Published : 15 Apr 2025 03:18 PM
Last Updated : 15 Apr 2025 03:18 PM
சென்னை: “திமுக ஆட்சியின் 4 ஆண்டுகளில் மட்டும் புதிதாக 37 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளை திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது,” என்று பேரவையில் உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது அதிமுக உறுப்பினர் கே.செல்லூர் ராஜூ மதுரை விளாங்குடியில் இருபாலருக்கான கலைக் கல்லூரி தொடங்க வேண்டுமென கோரிக்கை விடுத்தார். இதற்கு உயர் கல்வித் துறை அமைச்சர்கோவி.செழியன் பதிலளித்து பேசும்போது, “மதுரை மாவட்டத்தில் தற்போது 3 அரசு மற்றும் 21 அரசு உதவி பெறும் கலை, அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. விளாங்குடி அருகிலேயே அரசுக் கல்லூரிகள் இருப்பதால் அந்த பகுதியில் புதிய கல்லூரி திறக்க தேவை எழவில்லை” என்றார்.
அப்போது, அதிமுக உறுப்பினர் செல்லூர் ராஜூ, “விளாங்குடியில் அரசு கலைக் கல்லூரி திறக்கப்படும் என்று பேரவையில் ஏற்கனவே வாக்குறுதி தரப்பட்டுள்ளது” என்றார். அதற்கு அமைச்சர் கோவி.செழியன், “கடந்த அதிமுக ஆட்சியில் 2011-16-ம் ஆண்டுகளில் 18, பின்பு 2016-21-ம் ஆண்டுகளில் 22 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டன. ஆனால், கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் புதிதாக 37 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளை திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கூட்டுறவுத் துறை மூலமாகவும் தற்போது ஒரு அரசுக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. உறுப்பினர் கடந்த ஆட்சியில் கூட்டுறவுத் துறை அமைச்சராக இருந்த போது புதிய கல்லூரியை திறந்திருக்கலாம்” என்று பதிலளித்தார்.
தொடர்ந்து அதிமுக உறுப்பினர் செல்லூர் ராஜூ, “அரசு நிதியுதவி கல்லூரிகளில் கட்டணம் கூடுதலாக இருக்கிறது. மேலும், பேரவையில் ஏற்கெனவே வாக்குறுதி அளிக்கப்பட்டதால் அமைச்சர் தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்” என்றார். அதற்கு அமைச்சர் கோவி.செழியன், “மாணவர்கள் நலன் கருதி தேவை அறிந்து விளாங்குடியில் உரிய கருத்துரு பெற்று புதிய கலை, அறிவியல் கல்லூரி திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்று பதிலளித்தார். இவ்வாறு அந்த விவாதம் நடைபெற்றது.
இதனிடையே, கேள்வி நேரம் முடிந்தபின்னர் எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதய குமார், அமைச்சர்கள் பொன்முடி, செந்தில் பாலாஜி, கே.என்.நேரு ஆகியோர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவருவது குறித்து பேச முயற்சித்தார். அதற்கு பேரவைத் தலைவர் அனுமதி வழங்காததால் அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT