Published : 23 Apr 2025 07:34 PM
Last Updated : 23 Apr 2025 07:34 PM
விடா முயற்சி வெற்றியை தரும் என நிரூபித்து காட்டியிருக்கிறார் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியைச் சேர்ந்த விவசாயியின் மகனான பெலிக்ஸ் காபிரியேல் மார்க் (27). இவர், யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வில் 6-வது முயற்சியில் வெற்றிபெற்று அகில இந்திய அளவில் 783-வது இடத்தை பிடித்துள்ளார்.
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் 2024-ம் ஆண்டு நடத்தப்பட்ட குடிமைப் பணி தேர்வில், தமிழ்நாட்டை சேர்ந்த 50 பேர் உட்பட அகில இந்திய அளவில் 1,009 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில், சாத்தான்குளம் அருகே உள்ள மேல பனைக்குளம் கிராமத்தை சேர்ந்த விவசாயி தங்கதுரை- விஜயா தம்பதியரின் ஒரே மகனான பெலிக்ஸ் காபிரியேல் மார்க் (27) அகில இந்திய அளவில் 783-வது இடத்தை பிடித்துள்ளார். தனது 6-வது முயற்சியில் இந்த வெற்றியை பெலிக்ஸ் காபிரியேல் மார்க் எட்டியிருக்கிறார்.
விடா முயற்சி இருந்தால் நிச்சயம் வெற்றி பெற முடியும் என சாதித்து காட்டிய அவருக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக பெலிக்ஸ் காபிரியேல் மார்க் 'இந்து தமிழ் திசை' நாளிதழிடம் கூறியதாவது: “நான் 2014-ம் ஆண்டு சாத்தான்குளத்தில் உள்ள ஹென்றி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பை முடித்தேன். சென்னை ஈஸ்வரி பொறியியல் கல்லூரியில் ஆட்டோமொபைல் பொறியியல் படித்தேன். அப்போது பல்கலைக்கழக அளவில் தங்கப்பதக்கம் பெற்றேன்.
பொறியியல் படிப்பை முடித்ததும் 2019 கடைசியில் இருந்தே யுபிஎஸ்சி தேர்வுக்கு தயாராக தொடங்கினேன். வேறு எந்த போட்டி தேர்விலும் கவனம் செலுத்தாமல், வேலைக்கும் செல்லாமல் முழுமையாக யுபிஎஸ்சி தேர்வுக்கு படித்தேன். சென்னையில் உள்ள ஒரு தனியார் பயிற்சி மையத்தில் பகுதி நேரமாக குறிப்பிட்ட சில பயிற்சிகளை மட்டும் பெற்றேன்.
2020-ம் ஆண்டு முதல் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி வருகிறேன். இதுவரை 6 முறை தேர்வு எழுதியுள்ளேன். இதில் 3 முறை முதல்நிலை தேர்விலேயே வெளியேறினேன். 2 முறை நேர்காணல் வரை சென்றேன். கடந்த முறை நேர்காணல் வரை சென்று கட்ஆப் 1 மதிப்பெண் குறைந்ததால் தேர்ச்சி பெற முடியாமல் போனது.
இந்த முறை 6-வது முயற்சியில் வெற்றி பெற்றிருக்கிறேன். அகில இந்திய அளவில் 783-வது ரேங்க் பெற்றுள்ளேன். எனக்கு ஐஏஎஸ் பணி ஒதுக்கீடு கிடைக்க வாய்ப்பில்லை. எந்த துறை பணி கிடைத்தாலும், அதனை ஏற்று முழு அர்ப்பணிப்புடன் செய்ய தயாராக இருக்கிறேன். ஓபிசி பிரிவைச் சேர்ந்தவன் என்பதால், நான் இன்னும் 3 முறை யுபிஎஸ்சி தேர்வு எழுதலாம். எனவே, ஐஏஎஸ் பணி கிடைக்க தொடர்ந்து தேர்வு எழுதுவேன்.
எப்படியும் யுபிஎஸ்சி தேர்ச்சி பெற வேண்டும் என்ற விடா முயற்சியோடு படித்தேன். எனது பெற்றோரும் என்னை ஊக்கப்படுத்தினர். இதனால் தான் வெற்றி பெற முடிந்துள்ளது. என்னை போல கிராமங்களில் இருந்து நிறைய இளைஞர்கள் யுபிஎஸ்சி தேர்வு எழுத முன்வர வேண்டும். எனது கிராமத்தின் வளர்ச்சி, தமிழ்நாட்டின் வளர்ச்சி மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவின் வளர்ச்சிக்கும் பணியாற்ற வேண்டும். எந்த சூழ்நிலையிலும் நேர்மை தவறாமல் பணியாற்ற வேண்டும் என்பது தான் எனது விருப்பம்” என்று அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT