிறந்த கல்வி அமைப்பை நாம் கொண்டிருந்தோம். அதன்மூலம் சமூகத்துக்கு சேவையாற்றி வந்தோம். நாட்டில் 11 செம்மொழிகள் உள்ளன. இவை நமது கலாச்சாரம், பண்பாடு, கல்வியை பறைச்சாற்றுகின்றன. கல்வி முக்கியமானது என்பதால் கல்வியில் மாற்றம் செய்ய வேண்டிய தருணம் இது.
இது குறித்து பல வகையான எண்ணங்கள் உள்ளன. அவற்றை நடைமுறைப்படுத்தப்படுவதால், உலகளவில் நமது நாடு வல்லரசாக மாறி வருகிறது.நாம் ஆழமான ஆராய்ச்சியில் ஈடுபட வேண்டும். மேற்கத்திய மற்றும் காலனியாதிக்க மனப்பான்மையை விட்டு, நமது பாரம்பரிய கல்வியை இளைய சமுதாயத்துக்கு கொண்டு செல்ல வேண்டும். தேசிய கல்விக் கொள்கை தேசிய நலனுக்கானது. இதன் மூலம் தாய்மொழியில் மருத்துவம், பொறியியல் மற்றும் உயர் கல்வியை கற்கலாம்'' என்று அவர் பேசினார்.
பாரதம்: துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர் தனது உரையில், நாட்டின் பெயரை இந்தியா என்று குறிப்பிடாமல் பாரத் என்றே குறிப்பிட்டு பேசினார்.
இந்த மாநாட்டில், தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கிருஷ்ணன், திண்டுக்கல் காந்திகிராம் பல்கலைக்கழகம் துணைவேந்தர் பஞ்சநாதன், அவிநாசிலிங்கம் பெண்கள் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பாரதி அரிசங்கர், ரங்கராஜன் டாக்டர் சகுந்தலா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ரஜத் குப்தா, எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முத்தமிழ்செல்வன், சிவ்நாடார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்த பட்டாச்சாரியார், அமித் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ராஜேந்திரன், விநாயகா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சுதிர், நூரூல் இஸ்லாம் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சஜின் நற்குணம், இயக்குநர்கள், டீன்கள், பேராசிரியர், முதல்வர் என 35 பேர் பங்கேற்றனர்.
ஹெலிகாப்டர் பயணம்: ஊட்டியில் நடந்த மாநாட்டில் பங்கேற்க இன்று காலை துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர் தனது மனைவியுடன் ஹெலிகாப்டர் மூலம் ஊட்டி தீட்டுக்கல் தளத்துக்கு வந்தார். அங்கு அவரை ஆளுநர் ஆர்.என்.ரவி, செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், நீலகிரி எம்பி ஆ.ராசா, மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா ஆகியோர் வரவேற்றனர். அங்கிருந்து அவர் கார் மூலம் ராஜ்பவன் வந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT